Showing posts with label சுய மேலாண்மை:. Show all posts
Showing posts with label சுய மேலாண்மை:. Show all posts

Monday, 26 December 2016

16. நிச்சயமாக வரும் மாறுதல்கள்.

16. நிச்சயமாக வரும் மாறுதல்கள்.
லோகத்தில எது நிச்சயமோ இல்லையோ எல்லாமே எப்பவுமே மாறிக்கிட்டேத்தான் இருக்கு என்கிறதுதான் நிச்சயம். நாம் நாளை படுக்கையை விட்டு எழுதுக்கறதே நிச்சயமில்லை என்கிற போது, நாம் நடத்தற நிறுவனம், வியாபாரம், தொழில் எல்லாம் மாறாம அப்படி நல்லா ஓடிகிட்டு இருக்கும் என்கிறது என்ன நிச்சயம்?
பல விஷயங்கள் நம்ம கட்டுப்பாட்டுல இல்லை. ஏன், நம்ம மனசே நம்ம கட்டுப்பாட்டுல இன்னும் இல்லை. ஒரு நேரம் மாதிரி இன்னொரு நேரத்தில இல்லை.
ஒரு காரியம் தடை இல்லாம நடக்க பல காரணிகள் சரியா இருக்கணும். பெரிய நம்பிக்கை வைச்ச பல விஷயங்கள் மாறாம அப்படியே இருக்கும்ன்னு எதிர்பார்க்க முடியாது. நாம முடிஞ்ச வரைக்கும் இதை எல்லாம் கட்டுப்பாட்டில வெச்சுக்க முயற்சி செய்யலாமே ஒழிய எப்பவும் முழுக்க கட்டுப்பாட்டில வைக்க முடியாது. அதனால ஒரு நாள் இல்லை ஒரு நாள் மாற்றங்கள் வந்தே தீரும்,
அப்படி மாற்றம் வரும் போது நாம அதிர்ச்சிக்கு உள்ளாகாம இருக்க என்ன செய்யணும்? மாற்றத்தை எதிர்பார்க்கணும். என்ன மாற்றம் வரக்கூடும்? அப்படி வந்தா என்ன செய்யணும்? இதை முன் கூட்டியே யோசிச்சு வெச்சா பிரச்சினை இராது. மாற்றம் வரும் போது பெரிய அளவில அதிர்ச்சி ஏற்படாது. அதன் கூடவே வரக்கூடிய பயம் முதலியனவும் வராது. ஏற்கெனெவே என்ன செய்ய முடியும்ன்னு யோசிச்சு வெச்சிருக்கறதால ‘என்ன செய்வோம்?’ ன்னு ஒரு திகைப்பு வராது. அனாவசியமான மன உளைச்சல்களை தவிர்க்கலாம்.

இதற்காக வாரம் ஒரு முறை சில நிமிஷங்கள் ஒதுக்கினாக்கூட போதும். என்னென்ன மாற்றங்கள் வரலாம். அப்படி வந்தா என்ன செய்யலாம். ஒரு பேப்பர்ல எழுதிப்பாருங்க.

Monday, 19 December 2016

11. என்ன செய்ய முடியும்ன்னு பாருங்க!

 11. என்ன செய்ய முடியும்ன்னு பாருங்க!
முடியாததுன்னு எப்பவும் இருக்கவே இருக்கும், அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன் அதிலேயே கவனமா இருக்கணும்?
செய்திப்பத்திரிகையை பாருங்க. முக்காலே மூணு வீசம் ‘கெட்ட’ செய்திகளாவே இருக்கும். இதையே படிச்சுகிட்டு இருந்தா லோகத்திலே நல்லதே நடக்கலைன்னு தோணும். நிஜமா அப்படியா இருக்கு? இது ஒரு மூளைச்சலவை!
வாழ்க்கை நாம் எதிர் பார்க்கிறாப்போல நல்லதா இல்லை. அதுக்கு என்ன செய்ய முடியும்? “உன்னால ஒண்ணும் செய்ய முடியாது. அது உன் தலையெழுத்து. எல்லாம் கர்மாப்படி விதிப்படிதான் நடக்கும் ”
இது பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லுவதுதான். என்னவோ அவங்ககிட்ட ரகசிய டாக்குமெண்ட் இருக்கா மாதிரியும் அதுல அப்படி எழுதி இருக்கா மாதிரியும்!
அவங்களுக்கு தெரியாதது கர்மா/ விதி என்கிறது முன்னாடி செஞ்சதுக்கு மட்டுமில்லே; இப்ப செய்யறதையும் சேர்த்துதான் பலன் கொடுக்கும்.
அவங்க சொல்லாதது ஒவ்வொரு முறையும் நமக்கு சில தேர்வுகள் இருக்கும் என்கிறதுதான். வரது வரும்தான். ஆனா என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு வருகிற விஷயங்களுக்கு தகுந்தாப்போல செயலாற்றிக்கொண்டு போக வேண்டியதுதான். எனக்கு ஏஸ் ஸ்பேட் வரலை; நான் ஆட மாட்டேன்னு எல்லாம் சொல்ல முடியாது. இருந்தாலும் நம் பார்வையில சமாசாரங்க என்ன ஏதுன்னு யோசிக்கலாம்தானே? இது அதால நாம் எப்படி பாதிக்கப்படுவோம் என்பதை மாத்தும். நம்மால் ஒண்ணும் முடியாதுன்னு விட்டுப்போக வேண்டியதில்லை.
அரசு அலுவலகங்களுக்குப்போறோம். ஏதோ காரியம் ஆக வேண்டி இருக்கு. சாதாரணமா அங்கே இருக்கறவர் என்ன சொல்லுவார்? இதை ஏன் செய்ய முடியாதுன்னுதான் விளக்குவார். (சரி, சரி, எல்லா ஆஃபிஸ்லேயும் அப்படி இல்லே. எல்லாரும் அப்படி இல்லே.) ஏன்? வேலை செய்யறதுல இஷ்டமில்லை! அதுக்கு ஏதாவது மோடிவேஷன் வேணும். அது இருந்தா உடனே எப்படி செய்ய முடியும்ன்னு சொல்லிடுவார்.

நம்மை நாமே மோட்டிவேட் பண்ணிக்க வேண்டியதுதான்! ஒரு விஷயம் எதிர்படும்போது அதுல இருக்கற எதிர்மறை சமாசாரங்களை மட்டும் பார்க்காம முழுக்கவே பார்க்க கத்துப்போம்! சிலது மேல நமக்கு கட்டுப்பாடோ ஆளுகையோ இராது. அதுக்காக? மீதி இருக்கறதுல நாம செய்யக்கூடியது என்னன்னு பார்க்கலாம்.

Friday, 16 December 2016

10. ’நல்லா’ தூங்குங்க!

 10. ’நல்லா’ தூங்குங்க!
சுய மேலாண்மைக்கு தேவையானது பொறுமை, நெகிழ்ந்து கொடுப்பது, விழிப்புடன் இருப்பது. இது எல்லாம் சரியான தூக்கம் இல்லாம போச்சுன்னா காணாமப்போகும். இவ்வளவு நேரம் என்கிறது மட்டுமில்லை. நல்லா ஆழ்ந்து தூங்கறோமா?

ஆழ் தூக்கத்திலதான் நம்ம மூளை தன்னை டீஃப்ராக் (defrag) செஞ்சுக்கும்! அன்னய நடப்பில கிடைச்ச தேவையான நினைவுகளை வெச்சுக்கொண்டு வேண்டாததை நீக்கி… ந்யூரோ கெமிக்கல்ஸ் எல்லாம் ரீ ஜெனரேட் ஆகி… காலை எழுந்துக்கும் போது ஃப்ரெஷா எழுந்துப்போம். சரியான தூக்கம் இல்லைன்னா எழுந்துக்கும்போதே ஒரு எரிச்சல், அயர்வு…. ஏண்டா விடிஞ்சதுன்னு ஒரு உணர்வு!

சில குறிப்புகள்: மதிய உணவுக்கு முன்னால குறைஞ்சது 20 நிமிட சூரிய ஒளி நம் கண்களில படட்டும். (கூலிங் க்ளாஸ் போட்டுண்டு பார்க்கிறதெல்லாம் கணக்கில வராது!) அப்பத்தான் நம்மோட உள்ளே இருக்கிற கடிகாரம் தன் நேரத்தை சரி செஞ்சுக்கும்!
தூங்கும் முன்னே 2 மணி நேரமாவது கணினி திரையை பாராம, செல்போன்ல நோண்டாம இருக்கணும்.

பெட்ல படுத்துண்டு டிவில அழுவாச்சி சீரியல் எல்லாம் பார்க்ககூடாது. பெட் படுத்துத்தூங்க மட்டுமே!

கஃபீன்! காலையில எட்டு மணிக்கு ஒரு காபி குடிக்கிறோம். ஆறு மணி நேரத்தில உடம்பில இருக்கற கஃபீன்ல பாதி உடம்பால வெளியேற்றப்படும். அடுத்த ஆறு மணி நேரத்தில? அதுல பாதி வெளியே போகும், அவ்ளோதான். அதாவது காலை 8 மணிக்கு குடிச்ச காபில இருக்கற கஃபீன்ல கால்வாசி ராத்திரி எட்டு மணிக்கு இருக்கும்! கபீனுக்கும் தூக்கத்துக்கு எட்டாம் பொருத்தம்! அதனால மதியத்துக்கு மேலேயாவது தவிர்க்கவும். டீ பரவாயில்லை.

இதுல காபி குடிச்சுட்டு உடனே தூங்கற என் தம்பி எல்லாம் எக்செப்ஷன். ஒவ்வொத்தரும் ஒரு மாதிரி, இல்லையா?

Thursday, 15 December 2016

9. கனவு காணுங்கள்!

 9. கனவு காணுங்கள்!

சுய மேலாண்மையை கத்துக்கறதுக்கு நிறைய பயிற்சி தேவை. ஆனா மிகவும் கஷ்டமான, உங்களால சமாளிக்க முடியாத நிலை எல்லாம் அடிக்கடி வரதில்லை. எப்போதாவதுதானே வரது? அதுக்குத்தேவையானதை எப்படி பயிற்சி செய்ய முடியும். சிரமம்தான்….. கனவு காணத்தெரியாத வரை!

நாம கண்ணால பார்க்கிறதுக்கும் மனசில கற்பனை செஞ்சு பார்க்கிறதுக்கும் மூளைக்கு வித்தியாசம் காணாது! எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்க்கிறப்ப இது புரியும். அருமையான சூரிய உதயம் ஒண்ணை பார்க்கும் போது இருக்கும் நிலையும் அதை கற்பனை செய்யும் போது இருக்கும் நிலையும் ஒண்ணாவே இருக்கும்! மூளையின் அதே பகுதிகளிலதான் செயல் தோணும்.

எது நம்மை அதிகம் செயலிழக்க வைக்குது? அதிக துன்பம் தருது? அதை ஒரு நாடகமா கற்பனை செய்து பாருங்க.


இதுக்கு அதிகம் சந்தடி இல்லாத அமைதியான இடம் நல்லது. ம்ம்ம்ம் படுத்த பிறகு தூங்கும் முன்னேன்னு வெச்சுக்கலாமா? சௌகரியமா படுத்துக்கொண்டு நல்லா மூச்சு இழுத்துவிட்டு கற்பனையை ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில மேலதிகாரிகிட்ட பயப்படறோமா? ரைட்! 

இப்ப கற்பனையை ஆரம்பிக்கிறோம். வேலையை முடிச்சுக்கொண்டு பேப்பரெல்லாம் எடுத்துக்கொண்டு அவர் அறைக்குப்போறோம். பேப்பரை சரியா படிக்காம அவர் ‘காச் மூச்’ன்னு கத்தறார். நாம அமைதியா ‘இல்லை சார்’ ந்னு ஆரம்பிச்சு விளக்கறோம். அவரும் அதை ஏத்துக்கறார். ‘குட்ஜாப்’ ந்னு பாராட்டறார். நாம புன்னகையோட சந்தோஷமா திரும்பி வரோம். அஹ! புரியறதில்லையா? கனவு காணச்சொன்ன கலாம் வாழ்க!

Wednesday, 14 December 2016

8. எண்ணங்கள்

8. எண்ணங்கள் 
ஆராய்ச்சிகள் சொல்லறது என்னன்னா ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 எண்ணங்கள் வந்து போறது! ஆச்சரியமா இருக்கா? அப்படி தோணலையே? எப்படி?
மூச்சு விடறது எப்பவுமே நடக்கறது; ஆனா அது எவ்வளோ தரம்ன்னு நம்ம கவனத்திலேயா இருக்கு? அது போலத்தான். தேவையானா நாம மூச்சு விடறதை கவனிக்கவும் முடியும்; எண்ணம் வந்து போறதை கவனிக்கவும் முடியும்! அதை கவனிக்கறதில்லே என்கிறதால் அது நினைவில இல்லாம போகிறது. ஆனா ஒவ்வொரு எண்ணமும் அதோட ரசாயன விளைவுகளை உண்டு செய்யவே செய்யும்! இது நம் உடம்பு எப்படி இருக்கு, மனசு எப்படி இருக்கு என்கிறதை நிர்ணயம் செய்யும். உண்டாகிற கெமிகல்களோட விளைவு நேரம் குறைவானதுதான். அதனால அடுத்த எண்ணம் அதோட விளைவை உண்டாக்கும்! அப்ப இருந்த விளைவா அது இருக்கலாம் அல்லது வேற விளைவாவும் இருக்கலாம். இப்படி மாறி மாறி நடக்கலாம்.
இந்த எண்ணங்கள் எல்லாத்தையும் மானிட்டர் பண்ண முடியுமா? ஒரு நாளைக்கு சுமார் 50000? சான்ஸே இல்லை! பின்னே என்ன செய்யறது?
அடிக்கடி நமக்கு நாமே பேசிக்கறோம். அது வெளியே - வெளியே என்ன? நமக்கே! - தெரியறதில்லை. வெளியே தெரியற மாதிரி தனக்குத்தானே பேசிக்கறவங்களை பைத்தியம்ன்னு சொல்வாங்க. ஆனா நாமோ ரகசியமா பைத்தியமா இருக்கோம். கிடக்கட்டும்!
பல வித எண்ணங்கள் வந்துபோறது. சிலது எதிர்மறையா இருக்கும். சிலது நேர் முறையா இருக்கும். சில சமயம் “ச்சூ! சும்மா இரு, இப்படி செய்ய வேணாம்” ந்னு சொல்லிப்போம். ஒரு வேலை நல்லா செஞ்சுட்டா “சபாஷ்டா கண்ணா!” ந்னு சொல்லிப்போம். ”நீ செஞ்சது முட்டாள்தனமான காரியம்!” ந்னு கடிந்துப்போம். “அச்சோ! இப்படி ஆயிடுத்தே!” ந்னு வருத்தப்படுவோம். இந்த மாதிரியான எண்ணங்கள்தான் கிளைவிட்டு வளர்ந்து உணர்ச்சிகளை மேலுக்கு கொண்டு வந்து எல்லா ரகளையும் செய்யும்! அதே போல உணர்ச்சிகளை அமுக்கி அல்லது வடிகால் போட்டு மடை மாற்றவும் செய்யும்.
ஆகவே இது மேல நமக்கு மேலாண்மை வந்தா போதும். இயல்பாவே வர இந்த மாதிரி பேச்சுக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நமக்கு நாமே திட்டத்துல நாமே நம்மோட கவனத்தோடவே பேச ஆரம்பிக்கலாம். “விட்றா, இந்தப்பய ஏதோ உளறிண்டு இருக்கான்!” , “இவன் சொல்லறதுலே ஏதோ அர்த்தம் இருக்கும் போலிருக்கு. யோசிக்கலாம்”; “இப்போதைக்கு எதிர்வினை வேணாம்!” - இந்த ரீதியில நமக்கு நாமே நேர் முறையா பேசிக்க ஆரம்பிச்சா நம் உணர்ச்சிகளை ஒரு கட்டுக்கு கொண்டுவர நம்மால முடியும்! நாளடைவில நமக்கு நாமே பேசிக்கறதும் நம்ம கவனத்துக்கு வந்துடும்!
சில வழக்கமா வர பேச்சுக்கள் இப்படி இருக்கலாம். அவற்றை மாத்திக்கொண்டா நல்லது.
நீதிபதி மாதிரி ஜட்ஜ்மெண்ட் கொடுத்துக்கறது ஒண்ணு. ‘நான் ஒரு முட்டாள்!’ என்கிற மாதிரி. இதை சரியா சொல்ல பழகணும். “நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்”
இன்னொன்னு: ‘எப்பவுமே இப்படி செய்வேன்’, 'எப்பவும் இப்படி செய்ய மாட்டேன்!’ - இதை இந்த ஒரு முறை இப்படி செய்வேன் அல்லது சில சமயம் இப்படி செய்வேன்னு மாத்திக்கலாம். நம்மோட செயல்கள் ஒவ்வொண்ணும் அந்தந்த நிலைக்கு தகுந்தபடி தனித்துவமானது. தப்பா நடக்கறதை எப்பவுமே இப்படி தப்பா செய்யறேன்னு நினைச்சுக்கொண்டு நம்மை நாமே சாட்டையால அடிச்சுக்கக்கூடாது!


இன்னொருத்தரை மேல பழியை போடறதும் எதிர்மறையா நமக்கு நாமே பேசிக்கிற பேச்சும் கை கோர்ந்துண்டு போகும். ‘இது எல்லாம் நான் செஞ்ச தப்பு’ என்கிறது முக்காலே மூணுவாசி முறை சரியா இருக்காது, நாமும் மத்தவரும் சேர்ந்தே ஒரு தப்பான காரியத்துக்கு பொறுப்பு. யாருக்கு எவ்ளோ பொறுப்பு என்கிறது வேணா மாறலாம். நாம செஞ்ச தப்புக்கு நாம் பொறுப்பு ஏத்தா போதும். எல்லாத்தையும் நம்ம தலையில போட்டுக்கொண்டா அளவுக்கு மேல நம்மை நாமே இழிவு படுத்திக்கிறோம். அதே போல எல்லாத்தையும் மத்தவங்க தலை மேல போடாம நம்ம பங்கை ஏத்துக்கணும்! அது மிக உயர்ந்த குணம்.

Tuesday, 13 December 2016

7. இன்னும் கொஞ்சம் புன்னகையும் சிரிப்பும் வேணும்!

7. இன்னும் கொஞ்சம் புன்னகையும் சிரிப்பும் வேணும்!
சிரிக்கும் போது புன்னகை பூக்கும் போதும் உடம்பு மூளைக்கு நாம சந்தோஷமா இருக்கோம்ன்னு ஒரு ஃபீட்பேக் செய்தி அனுப்புது! ம்ம்ம்ம்ம்? அதனால? அதனால் எப்போ சந்தோஷமா இல்லையோ அப்ப கொஞ்சம் போலியாக்கூட சிரிக்கவோ புன்னகைக்கவோ செய்தா அது வருத்தத்தை போக்கடிக்க உதவும்.

என்கொய்ரி கவுண்டர், கஸ்டமர் சர்வீஸ்ல அனுபவப்பட்ட நபர்களை கவனிச்சு இருக்கீங்களா? எப்பவும் நான் இந்த விசாரணை கவுண்டர் ஆசாமி மேல பரிதாபப்பட்டது உண்டு! எத்தனை எத்தனை முட்டாள்தனமாக கேள்விகள். தினசரி! ஷிப்ட் ஆரம்பிச்ச முதல் கடைசி வரை!

இருந்தாலும் அனுபவப்பட்டவங்க முகத்தில் எப்பவும் ஒரு சிரிப்பை. புன்னகையை பார்க்கலாம்! அவங்களா வரவழைச்சுக்கறது நாளடைவில முகத்தில ஒட்டிக்கும்! மனசிலேயும்!

தேவையானா கண்ணாடி முன்னாடி நின்னு பயிற்சி செய்யுங்க. உதடுகள் பிரிந்து வாய் அகன்று உம்ம்ம்ம் அப்படி இல்லே …. கண்கள் சிரிக்கணும்! அதுக்கு கண்ணோரம் சுருங்கணும். கன்னம் கொஞ்சம் மேலே போகணும்! ஆங்! அப்படித்தான்!

ஃப்ரான்ஸ்ல சிலர் ஆராய்ச்சி செஞ்சாங்க. ஒரு தொகுதி மக்கள் வாயில குறுக்கே ஒரு பென்சிலை வெச்சுகொண்டு பற்களால கவ்விக்கொண்டு காமிக்ஸ் படிக்கணும். இன்னொரு தொகுதி மக்கள் வாய் குறுக்கே பென்சிலை வெச்சுகொண்டு உதடுகளால கவ்விக்கொண்டு காமிக்ஸ் படிக்கணும். பற்களால கவ்விக்கொண்டா எந்த தசைகள் புன்னகை செய்யறப்ப வேலை செய்யுமோ அதெல்லாம் வேலை செய்யும். உதடுகளால கவ்விக்கொண்டா அப்படி நடக்காது. பற்களால கவ்விக்கொண்டு படிச்சவங்களுக்கு காமிக்ஸ் படிக்க இன்னும் ஜாலியாவும் சிரிப்பாவும் இருந்ததாம்! இதான் மூளைக்கு தசைகள் தர ஃபீட்பேக்!


மோசமான மூட், ஆனா உங்களால அப்படி வலுக்கட்டாயமான சிரிப்பை உருவாக்க முடியலியா? சரி சரி, எல்லாரும் எப்பவம் செய்ய முடியாதுதான். ரைட். நீங்க போய் ஏதாவது ஒரு நகைச்சுவை நாவல் படிங்க அல்லது படம் பாருங்க. ஆரம்பத்துல கொஞ்சம் பொருந்தாம இருக்கறதா தோணினாலும் கொஞ்ச நேரத்தில அது உங்களை ஆட்கொண்டுவிடும். மூட் மாறிப்போகும்! இப்ப ஏன் மோசமான மூட் வந்தது? அது சொல்ற சேதி என்னன்னு யோசிச்சு பாருங்க! இதை மறக்க வேணாம்.

Monday, 12 December 2016

6. ஆதர்ச ஆசாமியிடம் பேசுங்கள்.

6. ஆதர்ச ஆசாமியிடம் பேசுங்கள்.

சிலர் இயற்கையிலேயே நல்ல ஈக்யூ திறமையோடவே இருப்பாங்க.தன்னைத்தானே கவனிச்சு, திருத்தி, பிறருடன் பழகும்போது அவங்களை சரியா புரிஞ்சு, அவங்களுக்கு ஏத்தாப்போல நடந்து…. வரம்!

சினிமா ஹீரோ ஹீரோயினை பாலோ செய்யறதை விட்டுட்டு இந்த மாதிரியான நல்ல ஒரு ஆசாமியை கண்டு பிடிங்க. அவரோட பேசுங்க. இவங்களுக்கு அனேகமா தான் எதை எப்படி நல்லா செய்யறோம்ன்னு தெரிஞ்சு இருக்கும். அவங்ககிட்ட கேட்டு கத்துக்குங்க.

எல்லாமே பிறவில கிடைச்சுடாது, முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் இல்லையா? கொஞ்சம் மெய் வருந்துங்க!

Friday, 9 December 2016

5. ஆறப்போடு.

ஆறப்போடு.


வார் அண்ட் பீஸ் என்கிற தன் புத்தகத்தில் லியோ டால்ஸ்டாய் எழுதுகிறார்: 

போர் வீரர்களிலேயேவலிமை மிக்க இருவர் காலமும் பொறுமையும். ஏனெனில் அவர்கள் நிலையை மாற்றிவிடுவார்கள், வலியை குறைப்பார்கள், தெளிவை கொடுப்பார்கள். சில சமயம் நாம் மிகவும் துன்பப்படுகிறோம். திருப்தி இல்லாமல், வலியுடன் கலக்கத்துடன்…. இதை தாங்க முடியாமல் தவிர்க்கவே எதையாவது செய்து விடுகிறோம். ஒரு வேளை இதை நாம் ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு வாரம்…. தள்ளிப்போட முடிந்தால் நிலை நம் புரிதலுக்கும் கட்டுக்குள்ளும் வந்து விடக்கூடும். உணர்ச்சிகளுக்கும் தடை போடப்படும். 

சொல்ல எளியதுதான். ஆனாலும் பல சமயத்தில் இது மட்டுமே போதுமானதாக இருக்கும்.

Thursday, 8 December 2016

4.பத்து வரை எண்ணுங்க!

4.பத்து வரை எண்ணுங்க!

இந்த உத்தி ரொம்ப பழசு. இருந்தாலும் வேலை செய்யக்கூடியது. கொஞ்ச நேரம் கொடுத்தா மனசு ஆளுகையிலேந்து புத்தி ஆளுகைக்கு போயிடலாம் என்கிற தாத்பர்யத்தில வந்தது. அது சுமார் 6 செகண்ட். ஒன் தவுசண்ட் ஒன் ந்னு சொன்னாத்தான் ஒரு செகண்ட்! அதனால மெதுவா பத்து வரை எண்ணுன்னு சொல்லி இருக்காங்க.

இதையும் ஆழ்ந்த மூச்சையும் சேத்து நல்ல பலனளிக்கக்கூடிய வழியை உருவாக்கிக்கலாம். ஆழ்ந்த மூச்சு ஒண்ணு எடுத்து விட்டு ஒண்ணுன்னு எண்ணலாம். இதே போல பத்து வரைக்கும். பத்து வரை எண்ண நேரம் இல்லைன்னாலும் பரவாயில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு முயற்சி செய்யறோமோ அவ்வளவு பலன் கிடைக்கும்.மீட்டிங் போல சில நேரங்களில இது முடியாம போகலாம். அதுக்குன்னு சில உத்திகள் வெச்சிருக்காங்க. எப்பவும் தண்ணீர் ஒரு டம்ப்ளர் வெச்சிருப்பாங்க. பிரச்சினை வரும் போது அதை எடுத்து மெதுவா குடிப்பாங்க. சாதாரணமா இந்த சமயத்தில பதில் பேசும்படி எதிர்பார்ப்பு இல்லை, ஒரு இடைவெளி கொடுப்பது வழக்கம் என்கிறதால சமாளிச்சுடலாம்.


இப்படி இடைவெளி இல்லாம பட் பட்ன்னு ’பதிலடி’ கொடுப்பதாலத்தான் நாம் பின்னால வருத்தப்படக்கூடியதை சொல்லிடுவோம். ஜாக்கிரதையா இருக்கணும்.

Wednesday, 7 December 2016

3. உங்கள் இலக்குகள் என்ன? வெளிப்படையா அறிவியுங்க.

3. உங்கள் இலக்குகள் என்ன? வெளிப்படையா அறிவியுங்க.
சிலர் இருக்கிறாங்க. இன்னது இப்படி செய்ய வேண்டும்ன்னு முடிவெடுக்கறாங்க. செய்யறாங்க! ரொம்ப சிம்பிள் இல்லே?

ஆனா நாம எல்லாரும் அப்படி இல்லே. வீராவேசத்துடம் ஆரம்பிப்போம். போகப்போக உற்சாகம் குறையும். நாளாவட்டத்தில விட்டுடுவோம். இவங்களுக்கு நல்ல ஒரு உத்தி என்னன்னா செய்யப்போறதை வெளியே எல்லார்கிட்டேயும் சொல்லறதுதான். செயல் குறைவானா ‘அட! மத்தவங்களுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க’ ன்னு ஒரு வெட்கம் வந்து தடை போடும். இல்லைனாலும் ஒரு சிலராவது “ஏம்பா, இன்ன வேலை எப்படி போகுது?” ந்னு கேப்பாங்க. அல்லது மாறா நடக்கும்போது “இப்படி ஒரு இலக்கு வெச்சுகிட்டு இப்படி செய்யறியே”ன்னு இடிந்துரைப்பாங்க. ஆக சோம்பேறித்தனமா இல்லாம நிர்ணயிச்சதை செய்ய ஒரு உபாயம் கிடைக்கும்!

காலை அஞ்சு மணிக்கு உடற்பயிற்சியா நடைக்கோ ஓட்டத்துக்கோ போகணும்ன்னா யாரேனும் அந்த நேரத்துக்கு வந்து ‘வாடா போலாம்’ என்கிறது ஒரு நல்ல தூண்டுதல். ஒரு காலகட்டத்துல என் உதவி சர்ஜன் “என்னை தினமும் நடை பயிற்சி செஞ்சயான்னு விசாரி. இல்லைன்னா திட்டு!” ந்னு சொல்லி இருந்தார்! இப்படி நம் மேலே அக்கறை இருக்கறவங்களா பாத்து அவங்களை இன்வால்வ் பண்ணனும். உன்னால முடியாதுன்னு உற்சாகத்தை குறைக்கிறவங்ககிட்டே இல்லே!

ஒத்தர் எப்பவும் தான் இன்ன தேதிக்கு முன்னே வேலையை முடிச்சுடுவேன்ன்னு பெட் கட்டுவாராம். புரியுதில்லே?


உதவி சர்ஜன் நடந்தாரா ந்னு கேக்கறீங்களா? கொஞ்ச நாள் போனதும் அந்த வேண்டுகோளை வாபஸ் வாங்கிட்டார்!

Tuesday, 6 December 2016

2. பட்டியல் தயார் செய்யுங்க!

2. பட்டியல் தயார் செய்யுங்க!

நமக்கு கவனத்திலே இருக்கோ இல்லையோ பல சமயம் மனசு ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு போகும்; புத்தி “டேய்! வேணாம் இது தப்பு!” ந்னு சொல்லும். டக் அஃப் வார் தான்! இது நம்ம கவனத்துக்கு வந்தா பட்டியல் போட நேரம் வந்தாச்சு! ஏன் செய்யலாம், ஏன் செய்யக்கூடாதுன்னு வாதங்கள் இருக்குமில்லையா? அதை எல்லாம் பட்டியல் போடுங்க. அதில எது உணர்ச்சிகளால சொல்லப்படுது, எது புத்தியால சொல்லப்படுதுன்னு மார்க் செய்யுங்க. பிறகு உட்கார்ந்து யோசிச்சு தெளிவா முடிவெடுங்க.


எப்பவுமே புத்தி சொல்றபடித்தான் முடிவு எடுக்கணும்னு ஒண்ணுமில்லை. பல உயர்ந்த செயல்கள் உணர்ச்சியால் தூண்டப்பட்டு செய்யப்படுபவைதான். உணர்ச்சிகள் நம்மை ஹைஜாக் செஞ்சு, ஆராயாம செயல்படக்கூடாது என்கிறதுதான் முக்கியம். நமக்கு இயந்திர மனிதன் மாதிரியான உணர்ச்சி இல்லாத வாழ்வும் வேண்டாம்; அதே சமயம் உணர்ச்சிகளால் எப்போதும் ஆளப்பட்டு வாழவும் வேண்டாம்.

Monday, 5 December 2016

1. மூச்சுப்பயிற்சி.

அடுத்ததா நாம் பார்க்கபோகிறது இதற்கான பயிற்சிகள். நாம தியரியா படிச்சுட்டுப்போகாம வாழ்க்கையில செயலுக்கு கொண்டு வர வேண்டியன. இந்த எளிய பயிற்சிகளை பார்க்கலாமா? இதனால வாழ்க்கை நாளைக்கே ரோஜா மலர்க்ள் தூவின பாதை ஆகிடப்போறதில்லே! இருந்தாலும் காரை எப்படி ஓட்டறதுன்னு பயிற்சி எடுத்தாச்சு; இனி பழகப்பழக திறமை வந்துடும் என்கிறது போல இது.

1. மூச்சுப்பயிற்சி.
ஆங்கிலம் தெரிந்தவர்கள நேரடியாக படித்துவிடலாம். மற்றவர்கள் சிவப்பு எழுத்தில் குறித்த இடத்தை பார்த்துகொள்ளுங்கள.

இந்த வரைபடம் மூச்சு உள்ளே இழுத்துவிடுவதை குறிக்கிறது. நடுவில் உள்ள நீல நிறக்
கோடு மேலே செல்வது மூச்சு எடுப்பதையும் கீழே செல்வது மூச்சு விடுதலையும்
குறிக்கிறது. எக்ஸ் அச்சு நேரத்தையும் ஒய் அச்சு கொள்ளளவையும் குறிக்கிறது.
சாதாரணமாக மூச்சு எடுத்துவிடும்போது கொள்ளளவு கூடிக் குறைகிறது. இதை ஆங்கிலத்தில்
டைடல் வால்யூம் என்கிறோம். T குறிப்பது அதையே. இது கொழுப்பு இல்லாத உடல்
எடை கிலோவுக்கு 70 மில்லி லிட்டர் என்று ஒரு கணக்கு. இருந்தாலும் வளர்ந்த ஆண்
ஒருவரின் சராசரி மதிப்பையே ஒரு சௌகரியத்துக்காக பார்த்துக்கொண்டு போகலாம். நம்
புரிதலுக்கு அது போதும்.
சரி. இப்போது நன்றாக மூச்சை உள்ளே இழுக்கிறோம். வரைபடத்தை பாருங்கள். 5 வது
அலை மிகவும் மேலே போகிறது. I என்று குறித்து இருக்கிறது. சுமார் மூன்றரை லிட்டர்
வரை காற்றை கூடுதலாக உள்ளே இழுக்கலாம். இது பயிற்சியை பொறுத்தது. இது நமக்கு
தேவையான போது கிடைப்பதற்காக 'ரிசர்வ்' இல் வைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக உள்ளே இழுப்பது போலவே கூடுதலாக வெளியே விட முடிய வேண்டும்
அல்லவா? ஆமாம், அப்படி முடியும். E என்று குறித்து இருக்கிறது. இது சுமார் ஒரு லிட்டர்.
என்னதான் நன்றாக மூச்சை வெளியே விட்டாலும் கொஞ்சம் காற்று உள்ளே இருந்தே
தீரும். அதுவும் இல்லாமல் காற்று வெளியேறிவிட்டால் கஷ்டம்! பலூனை முதலில் ஊதி
கொஞ்சம் பெரிதாக்க மிக அதிக சக்தி தேவை. கொஞ்சம் காற்று பலூனுள் போய்விட்டால்
அப்புறம் ஊதி பெரிதாக்குவது சுலபம். அதே பௌதிக அடிப்படைதான் இங்கே. அதனால்
காற்றை முழுக்க வெளியேற்றுவது இல்லை! இந்த காற்று சுமார் 1.2 லிட்டர். இது R என
குறிக்கப்பட்டுள்ளது.
நாம் 500 மில்லி லிட்டர் காற்றை உள்ளே இழுக்கிறோம். அது மூக்கு, தொண்டை,
காற்றுக்குழல்கள, காற்றுப்பைகள் எல்லாவற்றிலும் நிறைகிறது. ஆல்வியோலை என்னும்
இந்த காற்றுப்பைகளில்தான் ஆக்ஸிஜன் ரத்தத்துக்கு போய் கார்பன் டை ஆக்ஸைட்
காற்றுப்பைகளுக்கு வருகிறது. இதுதான் முக்கியம்; மூச்சு எடுப்பதன் பயன். இந்த
காற்றுப்பைகள் அல்லாத மற்ற மூக்கு முதலான இடங்களில் இருக்கும் காற்று இப்படி
பயன்படாது. அதை டெட்ஸ்பேஸ் என்கிறோம். இது சுமார் 150 மில்லி லிட்டர். 500 மி.லி காற்றை உள்ளே இழுத்தா பயன்படறது 350 மி.லி. 300 மி.லி காற்றை உள்ளே இழுத்தா பயன்படறது 150 மி.லி தான்!

பயப்படாதீங்க! அனாடமி பாடம் இவ்வளோ போதும். முக்கியமா சொல்ல வந்தது சாதாரணமா அரை லிட்டர் காத்து உள்ளே போய் வரணும். அப்படி நடக்கறதில்லை என்கிறதே பிரச்சினை! குறைந்த அளவு காற்றை உள்ளே இழுத்து வெளிவிட்டே பழகிட்டோம். காலப்போக்கில உடல் உழைப்பும் குறைஞ்சு போச்சு. இல்லாட்டா உழைப்பின் போது சாதாரணத்தை விட அதிக மூச்சையே உள் இழுத்து வெளி விடுவோம். காற்று பல நாட்கள் புகாம இருக்கும் காற்றுப்பைகள் அப்படியே சுருங்கிப்போயிடும். இவற்றை திருப்பி நல்ல நிலைக்கு கொண்டு வரது கஷ்டம்.
உணர்ச்சி வசப்படுறவங்களை பாருங்க. சின்ன சின்னதா வேக வேகமா மூச்சு விடுவாங்க. முன்னே பார்த்த கணக்குப்படி பயனாவது குறைச்சலே. இப்படி குறைவாக கிடைக்கும் ஆக்சிஜன் எங்கே போகும்?
நாம உயிர் வாழ அடிப்படையான சில முக்கிய செயல்கள் இருக்கு இல்லையா? இதயம் துடிக்கணும், ரத்தம் ஓடணும், நுரையீரல்கள் சுருங்கி விரியணும், சிறுநீரகம் செயல்படணும், கண்கள் பார்க்கணும். இப்படி பலது. இவற்றுக்கு முதல் மரியாதை. அவற்றுக்கு தேவையான ஆக்சிஜன் கொடுக்கப்படும். மூளை கேட்கிற ஆக்சிஜன் விழிப்போட இருக்க, யோசிக்க, நினைவு கொள்ள, முடிவெடுக்க ,…. இதுக்கான ஆக்சிஜன் குறைபடும். இதனால் என்ன நடக்கும்? உன்னிப்பா பார்க்க முடியாது. மறதி இருக்கும். மூட் மாறிக்கொண்டே இருக்கும். நிலையழியும். மனத்தளர்வு, கலக்கம், சுறுசுறுப்பின்மை,…..
அடுத்த முறை உணர்ச்சி வசப்படும்போது/ மன இறுக்கம் வரும்போது, மறக்காம ஆழ்ந்த நிதானமான மூச்சு எடுத்து விடுங்க. மூக்கால மூச்சு எடுங்க; வயிறு நிறைந்து வெளி வரட்டும். நிதானமா வாயால வெளிவிடுங்க. நுரையீரல் முழுக்க காலி ஆகட்டும். இதுக்கு முன்னாலேயே பயிற்சி எடுக்கறது நல்லது. சாதாரண நேரத்தில தினசரி வயித்து மேல ஒரு கை மார் மேல ஒரு கை வெச்சுகொண்டு ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு பயிற்சி செய்தா இந்த சமயத்தில சுலபமா இருக்கும். பயிற்சி ஆன பிறகு மத்தவங்களுக்கு தெரியாமலே செய்ய இயலும்.
சும்மா இப்பவேதான் முயற்சி செஞ்சு பாருங்களேன். மேலே சொன்னப்படி மூச்சு எடுத்து விடுங்க. வெகு சீக்கிரமே மனசு அமைதியாகிறதை பார்க்கலாம். புத்தி தெளிவா இருக்கும். உடம்பு இறுக்கம் தளர்ந்துடும், பலர் மத்தியில் இரண்டாம் பேர் அறியாமலே இதை செய்ய முடியும்.
உணர்ச்சிவசப்பட்ட மனசு என்கிற நிலையிலிருந்து புத்தி நிலைக்கு கொண்டு போறதுக்கு இதை விட சிறந்த வழி இல்லை. மன இறுக்கமோ கலக்கமோ சேய்ய வேண்டிய வேலை குறித்து மலைப்பு கலந்த பயமோ மனக்குழப்பமோ எதிர்மறை எண்ணங்களோ கடந்த காலம் குறித்த கழிவிரக்கமோ எதானாலும் சரியாக நிதானமான ஆழ்ந்த மூச்சு விடுவதால உங்களை ஆசுவாசப்படுத்தி யோசிச்சு முடிவெடுக்கும் மன நிலைக்கு உங்களை கொண்டு போகும்.

எதை செய்யறோமோ இல்லையோ மனசை/ உணர்ச்சிகளை கட்டுப்படுத்த எல்லாரும் அவசியமா செய்ய வேண்டியது இது!

Friday, 2 December 2016

சுய மேலாண்மை:

சுய மேலாண்மை:
சுய மேலாண்மை என்பது நம் உணர்ச்சிகளை அறிந்திருந்து என்ன செய்யலாம் என்று புத்தி பூர்வமாக தேர்ந்தெடுத்து செய்வது. இது வெறுமே பெரிய மூச்சு எடுப்பதும், உணர்ச்சிகள் வலுவாக எரிமலை போல மேலெழும்போது நம்மை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் மட்டும் இல்லை. இந்த சமயங்களில் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைப்பது பெரிய சமாசாரம்தான். இவை எரிமலை போல குமுறி மேலெழும் முன்னே அடித்தளத்தில் நிறைய கடமுடா இருக்கும்! இந்த கடாவையும் முடாவையும் இனம் கண்டு கொண்டு அதுக்கு தேவையானதை முன் கூட்டியே செய்யணும். ரொம்பவே தெளிவாக நம்மோட சுய ஆளுமை நம்மை நாமே அறிவதில்- அந்த விழிப்புணர்வில் இருக்கிறது. நாம் இன்ன இன்ன விதத்தில் சரியாக இல்லைன்னு தெரிஞ்சாத்தானே நம்மை நாமே சரி செய்துகொள்ள முடியும்? வினை > உணர்ச்சி> எதிர்வினை ந்னு இருக்கிற வரிசையில கடைசி ரெண்டுக்கும் இடையில சுய அறிதல் புகுந்தாத்தான் நாம நம்மை நல்லா ஆள முடியும்.
வினை > உணர்ச்சி>சுய அறிதல்> எதிர்வினை
இது நடக்க நடக்கத்தான் நாம் இயல்பா சரியா நடந்துக்கொண்டு நம் வெற்றிக்கு நாமே தடையா இல்லாம இருப்பது நடக்கும். நாமும் மத்தவங்க நம்மை வெறுக்காம இருக்கும்படி நடந்துப்போம். சிக்கலான சூழ்நிலைகள் எழுந்தா நாம சாமர்த்தியமா காய் நகர்த்தி வெற்றி பெறுவோம். தப்பான வழியில நம்ம மனக்குதிரை போச்சுன்னா லகானை பிடிச்சு திருப்பிடுவோம். நிலைமைக்கு தகுந்த படி நெகிழ்ந்து கொடுத்து எதானாலும் எதிர்வினைக்கு பல தேர்வுகளை பார்த்து எது நல்லதுன்னு புத்தி பூர்வமா முடிவு பண்ணி செயல்படுவோம்.
இதெல்லாம் எதுவுமே இல்லைன்னா, நமக்குத்தெரிஞ்சோ தெரியாமலோ உணர்ச்சிகள் நம்மை ஆளுதுன்னா தினசரி அவற்றோட கட்டுப்பாடில இருந்து கொண்டு அவற்றால ஆட்டுவிக்கப்பட்டு வாழ்கை நம் கட்டுப்பாடில இல்லாம போயிடும்.


அடுத்ததா நாம் பார்க்கபோகிறது இதற்கான பயிற்சிகள்.