Saturday 30 January 2016

’சாரி’!


தப்பு செய்யாதவங்க யார் உலகத்தில?? நாம எல்லோருமே எப்போதாவது தப்பு செய்யறோம். தெரிஞ்சோ, தெரியாமலோ! ஏன்னா to err is human ந்னு சொல்லி இருக்காங்களாம்!
நாம் தப்பே செய்யலைன்னாலும் சில சமயம் மத்தவங்க நாம் செய்யறதுல தப்பு கண்டுபிடிக்கறாங்க! இதுல சிலர் எக்ஸ்பெர்ட்ஸ் கூட!
இது பல வகையா இருக்கு. சில சமயம் நாம் வேணும்ன்னு அதை செய்யலாம். சில சமயம் நாம பாட்டுக்கு செய்யப்போக அது சிலருக்கு பிரச்சினையா ஆயிடும்! சிலருக்கு மனம் புண்படலாம். அல்லது அவர் இதனால் ஏதேனும் ஒரு சிக்கல்ல மாட்டிக்கலாம்.

அது கிடக்கட்டும்; இங்க நமக்கு பிரச்சினையே நாம் அதுக்கு ’சாரி’ ந்னு சொல்லணுமா இல்லையா?
ம்ம்ம்ம்ம் இதுக்கு சரியான பதில்ன்னு ஒண்ணுமில்லை.
பாதிக்கப்பட்டது யாரு, நமக்கும் அவருக்கு என்ன உறவு? அந்த உறவு தொடர வேண்டியது எவ்வளவு அவசியம்? நாம நிஜமா தப்பு செஞ்சோமா? பல விஷயங்கள் இருக்கு,
நமக்கும் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு உறவு இருக்கு, அது தொடரணும் ந்னா சந்தேகமில்லாம மன்னிப்பு கேட்க வேண்டியதுதான். இதுல யார் சரி, யார் தப்புன்னு விஷயமில்லை. நாம் செஞ்சது முழுசா நல்ல எண்ணத்தோடத்தான் என்கிறது முக்கியமில்லை. அவருக்கு பிரச்சினை ஏற்படட்டும்ன்னு செய்யலை என்கிறது முக்கியமில்லை. இங்கே பார்க்க வேண்டியது உறவுகளை செப்பனிடவோ தக்க வெச்சுக்கவோ என்ன செய்யணும் என்கிறது மட்டுமே.
நம் செயலோட தாக்கம் என்ன என்கிறது நாம என்ன நினைச்சு செய்தோம் என்கிறதை விட முக்கியம். புருஷன் வேட்டி அழுக்கா இருக்கேன்னுதான் வண்ணானுக்கு அதை போட்டோம். ஆனா குளிச்சு வந்த ஆசாமி கட்டிக்க வேட்டி இல்லாம நிக்கிறப்ப அது அவருக்கு கஷ்டமாத்தானே போச்சு? இங்க நம்மோட செயல் நல்ல எண்ணத்துல செஞ்சு இருந்தாலும் தாக்கம் ஒரு பிரச்சினையை ஏற்படுத்துது. அதனால் மன்னிப்பு கேக்கத்தான் வேணும்.
நண்பர்களோ, குடும்ப உறுப்பினரோ, வியாபார பார்ட்னரோ, வாழ்க்கை துணையோ, பக்கத்து வீட்டுக்காரரோ, கூட வேலை செய்யறவங்களோ இப்படிப்பட்ட மக்கள் இடையேத்தானே புழங்கிகிட்டு இருக்கோம்? அதனால இவங்களோட ஒரு நல்ல உறவு வெச்சுக்கணும்ன்னு நினைக்கறதே நடைமுறையில நல்லது. அதனால இவங்களோட உறவு ஒரு விரிசல் ஏற்படும் போது அது சின்னதா இருக்கறப்பவே சரி செய்யறது நல்லது.
மன்னிப்பு கேக்கிறதுல பலவிதம் இருக்கு. எல்லா ’’சாரி’’ யுமே ஒரே எபெக்ட் கொடுக்காது. அதுல நம்மோட மனசு ஈடுபடணும். டேய் கண்ணா, ஏண்டா பாட்டிலை உடைச்சே ந்னு கேக்கிறப்ப ’சாரிம்மா’ ன்னு ஓடுற பையன் … அது எவ்வளோ மேம்போக்கான பதில்! சரியான விதத்தில் ’சாரி’ சொல்லறது கொஞ்சம் வளத்துக்கொள்ளக்கூடிய கலை!

முதல் படியா நாம் அதுக்கு வருந்தறோம் என்கிறது அவங்களுக்கு புரியணும். மனசுல வருந்தாம மேம்போக்கா ’சாரி’ சொல்லறப்ப அது வார்த்தை இல்லாத மொழியால சுலபமா தெரிஞ்சுடும்.அப்ப பிரச்சினை தீராது!
நான் செஞ்சது சரிதானே நான் ஏன் ’சாரி’ சொல்லணும்ன்னா, யெய்யா, இங்க நீ தப்பா ரைட்டா என்கிறது விஷயமே இல்ல. உறவு நீடிக்கணுமா இல்லையா என்கிறதே விஷயம்.
ம்ம்ம் சரி, ஆனா நான் தப்பு செய்யாதப்ப எப்படி மனப்பூர்வமா ’சாரி’ சொல்ல முடியும்?
சொல்ல முடியும். உறவு விரியுதே என்கிற வருத்தம் மட்டுமே போதும்.

முதல்ல ’சாரி’ ன்னு மட்டும் சொல்லலாம். அப்புறமா மேலே பேசறது நாம அதுக்கு உண்மையா வருந்தறோம் என்கிறதை தெரிவிக்கணும். இங்கே ஏதேனும் சப்பைக்கட்டு கட்டறதோ அல்லது சாக்குப்போக்கு சொல்லறதோ உதவாது. அது இன்னும் கோபத்தையோ வருத்தத்தையோதான் அதிகமாக்கும்.
- தொடரும்.