Friday, 5 February 2016

பார்வை - 2

அதுக்குன்னு லோகத்தில எல்லாம் நல்லாத்தான் இருக்கு; பிரச்சினையே இல்லைன்னு சொல்ல வரலை. பிரச்சினைகள்/ குறைகள் நிறைய இருக்குத்தான். சிலது நம்மோட சொந்த பிரச்சினைகள். சிலது நம்மை ரொம்ப பாதிக்கிற பிரச்சினைகள். சிலது நம்மை பாதிக்காத, இருந்தாலும் நாம கொஞ்சம் கவலையோட பார்க்க வேண்டிய பிரச்சினைகள்…. பிரச்சினைகள் ஏராளம்!

இது எல்லாத்துக்கும் நாம் அழணும்ன்னு இந்த ஒரு ஜன்மா போறாது.
உலகத்தில சுக துக்கங்கள் கலந்தே எப்பவும் இருக்கு! நாம ஏன் சுகத்தை பார்க்காம துக்கங்களையே பாத்துகிட்டு இருக்கோம்? சுகமா இருக்கறது நம்ம பிறவி உரிமைன்னு நினைப்பா? அப்படித்தான் இருக்கணும். யாரும் டாக்டர் எனக்கு தலைவலியே வரதில்லையே! ஏதேனும் பிரச்சினையோ ந்னு டாக்டர்கிட்ட போறதில்லை.
இருந்தாலும் நாம் செய்யற அவப்பத்தியங்களுக்கும் பாபங்களுக்கும் இன்னும் நிறைய பிரச்சினைகள் இருக்கணும். அப்படி இல்லையே!
எவ்வளவு விஷயங்கள் டேக்கன் ஃபார் க்ராண்டட்!

தடையில்லாம மூச்சு விடறதுல இருக்கிற சுகம் பத்தி நெடு நாள் ஆஸ்த்மா நோயாளிகிட்டே கேளு. நல்ல காத்து சூழ்ந்து இருக்கறப்பவே அது உள்ளே போகாத கொடுமை அவருக்குத்தான் தெரியும்.
தடையில்லாம சாப்பிடறதுல இருக்கிற சுகம் பத்தி முழுங்க முடியாதவன்கிட்டே கேளு.
வலி இல்லாம நடக்கிறதுல இருக்கிற சுகம் பத்தி முட்டி தேய்ஞ்சு போனவன்கிட்ட கேளு.
இப்படி எல்லாம் இருக்கறது நார்மல்; அதனால நான் அப்படி இருக்கறதுல என்ன ஆச்சரியம்ன்னு நினைக்கலாம். இருந்தாலும் இது நமக்கு கிடைக்க கொடைன்னு சந்தோஷப்படுவோம்.

ஒரு விஷயத்தோட அருமை அது நமக்கு கிடைக்காத போதுதான் தெரியுது.
சில சமயம் சில அம்மாக்கள் கத்துவாங்க, “ உன்னை உக்காத்தி வெச்சு சேவை பண்ணிண்டு இருக்கேன் பாரு! இதோட அருமை இப்ப தெரியாது. ஹாஸ்டலுக்கு போவே இல்லே? அப்ப தெரியும்!” ஹும்! இது ஏதோ உளருதுன்னு நினைச்சுகிட்டு நகர்ந்து போற இளைஞனுக்கு அந்த அருமை நிஜமாவே ஹாஸ்டலுக்கு போன பிறகுதான் தெரிய வரும்!

நமக்கு ஏற்கெனெவே கிடைச்சு இருக்கிற அருமையான நல்ல விஷயங்கள் நமக்குத்தெரியறது இல்லை! கடைசியா என்னைக்கு நீல வானத்தை பாத்தீங்க? அதுல மிதந்து வர மேகங்களோட வரிசையை, அது வித விதமான மிருகங்கள் போல உரு மாறிகிட்டே வரதை ரசிச்சீங்க? உங்க வீட்டுக்கு பக்கத்திலேயே குயில் இருக்குன்னு தெரியுமா? அது வசந்த காலத்தில தினசரி பாடறதை கேட்டு இருக்கீங்களா? ஏசி யை விட தென்னை மர நிழல் அருமையா இருக்குன்னு தெரியுமா? கான்க்ரீட் ஜங்கிள்ன்னு நாம் நினைக்கிற நகரங்களில கூட இது போல சில ஆச்சரியங்கள் வாழ்ந்துகிட்டு இருக்குன்னு தெரியுமா? கொஞ்சம் கவனிச்சு பாருங்க!

பிரச்சினைகளைத்தவிர வாழ்க்கையில ஒண்ணுமே இல்லைன்னு நினைச்சுகிட்டு இருக்கறவங்க கொஞ்சம் கண்ணைத்திறந்து இருக்கிற நல்ல விஷயங்களை பார்க்கக் கத்துப்போம். தினமும் இரண்டு விஷயமாவது நல்லதா நடந்ததுன்னு ரிப்போர்ட் பண்ணணும்ன்னு ஒரு விளையாட்டை ஒத்தர் ஆரம்பிச்சார். நாளடைவில அவரோட பார்வையே மாறிப்போச்சு. இதுல என்ன இருக்குன்னு நினைக்கீறீங்களா? அப்ப இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்!

நேத்தைக்கு நீங்க பார்த்த நல்ல விஷயங்கள் ரெண்டு சொல்லுங்க! ம்ம்ம்ம்ம் நேத்தைக்கு? ஒண்ணும் நினைவுக்கு வரலையா? சரி போன நாலு நாட்கள்? ஒரு வாரம்?
நான் இப்படி கேட்ட போது பலரால விடை சொல்ல முடியலை. ஒருத்தர் ரொம்ப முயற்சி செய்து ஒண்ணை சொன்னார். சரி அடுத்துன்னு கேட்டா, ஒரு நல்ல விஷயம் என்னால் சொல்ல முடிஞ்சது. இதான் ரெண்டாவது நல்ல விஷயம்ன்னார்! இதுதான் நம்ம பார்வை எப்படி கண்டிஷன் ஆகி இருக்குன்னு காட்டுது!


பார்வையை மாத்திப்போம். கெட்ட விஷயங்கள் மட்டுமே பட்டுக்கொண்டு இருந்த கண்களால நல்லதையும் பார்க்க ஆரம்பிக்கலாம். அப்புறமா பார்வையில் ஒரு பேலன்ஸ் கிடைக்கட்டும்!

Thursday, 4 February 2016

பார்வை - 1


நாட்டில சில பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையே ஒரு பிரச்சினைதான். காலையில் எழுந்திருக்கிறப்ப முடியவே இல்லை முதுகு வலி தாங்கலைன்னு ஆரம்பிச்சு ராத்திரி தூக்கமே வர மாட்டேன் என்கிறதுன்னு சீரியல் பாத்துட்டு படுக்கப்போகிற வரை பிரச்சினை பிரச்சினை பிரச்சினையேதான். குறை குறைன்னு எதாவது குறை சொல்லியே காலை முதல் ராத்திரி வரை வாழ்க்கை ஓடும்! எதையாவது உருட்டறதுக்கு இல்லைன்னா அதுவே ஒரு பிரச்சினையா இருக்கும். அதாவது பிரச்சினையே இல்லையே என்ன செய்யறதுன்னு ஒரு பிரச்சினை இருக்கும்! இவங்களோட குடும்பத்தில இருக்கறவங்க உலகத்துல பிரச்சினை தவிர ஒண்ணுமே கிடையாதுன்னு கொஞ்சம் கொஞ்சமா நம்ப ஆரம்பிச்சுடுவாங்க!

இதெல்லாம் நம்ம காதுல விழக்கூடாதுன்ம்னு நினைச்சு கொண்டு ந்யூஸ் பேப்பர் படிக்கலாம்ன்னு எடுத்தா அதுலேயும் இதேதான் கதை. என்ன விஷயங்கள் கொஞ்சம் போல தூரமா போயிருக்கும். அங்கே மாணவர்கள் ஸ்ட்ரைக், இங்கே அதிக சம்பளம் கேட்டு போராட்டம்; அங்கே மாணவி தற்கொலை, இங்கே விவசாயி தற்கொலை ந்னு பேப்பர் முழுக்க இருக்கிற செய்தியை எல்லாம் படிச்சா நாட்டில நல்லது நடக்கவே இல்லைன்னு தோணிடும். எங்கேயோ ஒரு மூலையில ஒரு 18 வயசு மாணவர் சாதனை படைச்சார்ன்னு வேண்டா வெறுப்பா செய்தி போட்டுடுவாங்க. கொட்டை எழுத்தில போடற செய்தி எல்லாம் ஏதாவது அரசியல் பரபரப்போ அல்லது விபத்தோ…. இந்த விபத்துல எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் பேர் சாகிறாங்களோ அவ்வளவு நல்லதுன்னு பத்திரிகைகாரங்க நினைக்கிறாங்களோன்னு தோணும்!

இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் தூரத்தில நடக்குது. நம்ம ஊர்ல நடந்த விபத்துன்னா அடப் பாவமேன்னு கொஞ்சமா பார்ப்போம். நம்ம நாட்டிலேயே ஏதோ ஒரு மூலை- வடகிழக்கு மாநிலத்துல பூகம்பம் ந்னா அச்சோச்சோன்னு படிச்சுட்டு அடுத்த பக்கத்தை புரட்டுவோம். சிலி நாட்டில வெள்ளம்ன்னா ஓஹோன்னு சொல்லிக்கொண்டே காப்பியை உறிஞ்சிக்கொண்டு மேலே படிப்போம். இதெல்லாத்துக்கும் நமக்கும் ஒரு சம்பந்தம் இல்லைன்னு நினைப்பு.

ஒழியறது. பேப்பர்தான் இப்படின்னு டிவி யை போட்டா அது இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. இன்னும் மோசம். வெறும் எழுத்தா இல்லாம ஆடியோ விசுவலா இருக்கறதால் தாக்கம் இன்னும் அதிகம். 24*7 ஏதாவது புதுசு புதுசா செய்தி வரணும்; பரபரப்பா இருக்கனும்; டிஆர்பி ரேட்டிங்க் எகிறணும்… அவ்ளோதான் நோக்கம். செய்தில இருக்கற உண்மைத்தன்மையோ அல்லது அது சமூகத்தில என்ன தாக்கம் விளைவிக்கும்ன்னோ ஒரு அக்கறையும் இல்லை.

தொலையறதுன்னு கணினில உக்காந்து ஃபேஸ்புக் லொட்டு லொசுக்குன்னு சமூக வலைத்தளங்களுக்கு போனாலோ அங்கே இன்னும் மோசம்! எந்த பதிவுக்கும் உண்மை துளிக்கூட இருக்கணும்ன்னு இல்லை. நம்ம இஷ்டம்தான்! எது கண்ணுல படுதுன்னு என்கிறதை கண்ட்ரோல் பண்ணத்தெரியாத ஆசாமி பாவம்தான்! அந்தப்பக்கம் தலை வெச்சு படுக்க மாட்டேன்ன்னு சங்கல்பம் பண்ணலைன்னா அவர் தொலைஞ்சார்!
இதை எல்லாம் பாத்து உலகம் எப்படி இருக்குன்னு கணிச்சா அதைப்போல ஒரு தவறு இல்லைன்னு சொல்லுவேன்!

ஒரு ஆசாமி வீட்டில வீட்டம்மா ஏதோ பொலம்பிண்டு இருந்தாங்க. இவருக்கோ அது பழகிப்போச்சு. அதனால் உம் உம்னு ஆட்டோமேடிக்கா சொல்லிக்கிட்டே செய்திப்பத்திரிகையை படிச்சுக்கொண்டு இருந்தார். அர மணி ஆச்சு. அந்த அம்மா அவங்க பொலம்பறதை இவர் கவனிக்கவே இல்லை என்கிறதை பார்த்தாங்க. போட்டாங்க ஒரு அணுகுண்டு! திடீர்ன்னு பொலம்பலோட பொலம்பலா நீங்களும் அப்படித்தான் அப்படீன்னாங்க!
அவ்வளோதான் ஆசாமி உஷாராயிட்டார்! எப்படி நீ அந்தமாதிரி சொல்லப்போச்சுன்னு ஆரம்பிக்க அந்த அம்மணியோட நோக்கம் நிறைவேறிடுத்து.


நமக்கு சம்பந்தம் இல்லைன்னு நினைக்கற வரை பல விஷயங்களைப்பத்தி கவலைப்படறதில்லை. ஆனா தினம் தினம் குறை குறைன்னு போட்டு அடிச்சு அடிச்சு தாக்கிகிட்டு இருக்கறதுல நம்ம மனசே கெட்டுப்போயிடுமோன்னு பயமா இருக்கு!

Wednesday, 3 February 2016

’சாரி’! - 4

மூணாவது படியா - நடந்த விஷயத்துக்கு ஏதேனும் இழைப்பீடு செய்யணும். அது நபருக்கு ஏற்றமாதிரி இருக்கும். ஒரு குழந்தைக்கு ஒரு கட்டிப்பிடி வைத்தியமா இருக்கலாம். ஒரு சாக்லேட்டா இருக்கலாம். மனைவிக்கு ஒரு சினிமாவா இருக்கலாம். அவங்க வெகு நாட்களா வேணும்ன்னு நினைச்சு இருந்த ஒரு ஆசையை நிறைவேத்தறதா இருக்கலாம். அவமானப்பட்டுட்டதா நினைக்கறவருக்கு அதை சரி செய்யற வாய்ப்பா இருக்கலாம். நாம் தப்பு செஞ்சு இருந்தா அதை எல்லார் மத்தியிலும் ஒப்புக்கறதா இருக்கலாம்.
பல சமயம் இன்னொரு தரம் அது போல நடக்காதுன்னு ஒரு உறுதிமொழியே போதுமானதா இருக்கலாம்.
இல்லை என்ன செய்ய முடியும்ன்னு ஒரு ஐடியாவே இல்லைன்னா நேரடியா கேட்டுடலாம். “இதை சரி செய்ய நான் என்ன செய்யட்டும்?”
இப்படி ஏதேனும் செஞ்சா முக்கியமா செய்ய வேண்டியது அதை நிறைவேத்தறதுதான்! பொய்யா சொல்கிற் வாக்குறுதிகள் எல்லாம் அடுத்த முறை செல்லுபடியாகாது. நீண்ட கால உறவுக்குத்தான் நாம் இதை செய்யறோம்ன்னு நினைவு இருக்கட்டும்!
ஒரு வேளை நம்மை ஏதேனும் வேற தப்பு செய்ய கேட்கறாங்க, நம்மால் முடியாததை கேட்கிறாங்க, அல்லது பொருத்தமில்லாத அளவுகேட்கிறாங்கன்னா உறுதி கொடுக்கக்கூடாது. அதாவது செய்ய முடியாததை செய்வதா சொல்லக்கூடாது. அதைப்பத்தி யோசிக்கிறேன்னு சொல்லி அப்போதைக்கு தப்பிக்கலாம். கொஞ்ச நாளானா அது காணாமலேக்கூட போயிடலாம்.

கடைசியா செய்ய வேண்டியது சாரி சொன்ன பிறகு பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறார்/ செய்கிறார்ன்னு பார்க்கணும். நாமதான் சாரி சொல்லிட்டோமே, வேலை முடிஞ்சதுன்னு இல்லை. வெகு சிலர்தான் உடனே ‘பரவாயில்லைப்பா, விடு’ ந்னு சொல்வாங்க. அதனால சாரி சொன்னா உடனே மத்தவரும் ஏத்துப்பாங்க, சமாசாரம் முடிஞ்சது ந்னு இல்லை. பாதிக்கப்பட்டவர் இந்த இடத்தில பலதும் செய்யலாம். அழுதுண்டே போயிடலாம். நமக்கு உடம்பில அடிப்பட்டா அது காயம் ஆற நாளாகிறது இல்லையா? அதே போலத்தான் இதுவும். மனசு சரியாக கொஞ்ச நாள் ஆகலாம்.

அல்லது பாதிக்கப்பட்டவர் நம்மை திட்டலாம். சாரி சொன்னா ஆச்சா? ந்னு பொங்கலாம். சாரி சொல்லி இருந்தாலும் சண்டைக்கே வரலாம். இது எல்லாமே பாதிக்கப்பட்டவர் அவருடைய பிரச்சினையை வெளிப்படுத்தற விதம். பலருக்கும் இப்படி செய்யறதால அவரோட உணர்ச்சிகள் வடிஞ்சு நிலமை சரியாகிடலாம். சில சமயம் அவர் சொல்கிறதுல அட! இப்படி ஒரு கோணம் இருக்கான்னு நமக்கே பாடம் கிடைக்கலாம். இப்படி பலது இருந்தாலும் இரண்டு நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு! முதலாவதா அவர் சுதாரிச்சு கொண்டு “ ஓ, நாந்தான் தப்பு பண்ணேன்; நாந்தான் சாரி சொல்லணும்; சாரி “ ந்னு சொல்லக்கூடும். நான் என் லிமிட்டை தாண்டிட்டேன்; உனக்கு கோபம் வந்து அடிச்சுட்டே!”. இப்படி உணர்ச்சியோட தாக்கம் குறைஞ்சா மனம் புண் படறது அதிகமா ஆகாது.

இரண்டாவதா முன்னே சொன்ன மாதிரி ”ரைட், விடுப்பா “ ந்னு நம்மை மன்னிச்சுவிடலாம். அப்ப நம்மோட குற்ற உணர்ச்சி கம்மியாகும். அதுவும் நல்லதே!

இவ்வளவு நேரம் நாம் சாரி சொல்லனும்ன்னு எழுதிகிட்டு இருந்தேன். இது நாம் மத்தவங்களுக்கு என்ன செய்யணும் என்கிறதுதான். ஆனா நாம மத்தவங்க நம்மகிட்ட மன்னிப்பு கேட்கணும் என்கிற எண்ணத்தை வளத்துக்கக்கூடாது. அது சரியோ தப்போ, மத்தவங்க இப்படி இப்படி நடந்துக்கணும்ன்னு நாம் நினைக்கறதுலதான் நிறைய பிரச்சினைகளும் குடும்பச்சண்டைகளும் இருக்கு!

இதுக்குத்தான் சின்ன பசங்க நாம செஞ்சது தப்பாவே இருந்தாலும் “சாரி” கேளுன்னு சொல்லறதை நான் விரும்பலை. இதோ பார், அம்மாவே/ அப்பாவே - தான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்கறார்! ந்னு தோணினாலும் தோணும். அல்லது மத்தவங்க எனக்கு தப்பு பண்ணினா (அது தப்பா இல்லையான்னு சின்ன பசங்களுக்குத்தெரியுமா? தப்புன்னு அவங்க நினைக்கறாங்க.) மத்தவங்க எங்கிட்ட மன்னிப்பு கேட்டாக வேணும் என்கிற ஒரு பிடிவாதத்தையும் தோற்றுவிக்கலாம். ஜாக்கிரதை

Tuesday, 2 February 2016

’சாரி’! - 3

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னன்னா பாதிக்கப்பட்டவர் எப்படி உணர்கிறார்? அடப்போடா, கிடக்கட்டும்ன்னா? இல்லை பெரிய மன வருத்தமா?
நான் செய்த எது பாதிச்சது? நான் செஞ்சேன் என்கிறதா? நான் தனியா கூப்பிட்டு திட்டி இருக்கலாம்;ஆனா பொதுவில செஞ்சேன், மானம் போச்சு என்கிறதா? நாம் செஞ்சத வேற எப்படி செஞ்சு இருக்கலாம்?
இதை எல்லாம் முதல்ல நாம் ஒத்துக்கணும். அது வரைக்கும் ’சாரி”க்கு மேல ஒண்ணும் சொல்ல வேணாம். அவர் எப்படி உணர்கிறார்ன்னு புரியாம நாம் சொல்கிற எதுவும் போலியாத்தான் தொனிக்கும்.
உதாரணமா நாம் சொல்லக்கூடியது: நான் செஞ்ச விமர்சனம் உனக்கு பிடிக்கலை போலிருக்கு; உன் உணர்ச்சிகளை நான் சரியா புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறாயா என்ன?
உன் மாணவர்கள் எதிரே நான் பழைய ஞாபகத்திலே ரொம்ப உரிமையோட டேய் குண்டப்பான்னு கூப்பிட்டது தப்புதான். அதனால உனக்கு என் மேல கோபமும் பசங்க எதிரே இப்படி மானக்குறைவா ஆயிடுத்தேன்னும் நீ நினைச்சா அது சரிதான். நான் அப்படி செஞ்சு இருக்கக்கூடாது. மன்னிச்சுடுப்பா.

இங்கத்தான் நாம் ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லவோ,உண்மையாகவே இருக்கக்கூடிய காரணம் சொல்லவோ அல்லது நாம செஞ்சது சரிதான்ன்னு நிரூபிக்கவோ முயற்சி செய்ய வாய்ப்பு இருக்கு. அதை செய்யக்கூடாது. அதுக்கு இது நேரமில்லை. யாரையும் திருத்த வேண்டிய அவசியம் இருந்தா அதை அப்புறமா பாத்துக்கலாம். இப்போதைக்கு உறவை சரி செஞ்சுக்கணும்.

தப்பு’ நடந்ததுக்கு சரியான விளக்கம் இருக்கு. அதாவது என் கையில நிலமை இல்லாம போயிடுத்து. என்ன சொல்லி மன்னிப்பு கேட்க? உனக்கு வருத்தம்/ கோபம் / … ஏற்பட்டு இருக்கு. அதுக்கு நான் ஏதோ ஒரு வகையில் காரணமாயிட்டேன். அது எனக்கும் கஷ்டமா இருக்கு. மன்னிச்சுடு.
- தொடரும்

Monday, 1 February 2016

’சாரி’! - 2

இரண்டாவது படி நம்மோட தப்பையும் அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் ஒத்துக்கணும்.
உதாரணமா, தப்பு நம்முதுன்னு வெச்சுக்கலாம். ’சாரி’. ஆபீஸ்ல எதிர்பாராத வேலை வந்துடுத்து. நகர முடியலை. திரும்பி வர லேட் ஆயிடுத்து. உன்னை சினிமாவுக்கு கூட்டிப்போக முடியலை. நீ அதை எவ்வளோ எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன்னு எனக்குத்தெரியும். இருந்தாலும் ஆபீஸரை மீறி வெளியே வர முடியலை. ’சாரி’.
செஞ்ச தப்பை ஆமாம்; தப்பு செஞ்சுட்டேன் ந்னு ஒத்துக்கறதே இந்த காலத்துல பெரிய விஷயமா போச்சு! ஈகோ பிரச்சினை. அப்படி இருக்கறப்ப, ”ஆமா! ஆபீஸ்ன்னு ஒண்ணு இருந்தா எதிர்பாராத வேலை வரும்தான். அதை முடிக்காம வெளியே வர முடியாதுதான். நான் என்ன பண்ணட்டும்? அது என் தப்பா என்ன? இதுக்கு மூஞ்சியை தூக்கி வெச்சுக்கறியே?” இதுல நம்ம தப்பை ஒத்துக்கலை. அதுக்கு ஒரு சப்பைக்கட்டு காட்டறோம்! மேலே என்ன நடக்கும்ன்னு சொல்ல வேண்டியதில்லை!

இரண்டாவதா தப்பு நாம செய்யலை; இருந்தாலும் நாம தவிர்க்க முடியாத காரணமா இருக்கோம். அப்போ? ”’சாரி’, கீழே யாரும் இல்லைன்னு பாத்துட்டுத்தான் தண்ணியை கீழே கொட்டினேன். கரெக்டா அந்த சமயம் பாத்து நீ வெளியே வந்துட்டே! ’சாரி’!” தண்ணியை கீழே பொண்டாட்டி மேல கொட்டினது தப்புதான்; இருந்தாலும் அதை வேணும்ன்னு செய்யலை! இதுல நாம வருந்தறோம் என்கிறது பிரதிபலிக்கலைன்னா”ஆமா! நீ எப்போ கொட்டுவேன்னு காத்துண்டு இருந்து சமயம் பாத்து வெளியே வந்தேன் பாரு!” ந்னு ஆரம்பிச்சு மஹாபாரதமே நடக்கும்.

மூணாவதா, நாம் பொதுவா செஞ்சோம் அது குறிப்பிட்ட நபருக்கு பிரச்சினையா போச்சு. ஒரேயடியா குரைச்சுகிட்டு இருக்கிற நாய்கள் கூட்டம் மேலே கல்லை விட்டு எறிஞ்சோம். நாய்கள் சிதறி ஓடி அப்ப அந்த பக்கம் வந்த ஸ்கூட்டர் ஒண்ணு சக்கரத்துல மாட்டிக்கப்பார்க்க அவர் நிலை தடுமாறி விழுந்து….

நாலாவதா வேணும்ன்னுதான் செஞ்சோம். நம்ம பையன் பொது மீட்டிங்க்ல நாம் மேடையில் உக்காந்து இருக்கிறப்ப ஏதோ தப்பாகருத்துசொல்ல நாம் உடனடியா அதை மறுக்கிறோம். பையனுக்கு மனசு வருத்தப்படுது. இருந்தாலும் நமக்கு அந்த சமயம் வேற வழியில்லை.
இப்படி பல விதமான நிகழ்வுகள் இருக்கலாம்.

பிரச்சினையே நம்மோட ஈகோ நம்மை ’சாரி’ ந்னு சொல்ல விடறதில்லை! உடனடியா நான் ஏன் ’சாரி’ சொல்லணும்? நான் பெரியவன்/ பணக்காரன்/ ரொம்ப படிச்சவன்/ நாதான் இந்த வீட்டு எஜமானன்/ எஜமானி… நான் தப்பே பண்ணலை/ அதுக்கு தகுந்த காரணம் இருக்கு. நான் ஏன் மன்னிப்பு கேக்கணும்? இப்படி ஏதோ ஒண்ணு!

இந்த ஈகோவை கழட்டி வைக்க வைக்க நாம பல விஷயங்களில் இருந்து விடுபடுவோம். பலதும் நம்மை பாதிக்காது. மகிழ்ச்சியோட இருக்கலாம்.
- தொடரும்