Friday 30 December 2016

3. சரியான நேரம்தான் எல்லாமே!

3. சரியான நேரம்தான் எல்லாமே!
ஆயிரத்தெட்டு விஷயங்களைப்பத்தி பேசறப்ப சரியான நேரம்தான் எல்லாமேன்னு சொல்லுவாங்க. அது இந்த மக்களையும் அவங்களோட உணர்ச்சிகளையும் மேலாளறதுல இது ரொம்பவே கரெக்ட்!
ஒத்தர் கோபமாவோ டென்ஷனோடயோ இருக்கறப்ப நாம போய் ஒரு உதவி வேணும்ன்னு கேட்கறதில்லை. வியாபாரம் நல்லா நடக்கலைன்னு தெரியறப்ப யாரும் நிதி உதவி கொடுன்னு போய் கேட்க்கமாட்டாங்க.
இதை பயிற்சி செய்ய கேள்வி கேட்க ஆரம்பியுங்க. அதுக்கு சரியா நேரம், சரியான வாக்கிய அமைப்பு, சரியான மனநிலை இருக்கணும். கூடவே மற்றவரைப்பத்திய உணர்வு மனசில இருக்கணும்.
ஒரு உதாரணம் பார்க்கலாம்.
சக ஊழியரோட ஒரு ப்ராஜக்ட்ல ஈடு பட்டு இருக்கோம். இதுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு அதைப்பத்தி பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய நாள் இன்னைக்கு. அலுவலகத்தில சந்திக்கறோம். அவரோ தன் பக்கத்துல இருக்கறவர்கிட்ட தன் பசங்க நடந்துக்க விதம் குறிச்சு புலம்பிக்கொண்டு இருக்காங்க. அவங்களை கண்ட்ரோல் பண்ணறதைப்பத்தி; அவங்களோட இயலாமைதான் முக்கிய விஷயம்.
நாம போய் உடக்கர்ந்துக்கறோம். அவங்க புலம்பலை நிறுத்திட்டு நம்மை பார்க்கறாங்க.
இப்ப நாம் என்ன சொல்லணும்?
ஹிஹிஹி அந்த ப்ராஜக்ட் சமாசாரம் … என்ன ஐடியா பண்ணி இருக்கீங்க?”
அவங்க நம்மை வினோதமான ஜந்துவை பார்க்கிறா மாதிரி பார்க்கிறாங்க. தலையை தொங்கப்போட்டுக்கறாங்க. நம் உரையாடல் முடிஞ்சுடுத்து.
நம்மை பொருத்த வரை? இது சரியான நாள்தான்; முன்னேயே முடிவானதுதானே? கேள்வியும் சரிதான். அதுதானே கேட்க வேண்டியது? ஆனா… ஆனா? ஆனா அடுத்த நபரை பொருத்த வரை நேரம், கேள்வி, மனநிலை எதுவுமே சரியில்லே.
அதனால நினைவு வெச்சுக்க வேண்டியது ஒரு பொது காரியம் நடக்கணும்ன்னா நாம சரியா இருந்தா மட்டும் போறாது. ‘மத்தவங்க’ என்கிறது ஒரு முக்கியமான சமாசாரம்.
என்ன செஞ்சு இருக்கலாம்?

அடப்பாவமே! ரொம்ப கஷ்டம்தான். நான் ஏதாவது உதவி பண்ண முடியுமா?” ந்னு கேட்டிருக்கலாம். நிஜமாவே முடிஞ்சா உதவி செய்ய முயற்சிக்கலாம். அவங்க கொஞ்சம் சுதாரிச்சுக்கொண்டு சரியான நிலமைக்கு வந்த பிறகு வேறு ஏதாவது விஷயம் கொஞ்சம் பேசிட்டு “இப்ப உங்க நிலைமை கொஞ்சம் பிரச்சினைதான், இப்ப இது பத்தி விவாதிக்கறது உசிதமா இல்லாட்டாலும், வேலை நடக்கணுமே? அதனால நம்ம ப்ராஜக்ட் பத்தி கொஞ்சமா பேசலாமா? ஏதேனும் யோசிச்சு இருக்கீங்களா? விரிவா அப்புறம் பேசிக்கலாம்….. இந்த ரீதியில கொண்டு போயிடலாம்.  

Thursday 29 December 2016

2. உடல் மொழியை கவனியுங்க!

2. உடல் மொழியை கவனியுங்க!
போக்கர்ன்னு ஒரு சீட்டாட்டம். அதுல முக்கியமான திறமை என்னன்னா அடுத்தவர் உடல்மொழியை கவனிக்கறது. அவருக்கு கிடைச்ச சீட்டு நல்லா இருக்கா இல்லை மோசமான சீட்டா? இதை கண்டுபிடிக்க அவரோட உடம்பு குனிஞ்சு இருக்கா, நிமிர்ந்து இருக்கா, இறுக்கமா இருக்கா, கண்கள் என்ன சொல்லுது; கைவிரல்கள் என்ன சொல்லுது, முக பாவனை எப்படி இருக்கு… இப்படி ஆயிரத்தெட்டு விஷயங்களை கவனிப்பாங்க. இதன் மூலம் அவங்க செய்யற ஊகம்தான் அவரோட வெற்றியை நிர்ணயிக்குது. இரவு திரும்பி போறப்ப காலி பாக்கெட்டோட போவாரா இல்லை நிரம்பி வழியற பாக்கெட்டோட போவாரான்னா முடிவு செய்யறது இந்த திறமைதான். இவங்க செய்யற ஊகம் ஆசரியமா இருக்கும். இந்த ஆசாமி ரொம்ப கான்பிடெண்டா இருக்காரே. நல்ல கார்டுன்னு நாம நினைச்சா இவங்களோ “இல்லப்பா, ஓவரா கான்பிடெண்ட்; இது வேஷம். மோசமான கார்ட்” ம்பாங்க!
நாம இவங்க லெவலுக்கு திறமையோட இல்லாட்டாலும் ஓரளவாவது இந்த திறமையை வளத்துக்கணும். ஏற்கெனெவே மஹா டென்ஷனோட இருக்கிற ஆசாமிகிட்டே நாம பாட்டுக்கு தடால் புடால்ன்னு பேசினா நாம போற காரியம் வெற்றியடையும்ன்னு நினைக்கறீங்க?
உச்சஞ்தலை முதல் கால் வரைக்கும் உடல் மொழி எப்பவும் பேசிகிட்டே இருக்கு. நாம்தான் சரியா கவனிக்கறதில்லை.
கண்களை பாருங்க. அவை ஆயிரம் சேதி சொல்லும். அதுக்குன்னு யாரையும் முறைச்சுப்பாக்காதீங்க!
பொய் சொல்கிறவங்க பொதுவா கண்களை நேருக்கு நேர் சந்திச்சு சொல்ல முடியாது. ஒண்ணு அடிக்கடி கண்களை இமைப்பாங்க அல்லது இங்கே அங்கேன்னு பார்ப்பாங்க.
இவரோட புன் சிரிப்பு போலியா உண்மையா? கண்கள்கிட்ட கவனியுங்க. கண்ணோரத்துல ஒரு சுருக்கம் இருந்தா அது உண்மை, இல்லைன்னா அனேகமா பொய்.

தோள்கள் நிமிர்ந்து இருக்கா லோசா சாயுதா? கைகள், கால்கள் எல்லாம் சாதாரணமா இருக்கா இல்லை நடுக்கம் இருக்கா? இப்படி பல விஷயங்கள் கவனிக்க இருக்கு. இது தனி பெரிய சப்ஜெக்ட். அதனால முடிச்சுக்கலாம்.

Wednesday 28 December 2016

1. பெயர் சொல்லி அழையுங்கள்.

1. பெயர் சொல்லி அழையுங்கள்.
தாத்தா/பாட்டி பெயரை வைத்தார்களோ அபிமான நடிகர்/நடிகை பெயரை வைத்தார்களோ பெயர் என்பது ஒருவருடைய அடையாளமாகி விட்டது. நீ யார் என்று கேட்டால் பலரும் தன் பெயரைத்தான் சொல்கிறார்கள். உண்மையில் அந்த கேள்விக்கு பதில் என்ன என்று தத்துவத்துக்குள் நாம் போக வேண்டாம்!
எங்க ஊர்ல ஒரு டாக்டர்.
மத்த டாக்டர்கள் ….. ? அவருக்கு என்ன தெரியும்? ம்பாங்க.
ஆனா அவங்களுக்கு தெரியாத ஒண்ணு இவருக்கு தெரிஞ்சு இருந்தது!
இவர் கொஞ்சம் வித்தியாசமான ஆசாமி. நோயாளியை பெயர் சொல்லி அழைப்பார்

என்ன ராமசாமி எப்படி இருக்கீங்க? ந்னு விசாரிப்பார். இப்படி விசாரிக்கறதிலேயே நோயாளிகள் மகிழ்ந்து போய்விடுவார்கள்.
சார் எனக்கு நாலு நாளா…
உன் ரெண்டாவது பொண்ணு சாந்திய நெல்லிக்குப்பத்தில கட்டிக்கொடுத்தியே எப்படி இருக்கா?
நல்லா இருக்கா சார்! இப்ப நாலு மாசம்
வெரி குட்! உன் தம்பி பையன் சரவணன் சவுதில வேலைக்கு போனானே, நல்ல வேலையா கெடச்சுதா?
இப்படி அஞ்சு நிமிஷம் போகும்!
அப்புறமாத்தான் பேஷண்ட் தன் பிரச்சினையை சொல்ல முடியும். மருந்து எழுதி கொடுப்பார். சரியாயிடும்.
இப்படி எல்லாரையும் எப்படி நினைவு வெச்சுக்கறீங்கன்னு ஒரு தரம் கேட்டேன். சிரிச்சுண்டே அது ‘காட்ஸ் கிஃப்ட்’ ந்னார்!

எல்லாரையும் நினைவு வெச்சுக்க வேணாம். ஒத்தரை நமக்குத்தெரிஞ்ச அவரோட பேரை சொல்லிக்கூப்பிட்டாலே போதும்.
அப்படி அதுல என்ன இருக்குன்னு கேட்கறீங்களா? யோசிச்சுப்பாருங்க. மேலே சொன்ன உதாரணத்துப்படி டாக்டர்கிட்ட போனா அவர் பேரைச்சொல்லி எப்படி இருக்கீங்கன்னு விசாரிச்சா எப்படி இருக்கும் நமக்கு? உச்சி குளுந்து போயிட மாட்டோம்?

அது சரி, எப்படி நினைவு வெச்சுக்கிறது?
அவரை முதல்ல சந்திக்கிறப்ப பேர் கேட்போம் சொல்லுவார், இல்லையா? தொடர்ந்து அவரோட பேசும் போது நாலஞ்சு முறையாவது அவரோட பேர் சொல்லி கூப்பிடணும். அப்ப அடுத்த முறை பார்க்கிறப்ப நினைவு இருக்க சான்ஸ் அதிகம்.


அடுத்த மாசம் முழுக்க யாரைப்பாத்தாலும் அவங்களோட பேரைச்சொல்லி கூப்பிடுங்க. இது இப்போதைக்கு பயிற்சி! ஒரே ஒரு எச்சரிக்கை! சில சமூகங்களில தன் பெயரை சொல்லி யாரும் கூப்பிட்டா அதை அவமானமா நினைக்கிறவங்க இருக்காங்க. அவரோட ஜாதி பெயரை சொல்லிகூப்பிட்டா சந்தோஷப்படுவாங்க! எதுக்கும் ஒரு மிஸ்டரை முன்னாலேயோ அல்லது ஒரு சாரை பெயருக்கு பின்னாலேயோ போட்டுக்கலாம்!  

Tuesday 27 December 2016

சமூக விழிப்புணர்வு

இத்தோட சுய விழிப்புணர்வு, சுய மேலாண்மை இரண்டையும் பார்த்தாச்சு.
அடுத்து மூணாவது.
3. சமூக விழிப்புணர்வு : நான் ஒரு மைக்ரேன் ஆசாமி. இப்பல்லாம் வெகுவாக குறைந்துவிட்டாலும் அவ்வப்போது தலைகாட்டுகிறது. விஷயம் அதில்லை. நான் மைக்ரேனில் அவஸ்தை பட்டுக்கொண்டு இருப்பது என் மன்னிக்கு தெள்ளத்தெளிவாக தெரியும். இத்தனைக்கும் அதன் தாக்கம் கொஞ்சம் குறைந்துபோன பிறகு, பழகிப்போன ஒன்னுந்னு, அது இருந்தாலும் வெளியே நான் பாட்டுக்கு என் வேலைகளை செய்து கொண்டு இருந்தேன். இருந்தாலும் எனக்கு மைக்ரேன் என்பதை மிகச்சரியாக கண்டு பிடித்துவிடுவார்!

ஓட்டலுக்கு போகிறோம். சில சர்வர்கள் தன் கஸ்டமர்களுக்கு என்ன வேணும்ன்னு சரியா கணிப்பாங்க. அதோ அவருக்கு உடனடியா எல்லாத்தையும் கவனிச்சு அனுப்பணும். இந்தப்பக்கம் இவங்க பேச வந்திருக்காங்க. முதல் கோர்ஸ் கொடுத்த பிறகு கண்டுக்காம விடணும். அந்த டேபிள்ல அதிகம் பேசக்கூடாது. இருந்தாலும் உம்மணாமூஞ்சியா ஆர்டர் மட்டும் எடுக்காம சிரிச்சுக்கொண்டே கொஞ்சமா பேசறதை விரும்புவாங்க. எல்லாரும் சாப்பிட டேபிள்ல உட்கார்ந்து இருக்காங்க. இருந்தாலும் அவங்கவங்க தேவையில் எவ்வளோ வேறுபாடு! இந்த சர்வர் ஒவ்வொண்ணும் சரியா கணிச்சு சர்வ் செய்யறதால அந்த ஓட்டலை எல்லாரும் விரும்புவாங்க.

இந்த மாதிரி மக்கள் உருவாக்கி வெச்சு இருக்கிறது ஒரு உச்ச கட்ட சமூக விழிப்புணர்வு.
நாம் நமக்குள்ளேயே பார்த்து நம்மை சரியா புரிஞ்சுக்கறது சுய விழிப்புணர்வு; வெளியே மத்தவங்களை உள்ளே பார்த்து சரியா புரிஞ்சுக்கறது சமூக விழிப்புணர்வு. எவ்வளவுக்கு எவ்வளவு மத்தவங்களை சரியா கணிக்கறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த திறன் மேம்பட்டு இருக்குன்னு அர்த்தம். நாம் மத்தவங்களோட பேசும்போது எவ்வளவு தூரம் அவங்களோட உணர்ச்சிகளோட ட்யூன் ஆகிறோம் என்பது நம்மோட சூழலோட சரியான பார்வையை கணிக்க உதவும். இது உறவுகள் முதற்கொண்டு பலதையும் பாதிக்கும்.
சரி, இதை எப்படி வளர்த்துக்கறது?

கவனிக்கணும். மக்களை கவனிக்கணும். பலவித சூழ்நிலைகளில. க்யூல நிக்கறப்ப, பேசிகிட்டு இருக்கறப்ப, வீதியில நடந்து போறப்ப….. அவங்களோட உடல் மொழி என்ன சொல்லுது? முக பாவனை எப்படி இருக்கு? குரல் தரும் சேதி என்ன? ஆழமா புதைஞ்சு இருக்கற உணர்ச்சிகள் எண்ணங்கள் என்ன? சாதாரணமா கவனிக்காம கடந்து போகிற இதை எல்லாம் கவனிக்க கவனிக்க அவங்களை புரிஞ்சுக்க ஆரம்பிப்போம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா சிலதை தவிர்த்து முக்காலே மூணு வீச உடல் மொழி, முகபாவனை முதலானது தரும் செய்தி ஒண்ணேதான். அது எந்த நாடானாலும் எந்த இனமானாலும் மாறுகிறதில்லை!
ஆனா நாம பார்க்கிற பார்வை சாயம் பூசிய லென்ஸ் வழியா இருக்கக்கூடாது.

இப்படி கவனிக்கறது வெளியே இருக்கிறதை நடக்கிறதை மட்டுமில்லை. இதை செய்யறப்ப நம் ஐந்து புலன்களையுமே கவனிக்க ஆரம்பிக்கிறோம். வழக்கமா இவை என்னதான் கத்தோ கத்துன்னு கத்தினாலும் கூட கவனிக்க மாட்டோம். இப்ப சின்ன சின்ன புலன் செய்திகளையுமே கூட கவனிக்க ஆரம்பிப்போம். நமது இன்ஸ்டின்க்ட் உணர்ச்சிகளையே கவனிக்க ஆரம்பிப்போம். அப்படிச்செய்ய மற்றவர்கள் பார்வை புரிய ஆரம்பிக்கும். அவங்க இடத்தில இருந்துகொண்டு விஷயங்களை கவனிக்கவும் பழகுவோம்.


அடுத்து எப்படி இதை கத்துக்கறதுன்னு உத்திகளை பார்க்கலாம்.

Monday 26 December 2016

16. நிச்சயமாக வரும் மாறுதல்கள்.

16. நிச்சயமாக வரும் மாறுதல்கள்.
லோகத்தில எது நிச்சயமோ இல்லையோ எல்லாமே எப்பவுமே மாறிக்கிட்டேத்தான் இருக்கு என்கிறதுதான் நிச்சயம். நாம் நாளை படுக்கையை விட்டு எழுதுக்கறதே நிச்சயமில்லை என்கிற போது, நாம் நடத்தற நிறுவனம், வியாபாரம், தொழில் எல்லாம் மாறாம அப்படி நல்லா ஓடிகிட்டு இருக்கும் என்கிறது என்ன நிச்சயம்?
பல விஷயங்கள் நம்ம கட்டுப்பாட்டுல இல்லை. ஏன், நம்ம மனசே நம்ம கட்டுப்பாட்டுல இன்னும் இல்லை. ஒரு நேரம் மாதிரி இன்னொரு நேரத்தில இல்லை.
ஒரு காரியம் தடை இல்லாம நடக்க பல காரணிகள் சரியா இருக்கணும். பெரிய நம்பிக்கை வைச்ச பல விஷயங்கள் மாறாம அப்படியே இருக்கும்ன்னு எதிர்பார்க்க முடியாது. நாம முடிஞ்ச வரைக்கும் இதை எல்லாம் கட்டுப்பாட்டில வெச்சுக்க முயற்சி செய்யலாமே ஒழிய எப்பவும் முழுக்க கட்டுப்பாட்டில வைக்க முடியாது. அதனால ஒரு நாள் இல்லை ஒரு நாள் மாற்றங்கள் வந்தே தீரும்,
அப்படி மாற்றம் வரும் போது நாம அதிர்ச்சிக்கு உள்ளாகாம இருக்க என்ன செய்யணும்? மாற்றத்தை எதிர்பார்க்கணும். என்ன மாற்றம் வரக்கூடும்? அப்படி வந்தா என்ன செய்யணும்? இதை முன் கூட்டியே யோசிச்சு வெச்சா பிரச்சினை இராது. மாற்றம் வரும் போது பெரிய அளவில அதிர்ச்சி ஏற்படாது. அதன் கூடவே வரக்கூடிய பயம் முதலியனவும் வராது. ஏற்கெனெவே என்ன செய்ய முடியும்ன்னு யோசிச்சு வெச்சிருக்கறதால ‘என்ன செய்வோம்?’ ன்னு ஒரு திகைப்பு வராது. அனாவசியமான மன உளைச்சல்களை தவிர்க்கலாம்.

இதற்காக வாரம் ஒரு முறை சில நிமிஷங்கள் ஒதுக்கினாக்கூட போதும். என்னென்ன மாற்றங்கள் வரலாம். அப்படி வந்தா என்ன செய்யலாம். ஒரு பேப்பர்ல எழுதிப்பாருங்க.

Friday 23 December 2016

15. உடற்பயிற்சி

15. உடற்பயிற்சி
இது நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும் “செய்ப்பா!” ந்னு யாரானா சொல்ல வேண்டி இருக்கு! பள்ளி, கல்லூரி காலங்களில நாம் பாட்டுக்கு நிறைய விளையாடுவோம். அப்ப தனியா உடற்பயிற்சின்னு வேண்டி இருக்காது. அப்புறம் படிப்பு முடிச்சு வேலைன்னு போகிற காலத்தில வாழ்க்கை ரொடீனே மாறிப்போகும்! (இந்த காலகட்டத்தில தப்பினாக்கூட பிறகு திருமணம்ன்னு ஒண்ணு ஆன பிறகு மாட்டிப்போம்!) அப்ப குறிப்பா இல்லைன்னா இதை நிறுத்திடுவோம். யாருக்கு நேரம் இருக்கு? பிறகு டாக்டர் சொல்லணும் உடற்பயிற்சி தேவைன்னு! அது வரைக்கும் நடக்காது. எப்போதேனும் ஏதேனும் படிக்கறப்ப அட ஆமா, உடற்பயிற்சி திருப்பி ஆரம்பிக்கணும்ன்னு நினைப்போம்.

தூக்கத்துக்கு அடுத்ததா ஏதேனும் நமக்கு ஓய்வு கொடுத்து ரிஃப்ரெஷ் செய்து மனசை சுத்தப்படுத்தறதுன்னா அது உடற்பயிற்சிதான்! விளையாட்டிலேயோ பயிற்சியிலேயோ மனசு ஈடுபடும் வரை வேற அசுத்தங்கள் அங்க படியாது. வயசாச்சு முன்னே மாதிரி ஆடி ஓடி பயிற்சி செய்ய முடியாதுன்னாலும் தோட்ட வேலை, யோகா, மசாஜ், பூங்காவில நடைன்னு ஏதாவது இருக்கணும். இதெல்லாம் உடம்பில எண்டார்பின் செரோடினின் ந்னு பல ரசாயனங்களை உலவ விட்டு நம்மை சந்தோஷமாகவும் விழிப்புடணும் இருக்கச்செய்யும். நல்ல முடிவெடுக்கறது, திட்டமிடறது, ஒருங்கிணைக்கிறது, அறிவு பூர்வ சிந்தனைன்னு சில இடங்களில மூளையை தூண்டுது.

நேரம் இல்லைன்னு சொல்லறதே தப்பு. சாப்பிட நேரம் இல்லைன்னு சொல்லறதில்லை. தூங்க நேரம் இல்லைன்னு சொல்லறதில்லை.


வாய் சுத்தமா இருக்க பல் தேய்க்க நேரம் இல்லைன்னு சொல்லறதில்லை. அது போலவே இது மூளையை சுத்தம் செய்து ரீசார்ஜ் செய்யுதுன்னு நினைச்சா நாம நேரம் ஒதுக்குவோம்.

Thursday 22 December 2016

14. குருக்கள் பலர்....

14. ஸ்ரீமத் பாகவதத்தில உத்தவ கீதைன்னு ஒரு பகுதி. அதுல யயாதியின் மகன் யது அவதூதரான சாதுவை கேட்கிறான்: எப்படி இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? உங்க குரு யார்? அதுக்கு அவர் பதில் சொல்லறார் “மன்னா! எனக்குப் பல ஆசாரியர்கள். அவர்களிடம் கற்றுக் கொண்ட பாடத்தின் பலத்தில்தான் நான் உலகப் பற்றின்றி இவ்வாறு அவதூதனாகத் திரிந்து கொண்டிருக்கிறேன். என் குருக்கள் யார் தெரியுமா? மண், வாயு, ஆகாயம், நீர், அக்னி, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டிற்பூச்சி, தேனீ, யானை, தேன் எடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் வேசி, குரா என்னும் பறவை, பாலகன், கன்னிப்பெண், அம்புதொடுப்பவன், ஸர்ப்பம், சிலந்திப் பூச்சி, குளவி போன்ற இருபத்து நான்கு ஆசிரியர்கள்! ” இப்படிசொல்லி கற்ற பாடங்களை சொல்றார்.

நாமும் விழிப்போட இருந்தா பல குருமார்கள்கிட்டேந்து பாடம் கற்றுக்கலாம்.
ஒரு மீட்டிங்க் போறோம். நம்ம கருத்தை யாரோ மறுத்து பேசறாங்க. நாம் என்ன செய்வோம்? கத்தி கேடயத்தை எடுத்துக்கிட்டு சண்டையில இறங்கிடுவோம்! அவர் மறுத்து பேசிகிட்டு இருக்கறப்பவே கேட்கறதை நிறுத்தி அதுல உண்மை ஏஎதும் இருக்கான்னு ஆராயாம, பதிலை தயார் செய்வோம். அந்த ஆசாமி நிறுத்தின உடனே நாம் திட்ட ஆரம்பிக்கணுமே!


மாறா இந்த ஆசாமி சொல்லறதுல நமக்கு ஏதும் கிடைக்குமான்னு பாத்துகிட்டே இருந்தா சில உண்மைகள் புலப்படலாம். நாம கார்ல போறப்ப நடுவில சர்ர்ர்ன்னு குறுக்கே புகுந்து போகிற அறிவு கெட்ட முண்டம் கூட நமக்கு சொல்ல ஏதோ இருக்கு! அது இன்னும் பொறுமை வேணும் என்கிறதா? அல்லது நாம அவ்வளோ அவசரத்தில் இல்லாம இருக்க கொடுத்து வெச்சிருக்கோம் என்கிறதா? ஏதோ ஒண்ணு! குறைஞ்சது எப்படி எல்லாம் இருக்கக்கூடாதுன்னு கத்துக்கலாம்! அதே சமயம் நாம் மனக்கட்டுப்பாட்டிலேயும் இருக்கலாம்.

Wednesday 21 December 2016

13. வேற யார்கிட்டேயாவது பேசுங்க!

13. வேற யார்கிட்டேயாவது பேசுங்க!

உணர்ச்சிகளை ஒதுக்கிட்டு புத்தி பூர்வமா செயல்படணும் என்கிறது சரிதான். ஆனா இங்கே ஒரு பிரச்சினை இருக்கே!
என்ன செய்யலாம்ன்னு நமது புத்திக்கு எட்டியதைதானே யோசிப்போம். ஒரு வேளை நாம அவ்ளோ புத்திசாலியா இல்லைன்னா?
அத்தோட ஒரு கோணத்தில யோசிக்க ஆரம்பிச்சா அதே எப்பவும் நமக்கு நல்லதா தோணும்; மற்ற வழிகளை போதிய அளவுக்கு யோசிக்க மாட்டோம்.
என்ன செய்யலாம்?
நம்பிக்கைக்கு பாத்திரமான, பிரச்சினைல உணர்ச்சி பூர்வமா சம்பந்தம் இல்லாத ஒத்தர்கிட்டே இந்த விஷயம் பத்தி பேசலாம். அவர்கிட்ட இப்படி இப்படி பிரச்சினை இருக்கு. எனக்கு தெரிஞ்சபடி இப்ப இப்படி எல்லாம் தேர்வு இருக்கு. இதுல இப்படி செய்யலாம்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
இப்படி பேச முடிஞ்சாலே நமக்கு பாதி மன இறுக்கம் குறைஞ்சுடும். அவரும் சில வழிகளை முன் வைக்கக்கூடும். பிறகு நாம் யோசிச்சு நம்ம பொறூப்பில முடிவெடுக்கலாம். (பலரும் செய்யறது இங்கே ஒரு முடிவு எடுத்துவிட்டு, தான் நினைச்சபடியே சொல்லறவங்களை கிடைக்கும் வரை தேடி சொல்லிட்டு அப்புறம் செய்யறது. தப்பா போச்சுன்னா திட்ட ஒரு ஆள் இருக்கே!)
முக்கியமான விஷயம் என்னன்னா தேர்ந்தெடுக்கற நபருக்கு நாம் கேட்கிற விஷயத்தில் உணர்ச்சி பூர்வமான சம்பந்தம் இருக்கக்கூடாது என்கிறதுதான். அப்படி இருந்தா அவர் சொல்கிறதுல அவரோட‘சொந்த அபிப்ராயம்’ கலந்து இருக்கும். அது அவ்ளோ சரியா இருக்கும்ன்னு சொல்ல முடியாது.
அதே மாதிரி நாம் எப்ப எது சொன்னாலும் ‘கரெக்டு’ ந்னு சொல்ற ஆசாமியா இருக்கக்கூடாது! மாறா ‘கோணக்கழி’ போடற ஆசாமியா இருந்தா பரவாயில்லை! அந்த நேரத்துக்கு அது கசப்பா இருந்தாலும் வித்தியாசமான கோணங்கள் கிடைக்கும்!

Tuesday 20 December 2016

12. உடல் மொழியும் உணர்ச்சியும் ஒத்துப்போகிறதா?

 12. உடல் மொழியும் உணர்ச்சியும் ஒத்துப்போகிறதா?
என் பெரியப்பா ஒரு கதை சொல்லுவார். பல வருஷங்களூக்கு முன்னே நடந்தது. ஒரு தனவந்தர் தன் வீட்டில் திருடு போய்விட்டதுன்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு கடிதம் எழுதி வேலைக்காரன்கிட்ட கொடுத்து அனுப்பினார். அதை போலீஸ் ஸ்டேஷன்ல வாங்கி வேலைக்காரன்கிட்ட விவரம் கேட்டுகிட்டு இருந்தாங்க. அந்த சமயம் ஒரு கேஸ் விஷயமா வேறு இடத்திலிருந்து ஒரு இன்ஸ்பெகடர் அங்கே வந்தார். நடக்கறதை பாத்துட்டு சிரிச்சுண்டே “இந்த வேலைக்காரந்தான் திருடன்; பிடிச்சு சரியான படி விசாரிங்க” ன்னு சொன்னாராம். ’விசாரிப்ப’ வேலைக்காரனும் குற்றத்தை ஒப்புக்கொண்டானாம்.
சில சமயம் குற்றவியல் போலீஸார் சிலரை சந்தேகத்துல பிடிச்சு விசாரிப்பாங்க. பிடிச்ச ஆசாமி உண்மையத்தான் சொல்றாரான்னு எப்படி கண்டு பிடிக்கறது? உடல் மொழின்னு ஒண்ணு இருக்கு. கைகள் கால்கள், பேச்சு, முகம் இதெல்லாமும் பேசும். அதன் மொழி தெரிஞ்சவங்க அதை சரியா படிக்க முடியும்! இதுக்கும் காட்டுகிற/ காட்டறதா நினைக்கிற உணர்ச்சிக்கும் ஒத்து போறதான்னு பார்க்கணும். ஒத்துப்போச்சுன்னா உண்மை; இல்லைன்னா பொய். தேர்ந்த நடிகரால மட்டுமே இதை பொய்யா இருக்கறப்ப உண்மை போல காட்ட முடியும்.
நாம சரியா சுய மேலாண்மை செஞ்சு கொண்டு இருந்தா உடல் மொழி உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். மேலாண்மை சரியில்லைன்னா உணர்ச்சி நம்மை மேலாளும். அப்ப உடல் மொழி நம்மை காட்டிக்கொடுத்துடும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தணும்ன்னு சொல்லிண்டு குதி குதின்னு குதிச்சுகிட்டு இருந்த ப்ரெஞ்சுக்காரர் ஏனோ நினைவுக்கு வரார்!
2009 ல ந்யூயார்க் விமான நிலையத்தை விட்டு கிளம்பின ஒரு விமானம் ஒரு பறவைக்கூட்டத்தில் நுழைந்து விட்டது. பறவைகள் எஞ்சின்களில் மாட்டி இரண்டு எஞ்சின்களும் செயல் இழந்தன. விமானத்தை ந்யூயார்க் ஹட்சன் நதியில் இறக்கினார் பைலட் சல்லன்பெர்கர். சரியான கோணத்தில வேகத்தில் இறக்கலைன்னா விமானம் உடஞ்சு சிதறிடும். இருந்தாலும் தன் மூளையில ஒலிக்கற எச்சரிக்கை மணி எல்லாத்தையும் ஆஃப் செஞ்சுட்டு விமானத்தை சரியா இறக்கறதில கவனம் செலுத்தி வெற்றி பெற்றார். உயிரிழப்பு எதுவும் இல்லை. https://en.wikipedia.org/wiki/US_Airways_Flight_1549

உணர்ச்சிகளை ஆள விட்டு இருந்தா உடலும் இந்த அவசர வேலைக்கு ஒத்துழைச்சு இருக்காது. இந்த மாதிரி சமயங்களில என்னத்தான் பயமா இருந்தாலும் அதை வலுக்கட்டாயமா ஒதுக்கிட்டு செய்ய வேண்டியதில கவனம் செலுத்தனும்.

Monday 19 December 2016

11. என்ன செய்ய முடியும்ன்னு பாருங்க!

 11. என்ன செய்ய முடியும்ன்னு பாருங்க!
முடியாததுன்னு எப்பவும் இருக்கவே இருக்கும், அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன் அதிலேயே கவனமா இருக்கணும்?
செய்திப்பத்திரிகையை பாருங்க. முக்காலே மூணு வீசம் ‘கெட்ட’ செய்திகளாவே இருக்கும். இதையே படிச்சுகிட்டு இருந்தா லோகத்திலே நல்லதே நடக்கலைன்னு தோணும். நிஜமா அப்படியா இருக்கு? இது ஒரு மூளைச்சலவை!
வாழ்க்கை நாம் எதிர் பார்க்கிறாப்போல நல்லதா இல்லை. அதுக்கு என்ன செய்ய முடியும்? “உன்னால ஒண்ணும் செய்ய முடியாது. அது உன் தலையெழுத்து. எல்லாம் கர்மாப்படி விதிப்படிதான் நடக்கும் ”
இது பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லுவதுதான். என்னவோ அவங்ககிட்ட ரகசிய டாக்குமெண்ட் இருக்கா மாதிரியும் அதுல அப்படி எழுதி இருக்கா மாதிரியும்!
அவங்களுக்கு தெரியாதது கர்மா/ விதி என்கிறது முன்னாடி செஞ்சதுக்கு மட்டுமில்லே; இப்ப செய்யறதையும் சேர்த்துதான் பலன் கொடுக்கும்.
அவங்க சொல்லாதது ஒவ்வொரு முறையும் நமக்கு சில தேர்வுகள் இருக்கும் என்கிறதுதான். வரது வரும்தான். ஆனா என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு வருகிற விஷயங்களுக்கு தகுந்தாப்போல செயலாற்றிக்கொண்டு போக வேண்டியதுதான். எனக்கு ஏஸ் ஸ்பேட் வரலை; நான் ஆட மாட்டேன்னு எல்லாம் சொல்ல முடியாது. இருந்தாலும் நம் பார்வையில சமாசாரங்க என்ன ஏதுன்னு யோசிக்கலாம்தானே? இது அதால நாம் எப்படி பாதிக்கப்படுவோம் என்பதை மாத்தும். நம்மால் ஒண்ணும் முடியாதுன்னு விட்டுப்போக வேண்டியதில்லை.
அரசு அலுவலகங்களுக்குப்போறோம். ஏதோ காரியம் ஆக வேண்டி இருக்கு. சாதாரணமா அங்கே இருக்கறவர் என்ன சொல்லுவார்? இதை ஏன் செய்ய முடியாதுன்னுதான் விளக்குவார். (சரி, சரி, எல்லா ஆஃபிஸ்லேயும் அப்படி இல்லே. எல்லாரும் அப்படி இல்லே.) ஏன்? வேலை செய்யறதுல இஷ்டமில்லை! அதுக்கு ஏதாவது மோடிவேஷன் வேணும். அது இருந்தா உடனே எப்படி செய்ய முடியும்ன்னு சொல்லிடுவார்.

நம்மை நாமே மோட்டிவேட் பண்ணிக்க வேண்டியதுதான்! ஒரு விஷயம் எதிர்படும்போது அதுல இருக்கற எதிர்மறை சமாசாரங்களை மட்டும் பார்க்காம முழுக்கவே பார்க்க கத்துப்போம்! சிலது மேல நமக்கு கட்டுப்பாடோ ஆளுகையோ இராது. அதுக்காக? மீதி இருக்கறதுல நாம செய்யக்கூடியது என்னன்னு பார்க்கலாம்.

Friday 16 December 2016

10. ’நல்லா’ தூங்குங்க!

 10. ’நல்லா’ தூங்குங்க!
சுய மேலாண்மைக்கு தேவையானது பொறுமை, நெகிழ்ந்து கொடுப்பது, விழிப்புடன் இருப்பது. இது எல்லாம் சரியான தூக்கம் இல்லாம போச்சுன்னா காணாமப்போகும். இவ்வளவு நேரம் என்கிறது மட்டுமில்லை. நல்லா ஆழ்ந்து தூங்கறோமா?

ஆழ் தூக்கத்திலதான் நம்ம மூளை தன்னை டீஃப்ராக் (defrag) செஞ்சுக்கும்! அன்னய நடப்பில கிடைச்ச தேவையான நினைவுகளை வெச்சுக்கொண்டு வேண்டாததை நீக்கி… ந்யூரோ கெமிக்கல்ஸ் எல்லாம் ரீ ஜெனரேட் ஆகி… காலை எழுந்துக்கும் போது ஃப்ரெஷா எழுந்துப்போம். சரியான தூக்கம் இல்லைன்னா எழுந்துக்கும்போதே ஒரு எரிச்சல், அயர்வு…. ஏண்டா விடிஞ்சதுன்னு ஒரு உணர்வு!

சில குறிப்புகள்: மதிய உணவுக்கு முன்னால குறைஞ்சது 20 நிமிட சூரிய ஒளி நம் கண்களில படட்டும். (கூலிங் க்ளாஸ் போட்டுண்டு பார்க்கிறதெல்லாம் கணக்கில வராது!) அப்பத்தான் நம்மோட உள்ளே இருக்கிற கடிகாரம் தன் நேரத்தை சரி செஞ்சுக்கும்!
தூங்கும் முன்னே 2 மணி நேரமாவது கணினி திரையை பாராம, செல்போன்ல நோண்டாம இருக்கணும்.

பெட்ல படுத்துண்டு டிவில அழுவாச்சி சீரியல் எல்லாம் பார்க்ககூடாது. பெட் படுத்துத்தூங்க மட்டுமே!

கஃபீன்! காலையில எட்டு மணிக்கு ஒரு காபி குடிக்கிறோம். ஆறு மணி நேரத்தில உடம்பில இருக்கற கஃபீன்ல பாதி உடம்பால வெளியேற்றப்படும். அடுத்த ஆறு மணி நேரத்தில? அதுல பாதி வெளியே போகும், அவ்ளோதான். அதாவது காலை 8 மணிக்கு குடிச்ச காபில இருக்கற கஃபீன்ல கால்வாசி ராத்திரி எட்டு மணிக்கு இருக்கும்! கபீனுக்கும் தூக்கத்துக்கு எட்டாம் பொருத்தம்! அதனால மதியத்துக்கு மேலேயாவது தவிர்க்கவும். டீ பரவாயில்லை.

இதுல காபி குடிச்சுட்டு உடனே தூங்கற என் தம்பி எல்லாம் எக்செப்ஷன். ஒவ்வொத்தரும் ஒரு மாதிரி, இல்லையா?

Thursday 15 December 2016

9. கனவு காணுங்கள்!

 9. கனவு காணுங்கள்!

சுய மேலாண்மையை கத்துக்கறதுக்கு நிறைய பயிற்சி தேவை. ஆனா மிகவும் கஷ்டமான, உங்களால சமாளிக்க முடியாத நிலை எல்லாம் அடிக்கடி வரதில்லை. எப்போதாவதுதானே வரது? அதுக்குத்தேவையானதை எப்படி பயிற்சி செய்ய முடியும். சிரமம்தான்….. கனவு காணத்தெரியாத வரை!

நாம கண்ணால பார்க்கிறதுக்கும் மனசில கற்பனை செஞ்சு பார்க்கிறதுக்கும் மூளைக்கு வித்தியாசம் காணாது! எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்க்கிறப்ப இது புரியும். அருமையான சூரிய உதயம் ஒண்ணை பார்க்கும் போது இருக்கும் நிலையும் அதை கற்பனை செய்யும் போது இருக்கும் நிலையும் ஒண்ணாவே இருக்கும்! மூளையின் அதே பகுதிகளிலதான் செயல் தோணும்.

எது நம்மை அதிகம் செயலிழக்க வைக்குது? அதிக துன்பம் தருது? அதை ஒரு நாடகமா கற்பனை செய்து பாருங்க.


இதுக்கு அதிகம் சந்தடி இல்லாத அமைதியான இடம் நல்லது. ம்ம்ம்ம் படுத்த பிறகு தூங்கும் முன்னேன்னு வெச்சுக்கலாமா? சௌகரியமா படுத்துக்கொண்டு நல்லா மூச்சு இழுத்துவிட்டு கற்பனையை ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில மேலதிகாரிகிட்ட பயப்படறோமா? ரைட்

இப்ப கற்பனையை ஆரம்பிக்கிறோம். வேலையை முடிச்சுக்கொண்டு பேப்பரெல்லாம் எடுத்துக்கொண்டு அவர் அறைக்குப்போறோம். பேப்பரை சரியா படிக்காம அவர் ‘காச் மூச்’ன்னு கத்தறார். நாம அமைதியா ‘இல்லை சார்’ ந்னு ஆரம்பிச்சு விளக்கறோம். அவரும் அதை ஏத்துக்கறார். ‘குட்ஜாப்’ ந்னு பாராட்டறார். நாம புன்னகையோட சந்தோஷமா திரும்பி வரோம். அஹ! புரியறதில்லையா? கனவு காணச்சொன்ன கலாம் வாழ்க!

Wednesday 14 December 2016

8. எண்ணங்கள்

8. எண்ணங்கள் 
ஆராய்ச்சிகள் சொல்லறது என்னன்னா ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 எண்ணங்கள் வந்து போறது! ஆச்சரியமா இருக்கா? அப்படி தோணலையே? எப்படி?
மூச்சு விடறது எப்பவுமே நடக்கறது; ஆனா அது எவ்வளோ தரம்ன்னு நம்ம கவனத்திலேயா இருக்கு? அது போலத்தான். தேவையானா நாம மூச்சு விடறதை கவனிக்கவும் முடியும்; எண்ணம் வந்து போறதை கவனிக்கவும் முடியும்! அதை கவனிக்கறதில்லே என்கிறதால் அது நினைவில இல்லாம போகிறது. ஆனா ஒவ்வொரு எண்ணமும் அதோட ரசாயன விளைவுகளை உண்டு செய்யவே செய்யும்! இது நம் உடம்பு எப்படி இருக்கு, மனசு எப்படி இருக்கு என்கிறதை நிர்ணயம் செய்யும். உண்டாகிற கெமிகல்களோட விளைவு நேரம் குறைவானதுதான். அதனால அடுத்த எண்ணம் அதோட விளைவை உண்டாக்கும்! அப்ப இருந்த விளைவா அது இருக்கலாம் அல்லது வேற விளைவாவும் இருக்கலாம். இப்படி மாறி மாறி நடக்கலாம்.
இந்த எண்ணங்கள் எல்லாத்தையும் மானிட்டர் பண்ண முடியுமா? ஒரு நாளைக்கு சுமார் 50000? சான்ஸே இல்லை! பின்னே என்ன செய்யறது?
அடிக்கடி நமக்கு நாமே பேசிக்கறோம். அது வெளியே - வெளியே என்ன? நமக்கே! - தெரியறதில்லை. வெளியே தெரியற மாதிரி தனக்குத்தானே பேசிக்கறவங்களை பைத்தியம்ன்னு சொல்வாங்க. ஆனா நாமோ ரகசியமா பைத்தியமா இருக்கோம். கிடக்கட்டும்!
பல வித எண்ணங்கள் வந்துபோறது. சிலது எதிர்மறையா இருக்கும். சிலது நேர் முறையா இருக்கும். சில சமயம் “ச்சூ! சும்மா இரு, இப்படி செய்ய வேணாம்” ந்னு சொல்லிப்போம். ஒரு வேலை நல்லா செஞ்சுட்டா “சபாஷ்டா கண்ணா!” ந்னு சொல்லிப்போம். ”நீ செஞ்சது முட்டாள்தனமான காரியம்!” ந்னு கடிந்துப்போம். “அச்சோ! இப்படி ஆயிடுத்தே!” ந்னு வருத்தப்படுவோம். இந்த மாதிரியான எண்ணங்கள்தான் கிளைவிட்டு வளர்ந்து உணர்ச்சிகளை மேலுக்கு கொண்டு வந்து எல்லா ரகளையும் செய்யும்! அதே போல உணர்ச்சிகளை அமுக்கி அல்லது வடிகால் போட்டு மடை மாற்றவும் செய்யும்.
ஆகவே இது மேல நமக்கு மேலாண்மை வந்தா போதும். இயல்பாவே வர இந்த மாதிரி பேச்சுக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நமக்கு நாமே திட்டத்துல நாமே நம்மோட கவனத்தோடவே பேச ஆரம்பிக்கலாம். “விட்றா, இந்தப்பய ஏதோ உளறிண்டு இருக்கான்!” , “இவன் சொல்லறதுலே ஏதோ அர்த்தம் இருக்கும் போலிருக்கு. யோசிக்கலாம்”; “இப்போதைக்கு எதிர்வினை வேணாம்!” - இந்த ரீதியில நமக்கு நாமே நேர் முறையா பேசிக்க ஆரம்பிச்சா நம் உணர்ச்சிகளை ஒரு கட்டுக்கு கொண்டுவர நம்மால முடியும்! நாளடைவில நமக்கு நாமே பேசிக்கறதும் நம்ம கவனத்துக்கு வந்துடும்!
சில வழக்கமா வர பேச்சுக்கள் இப்படி இருக்கலாம். அவற்றை மாத்திக்கொண்டா நல்லது.
நீதிபதி மாதிரி ஜட்ஜ்மெண்ட் கொடுத்துக்கறது ஒண்ணு. ‘நான் ஒரு முட்டாள்!’ என்கிற மாதிரி. இதை சரியா சொல்ல பழகணும். “நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்”
இன்னொன்னு: ‘எப்பவுமே இப்படி செய்வேன்’, 'எப்பவும் இப்படி செய்ய மாட்டேன்!’ - இதை இந்த ஒரு முறை இப்படி செய்வேன் அல்லது சில சமயம் இப்படி செய்வேன்னு மாத்திக்கலாம். நம்மோட செயல்கள் ஒவ்வொண்ணும் அந்தந்த நிலைக்கு தகுந்தபடி தனித்துவமானது. தப்பா நடக்கறதை எப்பவுமே இப்படி தப்பா செய்யறேன்னு நினைச்சுக்கொண்டு நம்மை நாமே சாட்டையால அடிச்சுக்கக்கூடாது!


இன்னொருத்தரை மேல பழியை போடறதும் எதிர்மறையா நமக்கு நாமே பேசிக்கிற பேச்சும் கை கோர்ந்துண்டு போகும். ‘இது எல்லாம் நான் செஞ்ச தப்பு’ என்கிறது முக்காலே மூணுவாசி முறை சரியா இருக்காது, நாமும் மத்தவரும் சேர்ந்தே ஒரு தப்பான காரியத்துக்கு பொறுப்பு. யாருக்கு எவ்ளோ பொறுப்பு என்கிறது வேணா மாறலாம். நாம செஞ்ச தப்புக்கு நாம் பொறுப்பு ஏத்தா போதும். எல்லாத்தையும் நம்ம தலையில போட்டுக்கொண்டா அளவுக்கு மேல நம்மை நாமே இழிவு படுத்திக்கிறோம். அதே போல எல்லாத்தையும் மத்தவங்க தலை மேல போடாம நம்ம பங்கை ஏத்துக்கணும்! அது மிக உயர்ந்த குணம்.

Tuesday 13 December 2016

7. இன்னும் கொஞ்சம் புன்னகையும் சிரிப்பும் வேணும்!

7. இன்னும் கொஞ்சம் புன்னகையும் சிரிப்பும் வேணும்!
சிரிக்கும் போது புன்னகை பூக்கும் போதும் உடம்பு மூளைக்கு நாம சந்தோஷமா இருக்கோம்ன்னு ஒரு ஃபீட்பேக் செய்தி அனுப்புது! ம்ம்ம்ம்ம்? அதனால? அதனால் எப்போ சந்தோஷமா இல்லையோ அப்ப கொஞ்சம் போலியாக்கூட சிரிக்கவோ புன்னகைக்கவோ செய்தா அது வருத்தத்தை போக்கடிக்க உதவும்.

என்கொய்ரி கவுண்டர், கஸ்டமர் சர்வீஸ்ல அனுபவப்பட்ட நபர்களை கவனிச்சு இருக்கீங்களா? எப்பவும் நான் இந்த விசாரணை கவுண்டர் ஆசாமி மேல பரிதாபப்பட்டது உண்டு! எத்தனை எத்தனை முட்டாள்தனமாக கேள்விகள். தினசரி! ஷிப்ட் ஆரம்பிச்ச முதல் கடைசி வரை!

இருந்தாலும் அனுபவப்பட்டவங்க முகத்தில் எப்பவும் ஒரு சிரிப்பை. புன்னகையை பார்க்கலாம்! அவங்களா வரவழைச்சுக்கறது நாளடைவில முகத்தில ஒட்டிக்கும்! மனசிலேயும்!

தேவையானா கண்ணாடி முன்னாடி நின்னு பயிற்சி செய்யுங்க. உதடுகள் பிரிந்து வாய் அகன்று உம்ம்ம்ம் அப்படி இல்லே …. கண்கள் சிரிக்கணும்! அதுக்கு கண்ணோரம் சுருங்கணும். கன்னம் கொஞ்சம் மேலே போகணும்! ஆங்! அப்படித்தான்!

ஃப்ரான்ஸ்ல சிலர் ஆராய்ச்சி செஞ்சாங்க. ஒரு தொகுதி மக்கள் வாயில குறுக்கே ஒரு பென்சிலை வெச்சுகொண்டு பற்களால கவ்விக்கொண்டு காமிக்ஸ் படிக்கணும். இன்னொரு தொகுதி மக்கள் வாய் குறுக்கே பென்சிலை வெச்சுகொண்டு உதடுகளால கவ்விக்கொண்டு காமிக்ஸ் படிக்கணும். பற்களால கவ்விக்கொண்டா எந்த தசைகள் புன்னகை செய்யறப்ப வேலை செய்யுமோ அதெல்லாம் வேலை செய்யும். உதடுகளால கவ்விக்கொண்டா அப்படி நடக்காது. பற்களால கவ்விக்கொண்டு படிச்சவங்களுக்கு காமிக்ஸ் படிக்க இன்னும் ஜாலியாவும் சிரிப்பாவும் இருந்ததாம்! இதான் மூளைக்கு தசைகள் தர ஃபீட்பேக்!


மோசமான மூட், ஆனா உங்களால அப்படி வலுக்கட்டாயமான சிரிப்பை உருவாக்க முடியலியா? சரி சரி, எல்லாரும் எப்பவம் செய்ய முடியாதுதான். ரைட். நீங்க போய் ஏதாவது ஒரு நகைச்சுவை நாவல் படிங்க அல்லது படம் பாருங்க. ஆரம்பத்துல கொஞ்சம் பொருந்தாம இருக்கறதா தோணினாலும் கொஞ்ச நேரத்தில அது உங்களை ஆட்கொண்டுவிடும். மூட் மாறிப்போகும்! இப்ப ஏன் மோசமான மூட் வந்தது? அது சொல்ற சேதி என்னன்னு யோசிச்சு பாருங்க! இதை மறக்க வேணாம்.

Monday 12 December 2016

6. ஆதர்ச ஆசாமியிடம் பேசுங்கள்.

6. ஆதர்ச ஆசாமியிடம் பேசுங்கள்.

சிலர் இயற்கையிலேயே நல்ல ஈக்யூ திறமையோடவே இருப்பாங்க.தன்னைத்தானே கவனிச்சு, திருத்தி, பிறருடன் பழகும்போது அவங்களை சரியா புரிஞ்சு, அவங்களுக்கு ஏத்தாப்போல நடந்து…. வரம்!

சினிமா ஹீரோ ஹீரோயினை பாலோ செய்யறதை விட்டுட்டு இந்த மாதிரியான நல்ல ஒரு ஆசாமியை கண்டு பிடிங்க. அவரோட பேசுங்க. இவங்களுக்கு அனேகமா தான் எதை எப்படி நல்லா செய்யறோம்ன்னு தெரிஞ்சு இருக்கும். அவங்ககிட்ட கேட்டு கத்துக்குங்க.

எல்லாமே பிறவில கிடைச்சுடாது, முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் இல்லையா? கொஞ்சம் மெய் வருந்துங்க!

Friday 9 December 2016

5. ஆறப்போடு.

ஆறப்போடு.


வார் அண்ட் பீஸ் என்கிற தன் புத்தகத்தில் லியோ டால்ஸ்டாய் எழுதுகிறார்

போர் வீரர்களிலேயேவலிமை மிக்க இருவர் காலமும் பொறுமையும். ஏனெனில் அவர்கள் நிலையை மாற்றிவிடுவார்கள், வலியை குறைப்பார்கள், தெளிவை கொடுப்பார்கள். சில சமயம் நாம் மிகவும் துன்பப்படுகிறோம். திருப்தி இல்லாமல், வலியுடன் கலக்கத்துடன்…. இதை தாங்க முடியாமல் தவிர்க்கவே எதையாவது செய்து விடுகிறோம். ஒரு வேளை இதை நாம் ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு வாரம்…. தள்ளிப்போட முடிந்தால் நிலை நம் புரிதலுக்கும் கட்டுக்குள்ளும் வந்து விடக்கூடும். உணர்ச்சிகளுக்கும் தடை போடப்படும்

சொல்ல எளியதுதான். ஆனாலும் பல சமயத்தில் இது மட்டுமே போதுமானதாக இருக்கும்.

Thursday 8 December 2016

4.பத்து வரை எண்ணுங்க!

4.பத்து வரை எண்ணுங்க!

இந்த உத்தி ரொம்ப பழசு. இருந்தாலும் வேலை செய்யக்கூடியது. கொஞ்ச நேரம் கொடுத்தா மனசு ஆளுகையிலேந்து புத்தி ஆளுகைக்கு போயிடலாம் என்கிற தாத்பர்யத்தில வந்தது. அது சுமார் 6 செகண்ட். ஒன் தவுசண்ட் ஒன் ந்னு சொன்னாத்தான் ஒரு செகண்ட்! அதனால மெதுவா பத்து வரை எண்ணுன்னு சொல்லி இருக்காங்க.

இதையும் ஆழ்ந்த மூச்சையும் சேத்து நல்ல பலனளிக்கக்கூடிய வழியை உருவாக்கிக்கலாம். ஆழ்ந்த மூச்சு ஒண்ணு எடுத்து விட்டு ஒண்ணுன்னு எண்ணலாம். இதே போல பத்து வரைக்கும். பத்து வரை எண்ண நேரம் இல்லைன்னாலும் பரவாயில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு முயற்சி செய்யறோமோ அவ்வளவு பலன் கிடைக்கும்.மீட்டிங் போல சில நேரங்களில இது முடியாம போகலாம். அதுக்குன்னு சில உத்திகள் வெச்சிருக்காங்க. எப்பவும் தண்ணீர் ஒரு டம்ப்ளர் வெச்சிருப்பாங்க. பிரச்சினை வரும் போது அதை எடுத்து மெதுவா குடிப்பாங்க. சாதாரணமா இந்த சமயத்தில பதில் பேசும்படி எதிர்பார்ப்பு இல்லை, ஒரு இடைவெளி கொடுப்பது வழக்கம் என்கிறதால சமாளிச்சுடலாம்.


இப்படி இடைவெளி இல்லாம பட் பட்ன்னு ’பதிலடி’ கொடுப்பதாலத்தான் நாம் பின்னால வருத்தப்படக்கூடியதை சொல்லிடுவோம். ஜாக்கிரதையா இருக்கணும்.

Wednesday 7 December 2016

3. உங்கள் இலக்குகள் என்ன? வெளிப்படையா அறிவியுங்க.

3. உங்கள் இலக்குகள் என்ன? வெளிப்படையா அறிவியுங்க.
சிலர் இருக்கிறாங்க. இன்னது இப்படி செய்ய வேண்டும்ன்னு முடிவெடுக்கறாங்க. செய்யறாங்க! ரொம்ப சிம்பிள் இல்லே?

ஆனா நாம எல்லாரும் அப்படி இல்லே. வீராவேசத்துடம் ஆரம்பிப்போம். போகப்போக உற்சாகம் குறையும். நாளாவட்டத்தில விட்டுடுவோம். இவங்களுக்கு நல்ல ஒரு உத்தி என்னன்னா செய்யப்போறதை வெளியே எல்லார்கிட்டேயும் சொல்லறதுதான். செயல் குறைவானா அட! மத்தவங்களுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாங்கன்னு ஒரு வெட்கம் வந்து தடை போடும். இல்லைனாலும் ஒரு சிலராவது ஏம்பா, இன்ன வேலை எப்படி போகுது? ந்னு கேப்பாங்க. அல்லது மாறா நடக்கும்போது இப்படி ஒரு இலக்கு வெச்சுகிட்டு இப்படி செய்யறியேன்னு இடிந்துரைப்பாங்க. ஆக சோம்பேறித்தனமா இல்லாம நிர்ணயிச்சதை செய்ய ஒரு உபாயம் கிடைக்கும்!

காலை அஞ்சு மணிக்கு உடற்பயிற்சியா நடைக்கோ ஓட்டத்துக்கோ போகணும்ன்னா யாரேனும் அந்த நேரத்துக்கு வந்து வாடா போலாம் என்கிறது ஒரு நல்ல தூண்டுதல். ஒரு காலகட்டத்துல என் உதவி சர்ஜன் “என்னை தினமும் நடை பயிற்சி செஞ்சயான்னு விசாரி. இல்லைன்னா திட்டு!” ந்னு சொல்லி இருந்தார்! இப்படி நம் மேலே அக்கறை இருக்கறவங்களா பாத்து அவங்களை இன்வால்வ் பண்ணனும். உன்னால முடியாதுன்னு உற்சாகத்தை குறைக்கிறவங்ககிட்டே இல்லே!

த்தர் எப்பவும் தான் இன்ன தேதிக்கு முன்னே வேலையை முடிச்சுடுவேன்ன்னு பெட் கட்டுவாராம். புரியுதில்லே?


உதவி சர்ஜன் நடந்தாரா ந்னு கேக்கறீங்களா? கொஞ்ச நாள் போனதும் அந்த வேண்டுகோளை வாபஸ் வாங்கிட்டார்!