Monday 31 October 2016

ஈக்யூவை வளர்த்துக்கொள்ளலாம்!

நாம சாதாரணமா எதானாலும் உடனடியாக உணர்ச்சி பூர்வமாக எதிர்வினையாற்றுவோம், இல்லையா? அது இயல்புதான். ஆனா இந்த உணர்ச்சி நம்மை கடத்திக்கொண்டு போய் விடுமா, அல்லது நாம் சமாளித்துக்கொண்டு புத்தி பூர்வமாக செயலாற்றுவோமா என்கறதுதான் முக்கியம்.

அப்படி சமாளிக்க முடியாம எது நம்மை தொடர்ந்து உணர்வுகளிலேயே இருக்க வைக்குமோ அது நமது பலகீனம்; தூண்டு விசை ன்னு தெரிஞ்சுக்கணும். உணர்வு சார் நுண்ணறிவு எதை குறிக்குது? நம்/ மற்றவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதையும் அவற்றை மேலாளுவதையும் குறிக்குது. இதுதான் நாம் யாரிடம் எப்போ எங்கே எப்படி நடந்துக்கிறோம் என்கிற விதத்தை நிர்ணயிக்கிறது; முடிவுகள் எடுப்பதையும் வெற்றி தோல்விகளை அடைவதையும் பாதிக்கிறது.

அறிவு இதில (நேரடியாக) சம்பந்தப்படவில்லை. மிகவும் புத்திசாலியாக இருப்பவர் இதில் திறமையுடன் இருப்பார்ன்னு இல்லை. இது வேற சமாசாரம். அதிக புத்தி இல்லாதவர் இதில் திறமைசாலியாகவும் இருக்கலாம்.

கற்கும் திறன் பிறவியில் ஏறக்குறைய நிர்ணயிக்கப்பட்டு விடும். இதை முழுக்க நாம் பயன்படுத்திக்கொள்கிறோமோ இல்லையோ என்பது சூழ்நிலையில் இருக்கு. சூழ்நிலை நல்லா அமைஞ்சு நல்ல பள்ளி கிடைச்சு வீட்டு/ நிதி ஆதரவும் இருந்தா நல்லா படிச்சு பெரிய பட்டம் வாங்குவார். இதுல குறைவிருந்தா படிப்பு பாதிக்கப்படும். கற்கும் திறன் மூளையில் அடிபடுவதாலோ அல்லது நோயாலோ குறையலாம். மற்றபடி அது அப்படியேத்தான் இருக்கு.


ஆனால் உ.சா.நு (இனிமேல் இதை ஆங்கிலத்தில் ஈக்யூ என்றே சொல்வோம்; அதுவே சுலபமாக இருக்கும்!) அப்படி இல்லை. அதை வெகுவாக மாற்ற முடியும். பிறவியில் சிலர் இதில் விற்பன்னர்களாக இருக்கலாம். பலரும் அப்படி இருக்க மாட்டார்கள். இருந்தாலும் இது குறைவாக இருந்தால் அதை மேம்படுத்த முடியாதுன்னு இல்லை.

Saturday 29 October 2016

உணர்வு சார் நுண்ணறிவு - பாகம் 2


போன பதிவில் கொடுத்த சுட்டிகள் மூலம் அடிப்படையை புரிந்து கொண்டு இருப்பீர்கள்ன்னு நினைக்கிறேன். இருந்தாலும் சில அடிப்படைகளை திருப்பியும் பார்த்துவிட்டு மேலே போகலாம்.
உலகத்தில இருக்கிற மக்களில 36% மக்கள் மட்டுமே தம் உணர்வு நிலையை சரியாக புரிஞ்சு கொண்டு இருக்கிறாங்க. மத்தவங்களுக்கு தான் இருக்கும் நிலை தெரியவில்லை; அவர்களை உணர்வுகள் ஆட்டுவிக்கிறது!

பள்ளிகளில இதெல்லாம் சொல்லித்தரதில்லை. மனப்பாடம் பண்ணு. அப்படியே பரிட்சையில் எழுது; மார்க் வாங்கு. அவ்ளோதான் எதிர்பார்ப்பு. நீ கோபமான பையனா இருந்தா என்ன? இல்லை அடிக்கடி அழற பையனா இருந்தா எனக்கென்ன? பிரச்சினை அதிகமா இருந்தா வீட்டுக்கு கூட்டிப்போக சொல்லிடலாம். அவ்ளோதான். இதனாலேயே நிறைய மார்க் வாங்கின புத்திசாலிப் பசங்களும் வாழ்க்கையில வெற்றி அடையறது நிச்சயமில்லை!

தம் உணர்வைப்பற்றி சொல்லுவோர் ஓராயிரம் விதங்களில் சொல்லுகிறாங்க!
இருந்தாலும் அவை அத்தனையும் அடிப்படையில் ஐந்து மட்டுமே: மகிழ்ச்சி, சோகம், கோபம், பயம், அவமானம். மற்றவை எல்லாம் இவற்றோட கலவைகள்.

சாதாரணமாக யாரும் புத்தி என்ற நிலையிலேயே இருக்கறதில்லை. மனம் எங்கே இருக்கோ அங்கேயே உணர்வுகளும் இருக்கும். நம்மை சதா சர்வ காலமும் மனசு அலைக்கழித்துக்கொண்டுதான் இருக்கு. உணர்வுகளின் சிக்கலான பின்னலில் தவிக்கிறோம். உணர்வுகள் எத்தனை பலமாக இருக்கிறன, எதனுடன் கூட்டு சேர்ந்து இருக்கு என்பது மட்டுமே வித்தியாசப்படும். இவை எல்லாம் நம் கவனத்தில் இருக்கோ இல்லையோ இவை எல்லாம் இயல்பா இருந்து கொண்டுதான் இருக்கு.

சில விஷயங்கள் இந்த உணர்வுகளை தூண்டிவிடுகின்றன. என் அண்ணன் பூனையை பார்த்தால் உடனே அதை விரட்டுவார், வீட்டுக்குள்ளேயே அது வர கூடாது என்பார். என் பால்ய நண்பர்கள் சிலர் நாயை பார்த்தால் உடனே கல்லெடுத்து அதை அடிப்பார்கள். சிலருக்கு சில பெயர்களை சொன்னாலே கோபம் பொத்துக்கொண்டு வரும்!

இப்படி அவரவருக்கு சில விஷயங்கள் இருக்கும். இதெல்லாம் வாசனைகளை சார்ந்தவை. முன் ஜன்மத்தில சில காரணங்களால் சிலது பிடிக்கும் பிடிக்காது; அது அத்தனையும் இப்ப இனம் புரியாம, ஏன்னு தெரியாம வெளிப்பட்டுகொண்டு இருக்கு!

Friday 28 October 2016

தீபாவளி ரிலீஸ்!

ஆன்மீகம்4 டம்மீஸ் தள தொடர் பதிவுகளில உணர்வு சார் நுண்ணறிவு பத்தி ஒரு அறிமுகம் இங்கே துவங்கி கொடுத்து இருந்தேன்.
பின்னால குழந்தைகளுக்கான பதிவு இங்கே கொடுத்து இருந்தேன்.
இவை இரண்டுமே அறிமுகம் + என்ன செய்யலாம் என்கிறது பத்தி ஒரு குறிப்புடன் இருக்கும்.
இப்ப ஆரம்பிக்கப்போற தொடர் பதிவுகள் இது குறித்து என்ன செய்யலாம் என்பதை விரிவா ஆராயறதா இருக்கும்.

ட்ராவிஸ் ப்ராட்பெரி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய எமோஷனல் இண்டெலிஜன்ஸ் 2 என்கிற புத்தகத்தை அடிப்படையா கொண்டு என் பாரதீய சித்தாந்த பார்வையையும் பல இடங்களிலே கலந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாதிக்கு மேலே எழுதியாச்சு. அதனால் தொடர்ந்து இடைஞ்சல் இல்லாமல் வரும் என்கிற நம்பிக்கை இருக்கு!

உணர்வு சார் நுண்ணறிவு குறித்து அறிமுகமே இல்லாதவர்கள் முன் கொடுத்த சுட்டிகள் இரண்டையும் சொடுக்கி பதிவுகளை படித்து கொஞ்சம் முன்னேற்பாடுடன் இருந்தால் நலம்.

நாளை முதல் சந்திப்போம்!