Monday, 6 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 5

24. “அதைப்பத்தி விவாதிக்கலாமா?”

வளர்ந்த குழந்தைகள் தான்தான் சரின்னு நினைக்கிறது வழக்கம்தானே? வழக்கமா நாம அதை அடமடக்குவோம். அப்படி இல்லாம அதை விவாதிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா? இரண்டு பக்கமும் பார்க்கிற ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஆரம்பிச்சு நடத்துங்க. அவங்களோட மன ஓட்டம் நமக்கு புரிய வரும்.

25. “முதல்ல நாம கவனிக்க வேண்டியது எதை?”

மனக்கலக்கம் அடிக்கடி ஒரு சின்ன குன்றை மலைப் போலக்காட்டும். என்ன செய்யலாம். ‘மலை’யை உடைச்சு கையாளக்கூடிய சின்ன சின்ன துண்டுகளா ஆக்கலாம்! பிரச்சினையை பகுதி பகுதியா கையாளுவது கொஞ்சம் சுலபம். இப்படி செய்யும் போது செய்ய வேண்டியது முழுக்க பிரச்சினை இல்லை; சில பகுதிகள்தான்னு தெரிய வரலாம். அது நல்லது.

26. “உனக்கு பிடிச்ச எல்லாரையும் பட்டியல் போடலாமா?”

அனெய்ஸ் நின் என்கிறவர் சொன்னாராம்: “மனக்கலக்கம்தான் அன்பை கொல்லும் பெரிய வியாதி.” அது உண்மைன்னா அதை திருப்பினாலும் உண்மையா இருக்கும். அன்புதான் மனக்கலக்கத்தை கொல்லும் பெரிய சாதனம்! தனக்கு பிடிச்ச எல்லாரையும் பட்டியல் போட்டு அவங்களை ஏன் பிடிக்கும்னும் நினைவுக்கு கொண்டு வந்தா மனக்கலக்கம் காணாமல் போகும்!

27. “ஞாபகம் இருக்கா? ஒரு நாள் …”

திறன் நம்பிக்கையை கொண்டு வரும். நம்பிக்கை வந்தா மனக்கலக்கம் அடங்கும். ஒரு தரம் மனக்கலக்கத்தை குழந்தை வென்றுவிட்டா அதை திருப்பி கவனத்துக்கும் கொண்டு வருவது மனக்கலக்கத்தை ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை தரும். தன் திறனில் நம்பிக்கை வளரும்.

28. “ஏற்கெனவே உன் மேல எனக்கு பெருமை!”

முடிவு எப்படி இருந்தாலும் முயற்சியை நாம பாராட்டினா பல குழந்தைகளுக்கு எல்லாத்தையும் பர்ஃபெக்டா செய்யணும் என்கிற மிகப்பெரிய மன அழுத்தம்- ஸ்ட்ரெஸ் - இல்லாம போகும்.

29. “நாம் கொஞ்சம் உலாவப்போகணும்.”

உடல் பயிற்சி மனக்கலக்கத்தை பல மணி நேரத்துக்கு குறைக்கும். அதிகப்படி சக்தியை உள்வாங்கி செலவிட்டு, சில எண்டார்பின் போன்ற ரசாயனங்களை வெளியிட்டு, மன இறுக்கத்தால் இறுகின தசைகளை தளர்த்தி ‘மூடை’ நன்றாக்கி.... நடக்கும் வாய்ப்பு இல்லைன்னா இருந்த இடத்திலேயே ஸ்கிப்பிங், இல்லை வெறுமனே குதியல் .. ஏதோ ஒரு உடல் பயிற்சி - போதும்!

30. “உன் எண்ணங்கள் ஒவ்வொண்ணா விலகிப்போறதை பார்க்கலாமா?”

கலக்கமான எண்ணங்கள் ஒரு ரயில்வே ட்ரெய்ன் மாதிரி. அனேகமா எல்லா குழந்தைகளும் ட்ரெய்ன் வரதையும் நிக்கிறதையும் அப்புறம் கொஞ்ச நேரத்தில கிளம்பறதையும் பாத்திருப்பாங்க. கலக்கமான எண்ணங்களை ட்ரெய்னா உருவகிச்சா அதை கொஞ்சம் நேரத்தில கிளம்பிப்போக வைக்க முடியும்! கொஞ்சம் ‘கூ ஜிக்புக்’ சத்தம் உதவி பண்ணும்.

Thursday, 2 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 4

19. “இந்த மாதிரி கஷ்டப்படறது நீ மட்டுமில்ல.”

தனக்கு மட்டும் இப்படி நடப்பதா ஒரு கற்பனை இருக்கலாம். அப்படி இல்லை நிறைய பேருக்கு வர பிரச்சினைதான்; அதை வெற்றிகரமா தோற்கடிக்கலாம்னு தெரிஞ்சா ஆறுதலா இருக்கும்.

20. “அப்படி என்னதான் ஆயிடும்ன்னு யோசிச்சு சொல்லேன்l”

இந்த பயிற்சி பெரியவங்களுக்கும் பொருந்தும். என்னதான் ஆயிடும்? ரொம்ப ரொம்ப மோசமா என்ன நடக்க முடியும்? அதை தாங்கிக்க முடியுமா? வேற என்ன விதமான மோசமான விளைவு ஏற்படலாம்? இதை விவாதிச்ச பிறகு.. சரி ரொம்ப நல்லவிதமா எப்படி முடிய வாய்ப்பு இருக்கு? கொஞ்சம் நல்லவிதமா? சரி, இதே போல முன்னே நடந்திருக்கா? அது எப்படி முடிஞ்சது? இப்ப அதே போல முடியணும்ன்னு ஒண்ணுமில்லே. எப்படி முடியும்ன்னு நீ நினைக்கிறே?

21. “சில சமயம் கவலைப்படறது நல்லதுதான்.”

என்னது? ஆமாம். சில சமயம் நல்லதுதான். கண்டுக்காம விடறதை விட கவலைப்பட்டா, அப்ப தீர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கு. இது முழுக்க முழுக்க நடக்கக்கூடாத விஷயம்ன்னு இருக்கக்கூடிய கறபனையை கொஞ்சம் உடைக்கலாம்!

22. “உன் மனசு பப்பிள்ள என்ன எழுதி இருக்கு?”

காமிக்ஸ்ல வர கேரக்டர் என்ன யோசிக்கிறதுன்னு சொல்ல அதன் தலை மேல ஒரு பப்பிள் போட்டு எழுதி யிருப்பாங்க. காமிக்ஸ் படிக்கிற குழந்தைகளுக்கு அது எப்படி கதையை மேலே நகர்த்தும்ன்னு தெரியும். அதனால இப்படி வித்தியாசமா கேள்வி கேட்டா குழந்தை மூணாம் மனுஷனா யோசிக்கும் வாய்ப்பு அதிகம். ஒரு தெளிவு கிடைக்கும்.

23. “ரைட்! அப்ப அதுக்கு கொஞ்சம் ஆதாரம் இருக்கான்னு கண்டுபிடிக்கலாம்.”

பயம், மனக்கலக்கம் ஆதாரத்துடன் இருக்கா இல்லை வெத்து கற்பனையான்னு யோசிக்க வைக்கறதால சரியான சிந்தனையை தூண்டலாம்.

24. “அதைப்பத்தி விவாதிக்கலாமா?”

வளர்ந்த குழந்தைகள் தான்தான் சரின்னு நினைக்கிறது வழக்கம்தானே? வழக்கமா நாம அதை அடமடக்குவோம். அப்படி இல்லாம அதை விவாதிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா? இரண்டு பக்கமும் பார்க்கிற ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஆரம்பிச்சு நடத்துங்க. அவங்களோட மன ஓட்டம் நமக்கு புரிய வரும்.

- ொடும் 

Wednesday, 1 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 3

13. “அதப்பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.”

அறிவே மருந்து. குழந்தைகள் எது அவங்களை பயப்படுத்தறதோ அதைப்பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கட்டும். அதப்பத்தி எவ்ளோ கேள்வி வேணும்னாலும் கேட்கட்டும்.

14. “கொஞ்ச நேரம் எண்ணலாமா?”

இந்த வழிக்கு முன்னேற்பாடு எதுவும் தேவையில்லை. பராக்கு காட்டணும். இந்த ரூமில எத்தனை கருவி நேரம் காட்டறது? கணினி, கடிகாரம், செல் ஃபோன் ந்னு லிஸ்ட் பெரிசாவே போகும்! தெருவை பார்த்துக்கொண்டு இருந்தா எத்தனை பேர் புடவை கட்டிக்கொண்டு போறாங்க, எத்தனை பேர் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு போறாங்க... இது போல பலதையும் யோசிச்சு செயல்படுத்தலாம். இது எல்லாமே மனக்கலக்கத்தை தணிக்கும்.

15. “அதோ அந்த கடிகாரத்தை பாத்துண்டே இரு. பெரிய முள்ளு ரெண்டு தரம் சுத்தி வந்ததும் உடனே சொல்லணும்; சரியா?”

கடிகாரத்தை கவனிக்கறதுல மனக்குவிப்பு போச்சுன்னா மனகலக்கம் குறையும்.

16. “கண்ணை மூடிக்கோ; இதை கற்பனை பண்ணிப்பாரு....…”

கற்பனை செய்து பார்க்கிறது என்கிறது வலியையும் மனக்கலக்கத்தையும் குறைக்கிற வலுவான சாதனம். குழந்தையை கற்பனையில் பாதுகாப்பான, ஹிதமான, சந்தோஷமான இடத்துக்கு கூட்டிபோய் அங்கே சௌக்கியமாக வைக்கலாம். கொஞ்சம் கவனத்துடன் நாம் விவரிக்கிறதை அவங்க கேட்டா மனக்கலக்கத்தின் தாக்கம் கொஞ்சமாவது குறையும்.

17. “எனக்கும் அப்பப்ப பயம், தடுமாற்றம், மனக்கலக்கம் எல்லாம் வரும். அது சந்தோஷமா இருக்காதுதான்!”

பல இடங்களில எம்பதி என்கிற புரிந்துணர்வு ஜெயிக்கும்! கொஞ்சம் வளர்ந்த குழந்தை “அப்படியா? அதை எப்படி ஜெயிச்ச?” ன்னு கேட்கும். சுவையான உரையாடல் தொடர நிறைய வாய்ப்பு இருக்கு!

18. “நம்பளோட ‘சாந்திக்கான வழி முறை’ லிஸ்டை எடுப்போமா? என்ன சொல்லி இருக்குன்னு பார்க்கலாம்.”

மனக்கலக்கம்ன்னா லாஜிக் காணாம போயிடும். காரண காரியம் யோசிக்க மாட்டோம். அதனால இதை சமாளிக்க குழந்தைக்கு பயிற்சி கொடுத்து இந்த பயிற்சிகள் அடங்கிய பட்டியல் ஒண்ணு தயார் செஞ்சு வெச்சுக்கணும். இந்த மாதிரி சந்தர்பங்களில அதை எடுத்து படிச்சு சில பயிற்சிகளை செய்யும் பழக்கம் வந்தா நல்லது.

Tuesday, 28 February 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 2

7. “நீயும் நானும் சேர்ந்தா ஜெயிக்கிற டீம்.”

தனிமை என்கிறது சிறு குழந்தைகளுக்கு மிகவும் கலக்கத்தை தருவது. அதனால நாம எப்பவும் கூடவே இருக்கோம் என்கிறதா அவங்க உண்ரும் படி நடந்துக்கணும். நேரடியா பார்க்க முடியாதப்பக்கூட அவங்க தனியா இல்லைன்னு சொல்லணும்.

8. தனக்குன்னு ஒரு கோஷம் இருக்கட்டும்: “ஜெய் ஹனுமான்!”; “ஜெய் ஸ்ரீராம்”; அல்லது “நா சூப்பர்மேன்!” இது போல ஏதாவது.

குழந்தைகளுக்கு இது தமாஷா கூட இருக்கும்! சினிமாக்களிலோ அல்லது டிவி சீரியல்களிலோ அந்த காலத்து போர் காட்சிகள்ன்னா அதுல படைகள் ஏதாவது கோஷம் போட்டுக்கொண்டே சண்டைக்கு ஓடுவாங்க. ஹர ஹர மஹா தேவ்! அடி கொல்லு! ரீதியில ஏதாவது கோஷம் இருக்கும். இந்த மாதிரி செய்யறது பயத்தால சுரக்கிற ரசாயனத்துக்கு பதில் எண்டார்பின்ஸ் ஐ சுரக்க வைக்கும். அது நல்லது! துணைக்கு யாரும் இல்லைன்னா என் பேரன் ஹனுமான் சாலீஸா சொல்லிக்கொண்டே டாய்லெட்டுக்கு போறான்.

9. “நீ அனுபவிக்கற கலக்கம் ஒரு ராட்சசன்னா அது பார்க்க எப்படி இருக்கும்?”

மனக்கலக்கத்துக்கு ஒரு உருவம் கொடுக்கறதால இனம் புரியாததுக்கு ஒரு உணரக்கூடிய தன்மை கிடைச்சுடும். கலக்க ராக்ஷசனோட அவங்களால பேச முடியும்!

10. “....க்காக காத்துண்டு இருக்கேன். அது வர வரைக்கும்....”

எதிர்காலத்தைப்பத்திய ஒரு பரபரப்பு ஒரு தொத்து வியாதி! அது கலக்கத்தை துரத்திட்டு அதோட இடத்தை பிடிச்சுண்டா நல்லது!

11. “உன் கவலையை இதோ இந்த டப்பால இறக்கி வெச்சுடலாம். உனக்கு பிடிச்ச பாட்டை கேட்டுட்டு/ விளையாட்டை விளையாடிட்டு/ கதையை படிச்சுட்டு அப்புறம் அத திருப்பி எடுத்து வெச்சுக்கலாம்.
மனக்கலக்கத்துக்கு அடிக்கடி ஆளாகிறவர்கள் பல சமயம் கலக்கத்தை ஏற்படுத்துகிற சமாசாரம் முடியற வரை அந்த கலக்கத்தை அனுபவிச்சுக்கொண்டே இருப்பாங்க. அதை தனக்கு பிடிச்ச விஷயத்துக்காக ஒதுக்கி வைக்க கத்துக்கலாம். அப்புறமா வந்து பார்க்கும் போது அதைப்பத்தி வேற கோணம் கிடைக்கலாம். அது நல்லது.

12. அடிக்கடி கேட்டு இருப்போமே? “இதுவும் கடந்து போகும்.” அது வரைக்கும் சௌகரியமா ரிலாக்ஸ்டா இருப்போம். இதையும் சேர்த்துக்கலாம்.

சௌகரியமா இருக்க முடிஞ்சா போதும். ரிலாக்சேஷனை அதுவே கொண்டு வந்துடும். மனக்கலக்கம் இறுக்கத்தை தரா மாதிரி ரிலாக்சேஷன் கலக்கத்தை மனக்கலக்கத்தை குறைக்கும். கொஞ்சம் கனமான போர்வை குழந்தைகளை சௌகரியமா வெச்சுக்கும்ன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. இதமா அழுத்தறதாலயா இருக்கலாம்.

-ொடும்

Monday, 27 February 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 1


உணர்வு சார் நுண்ணறிவு பற்றி படிக்கும்/ யோசிக்கும் போது பெரியவர்களை திருத்த கஷ்டப்படுவதைவிட குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்துவிடலாம் என்று தோன்றும்.
ஆகவே...

https://goo.gl/IQgBbd

எல்லா குழந்தைகளுக்கும் ஏதோ ஒரு ரூபத்தில் இது இருக்கு! மனக்கலக்கம்! பெற்றோர்களாகிய நாம் இதிலிருந்து குழந்தைகளை மறைத்து காக்க விரும்பலாம். ஆனால் இதை கையாள கற்பது அவர்களுக்கு வரும் காலத்தில் இன்னும் நல்லதாக இருக்கும். அதனால பின் வரும் கேள்விகளை பொருந்தும் நேரங்களில் கேட்பதால அவர்கள் மனக்கலக்கத்தை அடையாளம் கண்டு ஒப்புக்கொண்டு அதிலிருந்து விடுபடுதலை அவர்களே கற்பார்கள். இந்த எளிய கேள்விகளை பார்க்கலாமா?


1. “அதை வரைய முடியுமா?”
சில சமயம் குழந்தைகளால அவர்களோட மனக்கலக்கத்துக்கு காரணத்தை வார்த்தைகளில விவரிக்க முடியாது. அப்போ அவர்கள் தம் மனக்கலக்கத்துக்கு ஒரு வடிகாலா அதை ஏதோ ஒரு வகையில் வரைந்தா - அது கிறுக்கலா இருக்கலாம், கலர் பெய்ண்டிங்கா இருக்கலாம்- அது நல்லதா இருக்கும்.

2. “கண்ணா உன்னை எனக்கு ரொம்பபிடிக்கும். நீ என்கிட்ட பாதுகாப்பா இருக்கே!”
இப்படி சொல்லறது வலிமையானது .... குழந்தைகளை நேசிக்கும் ஒத்தர்கிட்ட அவங்க இருக்கறதா அவங்களுக்கு தோணறது அவர்களோட நரம்புகளை இதமா வருடிக்கொடுக்கும். மனக்கலக்கம் அடிக்கடி அவர்களோட மனசும் உடலும் பாதுகாப்பு இல்லாம இருக்கறதா அவர்களுக்கு உணர்த்தலாம்.

3. “நாம ரெண்டு பேரும் ஒரு பலூனை ஊதறதா நடிக்கலாமா? ஒரு பெரிய மூச்சை எடுத்துண்டு அஞ்சு எண்ணற வரைக்கும் நாம ரெண்டு பேரும் சேந்து பலூனை ஊதுவோம்.”

குழந்தை பீதி அடைஞ்சு இருக்கற நேரம் நல்லா மூச்சு எடுத்துவிடுன்னா “முடியலை!” ன்னு பதில் வரும். அதனால அதை ஒரு விளையாட்டா ஆக்கிடலாம். மூணு மூச்சு எடுத்து பலூனை ஊதும் போது ’பர்ர்ர்ர்ர்’ என்கிறது போல விசித்திரமான சத்தங்களையும் எழுப்பலாம். குழந்தையும் அதை இமிடேட் செய்து சிரிக்கும்! மன அழுத்தம் ஓடிப்போயிடும்!

4. “ நா சொல்றா மாதிரியே நீயும் சொல்லணும், சரியா?”
பின்னர் ‘என்னால இது செய்ய முடியும்!’ என்று பத்து முறை பத்து விதங்களில் குரலை உயர்த்தி, தாழ்த்தி, கீச்சுக்குரலில் என்று விதவிதமாக செய்யவும்.

5. “அது ஏன் அப்படி இருக்குன்னு சொல்லேன்?”

கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு பொருத்தமானது. ஏன் என்கிற ஆராய்ச்சி புத்தி பூர்வமானது. மனசை பின்னுக்கு தள்ளி புத்தி முன்னுக்கு வரும்போது உணர்வுகள் மழுங்கும். மேலும் ஏன் என்பதற்கு அவர்கள் விடையையும் கண்டு பிடித்துவிட்டால் மிகவும் நல்லது.

6. “அடுத்து என்ன நடக்கும்?”

மனக்கலக்கம் கிட்டப்பார்வையை உருவாக்கும். தற்போதைய/ அடுத்து வர நிகழ்வைத் தாண்டி யோசிக்க முடியாது. ஒரு நிகழ்வை பத்தி குழந்தைக்கு மனக்கலக்கம் இருந்தா, அதைத்தாண்டி அவர்களை யோசிக்க வைக்கிறது நல்லது. ‘இந்த ஆட்டத்தில் இப்ப தோத்து போயிடுவேன்; அதனால என்ன? அடுத்த முறை முயற்சி செஞ்சு ஜெயிக்கலாம்!” என்கிற ரீதியில் யோசிக்க ஆரம்பித்து விட்டால் நல்லது

- ொடும் 

Friday, 17 February 2017

முடிவுரை - 2

முடிக்கும் முன்னே இந்த உசாநு நமக்கு என்ன செய்யப்போகிறதுன்னு சுருக்கமா பார்க்கலாமா?

1. ஒவ்வொரு நிகழ்வையும் தனித்துவமா இருக்கறதா பார்த்து அதுக்கு தகுந்தாப்போல செயல்படுவோம். டெம்ப்லேட் ரெஸ்பான்ஸ்ன்னு இல்லாம.

2. பொறுப்பு: நம் வாழ்க்கையை நம் பொறுப்புல எடுத்துப்போம். கர்மா தியரி சரியா புரியும். நாம் இது வரை செய்த செயல்களோட விளைவுதான் நம்மோட இப்போதைய நிலமைன்னு புரியும். அதனால ஏதும் தப்பா நடந்தா மத்தவங்களை குத்தம் சொல்ல மாட்டோம். அடுத்த முறை எப்படி வித்தியாசமா இன்னும் பொருத்தமா செய்யலாம்ன்னு யோசிப்போம்.

3. புத்தியைவிட தொலைநோக்குப்பார்வை இன்னும் முக்கியம்ன்னு புரியும். நம்மகிட்ட எல்லாத்துக்கும் விடை இராது. பிரச்சினையை சரியா புரிஞ்சு கொண்டு வழிகளை கற்பனை செய்வோம். தீர்வை கொண்டு வர பல வழிகளை தேடி அடைவோம்.

4. நாளைய சவால்களை எதிர்கொள்ள இன்னைக்கு தயார் செய்யணும்ன்னு புரியும். அதனால புதுசு புதுசா கத்துகிட்டே இருப்போம். வளர்ச்சி தொடர்ந்து இருக்கறதை உறுதி செய்வோம்.

5. எதையும் செய்ய பல வழிகள் இருக்கலாம்; நாம் செய்ததை விட வித்தியாசமா இருக்கலாம்; எப்பவுமே நாம் செய்ததைவிட இன்னும் சிறப்பா செய்ய வழி இருக்கலாம்ன்னு புரியும். அதனால மாற்றுக்கருத்துகள் வந்தா அசர மாட்டோம். அதை ஆராய்ஞ்சு அது இன்னும் நல்லதா தோணினா ஏத்துப்போம்.

6. மத்தவங்களோட கருத்தளவில ஒத்துப்போகலைன்னாலும் அவங்களை விமர்சனம் செய்யணும்ன்னு உந்துதல் இராது. விசித்திரமானதுதான் இந்த உலகம். மத்தவங்களுக்கு மாற்று கருத்து கொண்டிருக்கும் உரிமை உண்டுன்னு தெளிவா இருப்போம்.

7. எப்பவுமே எல்லாமே நல்லபடியா முடிஞ்சுடாது. ஏதேனும் பின்னடைவுகள் இருக்கலாம்; தோல்விகள் இருக்கலாம். மன வருத்தங்கள் ஏற்படலாம். நாம இதால் கொஞ்சம் வருந்தினாலும் நம் உணர்ச்சியை சரியானபடி வெளிப்படுத்திட்டு, இப்ப செய்யக்கூடிய. செய்ய வேண்டியதை செய்ய முனைந்து, அவற்றிலேந்து பாடங்கள் கத்துகிட்டு மேலே நகருவோம்.

8. 100% நேரம் சாந்தமாவே இருக்கறது அரிதுதான். இருந்தாலும் பெரும்பாலான நேரம் சாந்தமாவே இருப்போம். அது இயலும்.

9. நமக்கு வீண் கற்பனைகள் இல்லை. வெற்றிக்கு பொறுமையும் முயற்சியும் தேவைன்னு தெரியும். இருந்தாலும் எல்லம் நல்லா நடக்கும்ன்னு ஒரு நேர்முறை எண்ணத்தோட செயலாற்றுவோம். வாழ்க்கை நம் பக்கம் வீசி எரியற எதையும் தைரியமா எதிர்கொள்ளுவோம். தேடினா வாய்ப்புகள் எப்படியும் கிடைக்கும்ன்னு நம்பிக்கையுடன் இருப்போம்.

10. நாம் பலருடன் இசைவோட இருப்போம். மத்தவங்க நம்மோட இசைவுடன் இருக்க பிரியப்படுவாங்க; அது சுலபமாகவும் இருக்கும். நல்ல உறவுகள் ரொம்ப மெனக்கெடாமலே தானே நிகழும்.

11. மத்தவங்க நம்மை பாராட்டி புகழும்போது அதை சந்தோஷமா ஏத்துப்போம். இருந்தாலும் நம்மை சிலர் வெறுத்தாலும் நாம செய்யறது சரி என்கிற நம்பிக்கை, துணிச்சல் நமக்கு இருக்கும். அவங்க என்ன நினைப்பாங்கன்னு கவலைப்படாம சரின்னு நமக்கு பட்டதை செய்து கொண்டு போவோம்.

12. எப்பவும் மகிழ்ச்சியாவே இருப்போம். மத்தவங்களோட சிரிச்சு ஜோக் அடிச்சு மகிழ்ந்து…. அந்த ஜோக் நம்மைப்பத்தியதாவே இருந்தாக்கூட!


வாழ்த்துகள்!

Thursday, 16 February 2017

முடிவுரை - 1

முடிவுரை:
இந்த உணர்வு சார் நுண்ணறிவு நம் வாழ்கையையே புரட்டிப்போடக்கூடியது. இது மட்டுமே போதும் என்று இல்லை. ஆனால் நாம் நம் வாழ்க்கையை இன்னும் திறம்பட நடத்த இது பேருதவியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
ஒரு சூ மந்த்ராகாளி போட்டு வாழ்க்கையை இது மாற்றிவிடாது. நாம் இதுக்கு நிறையவே உழைக்கணும். ஆனால் இதன் விழிப்புணர்வே நம் வாழ்க்கையை பெருமளவு மாற்றிவிடும். மீதிக்கு உழைத்தே சாதிக்க வேணும். நாம் மாறுவதால் இதை பார்த்து உணர்ந்து மற்றவர்களும் மாறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இதில் இன்னும் ஆராய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. உணர்ச்சி மனசை ஹைஜாக் செய்துவிடாமல் புத்தி நிலைக்கு மாற்றிவிடலாம்தான். ஆனால் அப்புறம்? புத்தி எப்படி வேலை செய்யப்போகிறது?
ஒருவர் நம்மை கண்டபடிக்கு திட்டுகிறார். நாம் உசாநு வை பயன்படுத்தி திருப்பி திட்டாமல் அடிக்காமல் இருக்கிறோம். ஆனால் என்ன செய்யப்போகிறோம்? போகட்டும்ன்னு விட்டுவிடுவோமா? இல்லை திட்டம் போட்டு ஆசாமியை கவிழ்ப்போமா? வேற கெடுதல் செய்வோமா? உண்மையில் இதுதான் நம்மை யார் என்று காட்டப்போகிறது! இதுக்கு எமோஷனல் மெசூரிடி என்கிறார்கள்.
உசாநுவே எல்லாம்ன்னு இல்லை. அது பிரச்சினையை அடையாளம் காட்ட உதவும். எப்படி கையாளுவது என்கிறது புத்தியோட வேலை. அதுதான் ஆராயணும். இங்க ஆளாளுக்கு ஒரு லிமிடேஷன் இருக்கும். ஆனா சுய விழிப்புணர்வு ‘டேய், இதுக்கு நம் அறிவுக்கெட்டிய தீர்வு இல்லை. யாரானா நிபுணரை கேட்கலாம். அதுல அவமானம் ஒண்ணும் இல்லை!” ந்னு சொல்வதால வேற உதவியையும் நாடுவோம். எப்படியும் சில தேர்வுகள் இருக்கும். அதில எதை தேர்ந்தெடுப்போம் என்கிறதுதான் நம்மை 'டிஃபைன்’ செய்யும்! அடையாளம் காட்டும்!
இங்கேதான் மூணாவது காரணியான பர்சனாலிட்டியும் வேலை செய்யும்! இதை மாத்திக்க முடியாதுன்னு ஆரம்பத்திலேயே பார்த்தோம், இல்லையா?

முதலில் உணர்வு சார் நுண்ணறிவை அடைவோம். மேலும் பல விஷயங்களை நாமே கண்டுபிடிக்கலாம். இது வளர்ந்து கொண்டு இருக்கும் ஒரு துறை. உத்திகளோ, பயிற்சிகளோ நிறைய புதுசாக கண்டுபிடிக்கவும், பரப்பவும் வாய்ப்பிருக்கிறது.

அடுத்த பதிவுடன் நிறைவுறும்! அப்பாடா!