Tuesday 31 January 2017

6. நம்பிக்கைப் பயிர் வளருங்க.

6. நம்பிக்கைப் பயிர் வளருங்க.
நம்பிக்கை…. இதுக்கு ஒரு விளையாட்டு உண்டாம். உங்க பார்ட்னர் அஞ்சடி தள்ளி உங்க பின்னாலே இருப்பார். ஒண்ணு ரெண்டு மூணுன்னு எண்ணினதும் நீங்க அப்படியே பின் பக்கம் சாய்ஞ்சு விழணும்! திரும்பி பார்க்கக்கூடாது! மூணுன்னு சொன்னதும் பார்ட்னர் முன்னே வந்து உங்களை தாங்கிப்பிடிப்பார்! கூடி இருக்கிற எல்லாரும் சிரிச்சுட்டு கலைவாங்க. ஹும்! நம்பிக்கை என்கிறது மட்டும் இவ்ளோ சுலபமா வேகமான கால்கள், வலுவான கைகள், பேலென்ஸ்ன்னு இருந்துட்டா…..
அப்படி இல்லை. அது வளர நாளாகும். ஃபூ ந்னு ஒரு க்ஷணத்தில காணாமப்போகும்! நம்மோட உறவுகளை நிர்ணயிக்கிற ரொம்ப முக்கியமான ஆனா கஷ்டமான சமாசாரம் இது.
இது எப்படி வளரும்?
வெளிப்படையான பேச்சு வார்த்தை; பகிர்ந்து கொள்ள இசைவு; சொல், செயல் நடத்தையில நாள்பட்ட உறுதியா இருக்கிறது. உறவை காப்பாத்திக்கொள்வதில நேர்மை…. இதெல்லாம் கொஞ்சம் உதாரணங்கள். நிறையவே இருக்கும்.
ஒத்தர் நம்பிக்கையை பெற நாமும் நம்பிக்கை ஏற்படறா மாதிரி நடந்துக்கணும். ஒத்தர்கிட்ட அடிக்கடி பேசிகிட்டு இருக்கோம். என்னைக்கோ ஒரு நாள் அவர் திடீர்ன்னு தன் குடும்பத்தைப்பத்தி பர்சனல் உறவுகள், பிரச்சினைகள் பத்தி எல்லாம் பேசறார். நம்பிக்கை வந்தாச்சு. நாம் வெளியே சொல்ல மாட்டோம்ன்னு ஒரு நம்பிக்கையிலதான் சொல்லறார். இதையே நாம வெளியே சொல்லிட்டதா அவருக்கு தெரிஞ்சா ஆட்டம் க்ளோஸ்!
என் கசின் ஒத்தர் வக்கீல். அவர்கிட்ட பேசிகிட்டு இருக்கறப்ப முக்கால்வாசி சிவில் வழக்குகளுக்கு இந்த நம்பிக்கை துரோகம்தான் காரணம்ன்னு சொன்னார். “ எப்படிப்பா இப்படி ஒரு முட்டாள்தனமான காரியம் செஞ்சே?” ந்னு க்ளையண்ட்கிட்ட கேட்டா அவரோட பதில் “ நம்பினேன் சார். துரோகம் செய்யமாட்டான்னு நம்பினேன் சார். இப்படி செஞ்சுட்டான்” என்கிறதுதான்.

நம்பிக்கையை வளர்க்க நாம் நம்மோட சுய விழிப்புணர்வு சுய ஆளுமை எல்லாத்தையும் பயன்படுத்தி நம்மைப்பத்தி கொஞ்சம் சொல்லறோம். அவரும் கொஞ்சம் சொல்லறார். பின்னால் நாமும் இன்னும் கொஞ்சம் சொல்லுவோம். இதே போல கொஞ்சம் கொஞ்சமா வளரும். எல்லாத்தையும் ஒரேயடியா அவர்கிட்ட சொல்லிடணும்ன்னு ஒண்ணுமில்லை. நமக்குள்ள இருக்க வேண்டிய சில விஷயங்கள் என்னைக்குமே நமக்குள்ளேயே இருக்க வேண்டியதுன்னு இருக்கு. அதை வெளியே சொல்ல வேண்டிய தேவையே இல்லை.



இந்த நம்பிக்கை வளர வளரத்தான் நம்முடைய உறவுகள் பலப்படும். யாருடன் நமக்கு பலமான உறவு தேவையா இருக்குன்னு பாருங்க. அவரோட நம்பிக்கையை இன்னும் பலப்படுத்த என்ன செய்யலாம்ன்னு யோசியுங்க. முடிஞ்சா இதை நேரடியா அவர்கிட்ட கேளுங்க. அது அவருடனான உறவை பலப்படுத்த நாம கொண்டிருக்கிற அக்கறையை அவருக்கு காட்டும். இது நம்பிக்கை வளரவும் உறவு பலப்படவும் உதவும்.

Monday 30 January 2017

5. விமர்சனத்தை நல்லபடி எடுத்துக்குங்க!

5. விமர்சனத்தை நல்லபடி எடுத்துக்குங்க!

இதயே எடுத்துக்குங்களேன். மாஞ்சு மாஞ்சு இதை எழுதிகிட்டு இருக்கேன். ஏதோ எல்லாருக்கும் நல்லதா இருக்கும்ன்னு ஒரு நினைப்புத்தான். ஆனா இதை சரியா எழுதறேனா, பயனுள்ளதா இருக்குமா? இன்னும் எளிமையா எழுதணுமா? உதாரணங்கள் போதலையா? இதெல்லாம் எப்படி தெரியும்? யாரானா சொன்னாத்தான் தெரியும். இதுக்குத்தான் பின்னூட்டம் முக்கியம் என்கிறது.

நம்மோட எண்ண ஓட்டம் ஒரு மாதிரி இருக்கும். அந்த ஓட்டத்தில எல்லாரும் சேர்ந்துப்பாங்கன்னு சொல்ல முடியாது. பிரமாதமா எழுதறதாத்தான் நினைச்சுகிட்டு இருக்கோம். ஆனா பலருக்கும் நாம் பிரயோஜனமா இருக்கணும்ன்னா நாம எழுதறது பலருக்கும் புரியணும். இல்லைன்னா இதை எழுத செலவு செஞ்ச நேரம் வீண்தானே?
ஆனா விமர்சனத்தைப்பத்தி நமக்கு ஒரு சரியான கற்பனை இருக்கணும். அதை சரியா எடுத்துக்கத்தெரியணும்.

விமர்சனம் ஒரு எதிர்பாராத ப்ரசண்ட் மாதிரி. உள்ளே என்ன இருக்குன்னு தெரியாது. நமக்கு ரொம்ப பிடிச்ச புத்தகமாவும் இருக்கலாம். ஆச்சரியப்படுத்தற சித்திரமாகவும் இருக்கலாம். கோபமூட்டற சில்லி ப்ராக்டிகல் ஜோக்காவும் இருக்கலாம்.

அதே போல விமர்சனமும் ஆஹோ ஓஹோ இதப்போல உண்டான்னும் இருக்கலாம். நல்லா எழுதறீங்க; இதையும் படிங்க பிரயோஜனமா இருக்கும்ன்னும் இருக்கலாம். வண்டாரு, பெரிஸ்ஸா சொல்லறதுக்கு. படு மோசம் போய்யா ன்னும் இருக்கலாம்.

இதெல்லாம் எழுத்துலகத்தில பரவாயில்ல; சமாளிச்சுடலாம். ஆனா மெய்யுலகத்தில நேருக்கு நேர் விமர்சனம் எழும் போது அதை சரியா எடுத்துக்க பழகி இருக்கணும். விமர்சனம் வரும்போது நாம எப்படி உணர்கிறோம்? அதை எப்படி வெளிக்காட்டறோம்? எதிர்வினைக்கு நம் தேர்வுகள் என்ன?

இதெல்லாம் சரியா இருக்க சிலது செய்யணும். கொஞ்சம் ஆலோசிக்கணும். விமர்சனம் செய்கிறது யார்? நம்ம மேல அக்கறை இருக்கற நடுநிலை தவறாத விமர்சகரா? அப்படி சரி, உன்னிப்பா கவனிப்போம். திருத்த வேண்டியது இருந்தா திருத்திப்போம். புது ஆசாமியா? எப்படிப்பட்டவர்ன்னு அப்புறம் யோசிச்சுக்கலாம். இப்ப கவனிப்போம். எப்பவும் ஏதாவது அர்த்தமில்லாத விமர்சனம் செய்யற ஆசாமியா? ரைட். விமர்சனம் உண்மையான்னு கொஞ்சமே கொஞ்சம் விசாரம் செஞ்சுட்டு, விட்டுடுவோம்.

விமர்சனத்தை கேட்கும் போது நம்மோட சமூக விழிப்புணர்வை செயலுக்கு கொண்டு வருவோம். என்ன காதில விழுது. அது மட்டுமா இல்லை உள்குத்து ஏதாவது இருக்கா? மறைவா பொதிந்த பொருள் ஏதாவது இருக்கா? தேவையானா விளக்கம் கேட்போம். அவர் சொல்லற கருத்துக்களை ஒத்துக்கப்போறோமோ இல்லையோ அவருக்கு நன்றியும் சொல்லுவோம். ஏன்னா விமர்சனத்தை சரியா எடுத்துக்க நாம மெனக்கெடறது போலவே அவரும் விமர்சனத்தை செய்ய கொஞ்சமாவது மெனக்கெட்டு இருக்கார்.

விமர்சனத்தை உள் வாங்கின பிறகு நம்மோட சுய மேலாண்மை திறன் செயலுக்கு வரணும். விமர்சனம் எழுந்த உடனே பதில் சொல்லி ஆகணும்ன்னு ஒரு கட்டாயமும் இல்லை. சில பல விஷயங்கள் கொஞ்சம் அமைதியா யோசிக்க யோசிக்கப் புலப்படலாம். “இதைப்பத்தி நான் யோசிக்கிறேன்” என்கிறது நல்ல பதில்.

இதெல்லாம் முடிச்சு பிறகு இந்த விமர்சனங்களை ஒட்டி ஏதாவது செய்யணுமா, என்ன செய்யலாம்ன்னு முடிவெடுக்கலாம். இப்படி சரி செய்யறது ஒத்தரோட விமர்சனத்தை மதிக்கிறோம் என்பதுக்கு அடையாளம். அவரோட இன்னும் நெருங்க ஒரு வாய்ப்பு!


Friday 27 January 2017

4. சின்னச்சின்ன விஷயங்கள்; பெரிய விளைவுகள்

4. சின்னச்சின்ன விஷயங்கள்; பெரிய விளைவுகள்

ஒரு கடைக்குபோகிறோம். ஒரு பொருள் கேட்கிறோம். அது உடனடியா கிடைக்கலை. கடைக்காரர் கொஞ்சம் சிரமப்பட்டு தேடி எடுத்துக்கொடுக்கிறார். இல்லை உடனடியாத்தான் எடுத்துக்கொடுக்கறார்; என்ன இப்போ? பொருளை வாங்கிக்கொண்டு காசை கொடுத்துவிட்டு கிளம்பறோமா? தாங்க்ஸ் ந்னு முக மலர்ச்சியோட சொல்றோமா? உணர்ச்சியே இல்லாம இயந்திரத்தனமா மூஞ்சியக்கூட பாக்காம தாங்க்ஸ்னு சொல்லறோமா? என்ன செய்யறோம்?

சர்வே எடுத்ததுல பெரும்பாலான மனிதர்களின் உணர்ச்சி இப்படித்தான் இருக்காம்: “ஆஆமா! நல்ல வேலை செஞ்சா யார் பாராட்டறாங்க? கேட்டாலும் அது உன் கடமைத்தானே?ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க!” சர்வே சொல்லறது என்ன? அப்படி யாரும் சொன்னா அவங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் என்கிறதுதான்.

புருஷன் பொஞ்சாதி சண்டையில் அடிக்கடிப்பார்க்கலாம்.
ஏம்மா இங்க சொம்பில ஜலம் நிரப்பி வெச்சிருந்தேனே? எங்க காணோம்?
அதுவா? தேய்க்க போட்டுட்டேன்.
தேய்க்கப்போட இதுவா நேரம்? பூஜை நேரத்துலதான் அதை செய்யணுமா?
ஆமா சொம்பு அவ்ளோ நல்லா இருந்தது. தேய்க்க முகூர்த்தம் வேற பாப்பாங்களாக்கும்?
இப்ப ஜலத்துக்கு எங்க போக? மடியா பிடிச்சு வெச்சு இருந்ததை ஏன் கொட்டினே?
வேற பிடிச்சுக்கோங்களேன். என்ன இப்ப?
ஆமா செய்யறதை செஞ்சுட்டு… ஒரு சாரி கூட வாய்லேந்து வராது!
சாஆஆஆரி. சரியா இப்ப?

சொல்லற விதத்திலேந்தே அது மனசுலேந்து வரலை, உதட்டிலேந்து வந்ததுன்னு புரிஞ்சுடும்!

வர வர ’தாங்க்ஸ்’ ’சாரி; ‘தயை செய்து’ எல்லாம் பழக்கத்திலேந்து காணாமப்போயிட்டு இருக்கு. அதை திருப்பி பழக்கத்துக்கு கொண்டு வரது நல்லது. மனப்பூர்வமா ஒத்தரை பாராட்டினா அது கொஞ்ச நேரமோ இல்லை சமயத்தில நாள் முழுதுமோ அவரை நல்ல ‘மூட்’ல வெச்சு இருக்கும். மனப்பூர்வமா கேட்கிற மன்னிப்பு ஒருவரை கொஞ்சம் ஆறுதலடையச்செய்யும். மனப்பூர்வமா அதை செய்யத்தோணலை என்கிறது நல்ல வாதம் இல்லை. அது அதீத அஹங்காரத்தின் அடையாளம். இப்படி வெளிப்படையா சொல்லப்பிடிக்கலை. இருந்தாலும் சொல்லாம இருக்க முடியலை. உங்களை புண் படுத்தி இருந்தா - சாரி!


இப்படி செய்யாததுக்கு பழக்கம் இல்லை என்கிறதும் காரணமா இருக்கலாம். அல்லது அவசர உலகத்தின் தாக்கமா இருக்கலாம். (ஆமா, அப்படி என்ன அவசரம்? தேங்க்ஸ் சொல்ல எவ்ளோ வினாடி ஆகும்? சரியா அரை வினாடி!) தயை செஞ்சு இதுக்கு கொஞ்சம் கவனம் செலுத்துங்க. இதை அடிக்கடி செய்யக்கத்துப்போமா? கத்துப்போம்! நன்றி!

Thursday 26 January 2017

3. குழப்பமான சமிக்ஞைகளை கொடுக்காதீங்க!

3. குழப்பமான சமிக்ஞைகளை கொடுக்காதீங்க!
முன்னே எங்கேயோ படிச்ச ஜோக். இஸ்ரேல்ல வெளிநாட்டுப்பயணி ஒரு டாக்ஸில போயிட்டுருந்தார். அந்த அனுபவம் அவருக்கு ரொம்ப புதுசு. டாக்ஸிகாரர் சிவப்பு விளக்கு எரிஞ்சா படுவேகமா சிக்னலை கடப்பார். பயணி பயங்கர டென்ஷனாயிட்டார். உசிர கையில பிடிச்சுண்டு பயணம் செஞ்சார். ஓரிடத்தில சிக்னல்ல பச்சை விளக்கு எரிஞ்சது.
ட்ரைவர் டாக்ஸியை நிறுத்திட்டார். பயணிக்கு ஆச்சரியம். “ஏன்பா நிறுத்திட்டே? பச்சை விளக்குதானே எரியுது? போக வேண்டியதுதானே?” ந்னு கேட்டார். ட்ரைவர் திரும்பிப்பாத்து சொன்னார்: “ஏம்யா அறிவிருக்கா உனக்கு? நமக்கு பச்சைன்னா எதிரே வரவனுக்கு சிவப்புதானே? அவன் வருவானில்ல?”

எது சிக்னல்ன்னாலும் தெளிவா இருக்கணும். நாம பாட்டுக்கு குழப்பமான சிக்னல் எல்லாம் கொடுத்து நம்ம குழப்பத்த மத்தவங்களுக்கும் கடத்தக்கூடாது.

உடல் மொழி, நம் எதிர் வினைகள் மூலமா உணர்ச்சிகள்தான் உண்மையை சொல்லும். வெற்று வார்த்தைகள் இல்லை. “அருமையான வேலை செஞ்சு இருக்கீங்க!” ந்னு தாழ்வான குரல்ல, உர்ர்ருன்னு முகத்த வெச்சுகிட்டு சொன்னா அத பாராட்டா எடுத்துக்கவா முடியும்? வழக்கமா மக்கள் தாம் என்ன பார்க்கிறாங்களோ அதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. கேட்கிறதுக்கு இல்லே! இதனாலத்தான் இணையத்தில உரையாடறதுல நிறைய பிரச்சினைகள் வருது. அதை தவிர்க்க சிரிப்பான்கள் போட்டாலும் முழுக்க ஈடு செய்ய முடியாது.

ஏம்ப்பா உடல்நிலை எப்படி இருக்குன்னு கேட்கிற கேள்விக்கு ஓ பிரமாதமா இருக்கேன்னு பதிலை லொக்கு லொக்குன்னு இருமிகிட்டே சொன்னா ஜனங்க எதை நம்புவாங்க?
தேர்ந்த நடிகரா இல்லைன்னா நம் உணர்ச்சிகள் வெளிப்படுவதை தடுக்க முடியாது. தினசரி ஐம்பதாயிரம் எண்ணங்கள் வந்து போற போது இது மாறிகிட்டே இருக்கும் இல்லையா? அது எல்லாமே நம் கவனத்துக்கு வரும்ன்னு இல்லை. ஒத்தர்கிட்டே பேசிகிட்டு இருக்கோம். ஆனா இன்னும் முந்திய ஆசாமியோட பேசின சீரியஸான விஷயத்தோட உணர்ச்சிகள்தான் இப்பவும் மேலோங்கி இருக்கு. நம்ம கூட பேசிக்கிட்டு இருக்கற ஆசாமிக்கு இப்ப குழப்பம். நாம் பேசற விஷயத்தை இவர் ரொம்ப சீரியஸா எடுத்துகிட்டு இருக்காரா? அப்படி ஒண்ணும் சீரியஸா எடுத்துக்கற மாதிரி நாம் பேசலையே?

இது தொடர்ந்துகிட்டே இருந்தா எல்லாரும் நம்மோட பேசறதையே நிறுத்திடுவாங்க. குழப்பமும் விரக்தியும்தான் மிஞ்சும்.

இதுக்கு ஒரே தீர்வு நம் உணர்ச்சிகளை அப்போதைக்கப்போது அறிஞ்சு கொண்டு தகுந்த படி எந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டணுமோ அதை எப்படி வெளிக்காட்டணுமோ அப்படி வெளிக்காட்டணும். ஆமாம் ஒரு முகமூடி அணிஞ்சு இருக்கணும்! அல்லது ஒருத்தரோட பேசின பிறகு அடுத்தவரோட பேச நாம் தயாரான்னு செக் பண்ணிட்டு அதுக்கு போகணும். ஸ்லேட்டை க்ளீனா துடைச்சுட்டு புதுசா ஆரம்பிக்கணும்.

நம்மோட பயிற்சிகளைப்பொருத்து சில பல சமயம் இது முடியாது. உதாரணமா ஒரு மீட்டிங்ல இருக்கோம். சில விஷயங்கள் சிலர் பேசறதை/ செஞ்சதை கேட்டு/ பாத்து நமக்கு கோபம் வருது. ஆனா அதை அங்கே வெளியே காட்ட முடியாது. அதை முழுங்க வேண்டாம். கொஞ்சம் கிடப்பிலே போடுங்க. சரியாக சமயத்துக்காக காத்திருங்க, எது சரியான சமயம்? எப்போ நம் கோபத்தை கட்டுப்பாட்டோட எப்படி வெளிப்படுத்தினா நேர்முறையான எதிர்வினைகள் இருக்குமோ அதுவே சரியான நேரம்.

ஒரு வேளை நம் உணர்ச்சி கட்டுப்படுத்த முடியாத பலத்தோட இருந்தா வெளிப்படையா சொல்லிடுங்க. “இன்னைக்கு காலையில ஒரு ஃபோன் வந்தது. கெட்ட செய்தி. அதை கேட்டதிலேந்து கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கேன். உனக்கு சரியா பதில் சொல்லைன்னா தப்பா நினைக்காதேப்பா!” பேசிகிட்டு இருக்கறவர் “பரவால்லே. இது ஒண்ணும் தலை போற சமாசாரமில்லே. அப்புறம் பேசிக்கலாம்” ன்னு சொல்லிட்டு போனாலும் போயிடுவார், எப்படி இருந்தாலும் தப்பான சிக்னல் போகாது.


அடுத்த மாதம் முழுக்க இதை பயிற்சி பண்ணிப்பாருங்க. நம்மோட உடல் மொழியும் பேசற விதமும் நாம் சொல்ல நினைக்கறதோட ஒத்துப்போகிறதா? இல்லை சிக்னல் குழப்பமா இருக்கா? அப்படி இருந்தா அதை மாத்திச்சொல்லிப்பாருங்க.

Wednesday 25 January 2017

2. உங்க இயல்பான தொடர்புத்திறனை மேம்படுத்துங்க!

2. உங்க இயல்பான தொடர்புத்திறனை மேம்படுத்துங்க!

மத்தவங்க உங்ககிட்ட பேசும்போது உங்க கருத்தை எப்படியானாலும் முன் வைக்கிறீங்களோ இல்லை நமக்கு எதுக்கு வம்புன்னு விலகிப்போறீங்களோ ஏதானாலும் உங்களோட இயல்பான தொடர்பு கொள்ளும் விதமே உங்க உறவுகளை நிர்ணயிக்குது. இப்பத்தான் உங்களுக்கு சுய விழிப்புணர்வு, சுய ஆளுமை, சமூக விழிப்புணர்வு எல்லாம் வந்தாச்சே! இப்ப இதை சீர் செஞ்சுக்கலாம்.

உங்க டைரியை எடுங்க. உங்களோட தொடர்பு கொள்ளும் விதம் பத்தி தலைப்பு கொடுங்க. அது எப்படி வேணுமானாலும் இருக்கட்டும். உங்க நண்பர்கள், குடும்பத்தினர், சக ஊழியர்கள் எல்லாரும் இந்த குறிப்பிட்ட வகையைப்பத்தி என்ன நினைக்கிறாங்க? நேரடியா சொல்லிடுவீங்களா? பூடகமாவா? இதமாக? சீரியஸா? விளையாட்டா? கட்டுப்பாடோட? வளவளன்னு? ஆர்வத்தோடவா? பாதிப்பு ஏற்படுத்தற மாதிரியா? எந்த வகைன்னு நிச்சயம் தெரிஞ்சிருக்கும். அதை பல பேர் உங்ககிட்ட சொல்லி இருப்பாங்க இல்லே?
ரைட்!

இப்ப இடது பக்கம் ஒரு பட்டியல் எழுதுங்க. உங்க ஸ்டைல்ல எது நல்லா இருக்கு, ஆஹான்னு சொல்றாங்க? நீ எப்பவும் தெளிவா கருத்தை சொல்லறப்பா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்; வழவழா கொழ கொழா எல்லாம் கிடையாது… இந்த ரீதியில நிறைய இருக்குமே!
சரி அதே போல வலது பக்கம் இன்னொரு பட்டியல். ஏதேனும் ஒரு சமயம் நாம் பேசினது குழப்பத்தை உண்டாக்கித்தா, இல்லை சண்டையே வர மாதிரி ஆயிடுத்தாஓஹோ!
உம், பட்டியல் நீளட்டும்.
ஆச்சா? ரைட்.
இப்ப ஆஹா பக்கத்திலேந்து மூணை தேர்ந்தெடுங்க. இதை இன்னும் அடிக்கடி பயன்படுத்தணும். ஓஹோ பக்கத்திலேந்து? அதிலேந்தும் 3. இதை அடக்கி வாசிக்கணுமா, தவிர்க்க முடியுமா, குறைக்க முடியுமா? ஆலோசியுங்க. இதை எல்லாம் முடிவு செய்ய கஷ்டமா குழப்பமா இருந்தா யாரையாவது - நண்பன், குடும்பத்தினர்- கூட சேத்துக்கொண்டு ஆலோசியுங்க. முடிவு செஞ்ச பிறகு ‘இப்படி செய்யப்போறேன்’ ந்னு கொஞ்சம் டாம் டாம் அடியுங்க. அப்படி நடந்துக்கலேன்னா யாரானா ஏண்டா அப்படி நடந்துக்கலேன்னு கேப்பாங்க இல்லே? அது நல்லது!


Tuesday 24 January 2017

1. வெளிப்படையாகவும் ஆர்வத்துடனும் இருங்க.

1. வெளிப்படையாகவும் ஆர்வத்துடனும் இருங்க.
இதை கேட்டதும் உங்களுக்கு தோணலாம் “ஏன்யா வம்பு? நாம் பாட்டுக்கும் நம்ம வேலையை பாத்துகிட்டு போகலாமில்லே? ஏன் மத்தவங்ககிட்ட வெளிப்படையாவும் ஆர்வத்துடனும் இருக்கணும்?”
ஏன்னா அது உங்க வேலையில ஒரு பகுதி. வேலையில சேரும்போது யாரும் இதையும் ஒரு கண்டிஷனா சொல்லலைதான்; இருந்தாலும் நீங்க இன்னும் ஒரே ஒருத்தர்கூட சேர்ந்து வேலை செஞ்சாலும் அவரோட நல்ல ஒரு உறவு வெச்சிருக்கணும் என்கிறது எதிர்பார்க்கப்படுது. அப்பத்தான் நீங்க முழுசா வெற்றிகரமா செயல்பட முடியும்.
இந்த வெளிப்படை என்கிறது இங்கே என்ன?
நம்மைப்பத்திய தகவல்களை மத்தவங்ககிட்ட பகிர்ந்து கொள்ளணும். எந்த அளவு என்பதை நாமே முடிவு பண்ணிக்கலாம். நாம் சின்ன வயசுல அம்மாவோட அஞ்சறைப்பெட்டிலேந்து காசு திருடி சோன்பப்டி வாங்கி சாப்டதை பகிர்ந்து கொள்ளணும்ன்னு சொல்லலை. நமக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு. அதை வெளிப்படை ஆக்கத்தேவையில்லை. யாருக்கு எவ்வளவு தெரியணுமோ அவ்வளவு. மேலும் எது அப்படி ஒண்ணும் ரகசியம் இல்லையோ அது.
ஏன்?
அப்பத்தான் நம்மைப்பத்தி தப்பான ஒரு கற்பனையில் அவங்க இருக்க மாட்டாங்க. அது முக்கியம். முன்னேயே சொன்ன உதாரணப்படி நாம எதையும் யோசிச்சே கருத்து சொல்லுவோம்ன்னு சொல்லி இருந்தா இவனுக்கு ஒண்ணும் தெரியலை; கருத்தே இல்லைன்னு தப்பா நினைக்கமாட்டாங்க. நமக்கு சென்சிடிவான எதையாவது செஞ்சுட்டு “ஓ! நீ தப்பா எடுத்துக்க மாட்டேன்னு நினைச்சேன்” ந்னு சொல்ல மாட்டாங்க.
இந்த “அப்படின்னு நினைச்சேன்” போல கடுப்படிக்கிற விஷயம் கிடையாது. ஏன் முன்னேயே ஒரு கருத்தை உருவாக்கிக்கணும்? அப்புறம் அதுபடி நடந்துட்டு அது தப்புன்னு தெரிஞ்சப்பறம் சாரி ந்னு அசடு வழியணும். சந்தேகம் இருந்தா கேட்கலாமே? “சந்தேகம் இருந்தாத்தானே? இதைப்பத்தி யோசிச்சதே இல்லையே?” ந்னு சொல்லறிங்களா? அதுவும் சரிதான்! :-))
மீட்டிங் எல்லாம் குறிச்ச நேரத்துக்கு ஆரம்பிச்சு முடிக்கறது உங்க பழக்கமா இருந்தா அதை வெளிப்படையா சொல்லிடுங்க. அப்பத்தான் யாரும் “அட! நாலு மணி மீட்டிங் ஆரம்பிச்சுடுத்தா? இப்ப நாலரைதானே ஆறது?” ந்னு சொல்லாம இருப்பாங்க!
அதே போல மத்தவங்களைப்பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் ஆர்வமா இருக்கணும். அதுக்குன்னு அவரோட அந்தரங்க விஷயங்களைப்பத்தி கேள்வி கேட்கலாம்ன்னு சொல்லலை. உதாரணமா மேலே சொன்னதை ஒட்டி, யாரும் நாலு மணிக்கு மீட்டிங் ந்னு சொன்னா “அப்ப நாலு மணிக்கு ஆரம்பிச்சுடுமில்லே? இல்லை லேட்டாகுமா” ந்னு சிரிச்சுக்கொண்டே கேட்கலாம்!
இப்படி மத்தவங்க குணத்தை தெரிஞ்சுக்கொண்டாத்தான் நாமும் அவங்க விருப்பங்களை புரிஞ்சு நம்ம நடத்தையை சரி செஞ்சுக்க முடியும். நாலு மணிக்கு டான்னு ஆரம்பிச்சுடுவேன்னு சொன்னா நாம அஞ்சு நிமிஷம் முன்னாலே போகலாம். அல்லது “ஓ! அது பத்தி நான் ரொம்ப குறிப்பா இருக்கறதில்லை அஞ்சு பத்து நிமிஷம் கூட குறைய ஆகலாம்!” ந்னு சொன்னா, ஒரு வேளை தாமதமாயிடும் பக்ஷத்தில நாம அவசரப்பட்டுண்டு மீட்டிங்குக்கு ஓட வேண்டியதில்லை! எப்படியானாலும் நாமும் அவங்களோட ஒத்துப்போகிரோம் இல்லையா? அது முக்கியம்.
நம்மோட சமூக விழிப்புணர்வு திறமையை காட்டி சரியான நேரத்தில சரியான விதத்தில கேள்விகளை கேட்கணும். அதெல்லாம் அவங்க எடுத்த முடிவுகளை செயல்களை விமர்சிக்கறதா இருக்கக்கூடாது. உதாரணமா “என்ன பிஎஸ்சி பிசிக்ஸ் படிச்சியா? அது எதுக்கு? என்ன பிரயோசனம்?” அட! அவரோட சூழ்நிலை அதை படிச்சார்; என்ன இப்ப? விஷயம் இப்ப அவருக்கு பிசிக்ஸ் பின்புலம் இருக்கு. நாம எடுத்துக்கற விஷயம் பிசிக்ஸ் சம்பந்தப்பட்டதா இருந்தா அவர்கிட்டேந்து நல்ல பங்களிப்பு வர வாய்ப்பிருக்கு. அவ்ளோதான்!
விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கொள்ள ஒரு நாள் அவர் தன்னோட அந்தரங்க விஷயங்களைக்கூட பகிர்ந்து கொள்ள ஆரம்பிப்பார். அப்ப உறவு வலுவாயிடுத்துன்னு பொருள். அதே சமயம் அவர் வைத்திருக்கிற நம்பிக்கையை கெடுத்துக்கக்கூடாதுன்னு ஒரு ஜாக்கிரதை உணர்வும் வரணும். இப்படி வெளிப்படையா மத்தவங்ககிட்ட பேசப்பேச உறவு வலுப்படும். நாம் அவங்கிட்ட காட்டற அக்கறையை அவங்க பாராட்டுவாங்க. அது உறவை வலுவாக்கும். அட! நமக்கு என்ன வேணும், நம்ம தேர்வு என்னன்னு அக்கறைப்படக்கூட ஒரு ஜீவன் இருக்கே! ந்னு நினைப்பாங்க. அதே சமயம் அது எல்லை மீறி - குறிப்பா எதிர் பாலினம் ஆனா- உறவை வேற விதமா கொண்டு போயிடாம பாத்துக்குங்க.

அவ்வப்ப யாரோட உறவுகள் இப்படி இன்னும் பலப்படுத்த வேண்டி இருக்குன்னு கவனிச்சு கொஞ்சம் நேரத்தை அதில செலவழிங்க!

Monday 23 January 2017

உறவு மேலாண்மை உத்திகள்

உறவு மேலாண்மை உத்திகள்:
சிலர் புதுசா ஒரு உறவை உருவாக்கிக்கும்போது நல்லாத்தான் செய்யறாங்க. ஆனா நாளடைவில் அந்த உறவை தக்க வைக்க கஷ்டமா இருக்கு!

என்ன சமாசாரம்ன்னா எல்லா உறவுகளுக்கும் - சுலபமா வரா மாதிரி தோணறதுக்குக்கூட - கொஞ்சம் முயற்சி தேவையா இருக்கு. இத கேட்டு இருக்கோம்; ஆனா உள்ளே வாங்கிண்டோமா?

உறவை வளர்க்கிறதுக்கு தேவை நேரம், முயற்சி, எப்படி என்கிற அறிவு. இந்த அறிவே உணர்வுசார்நுண்ணறிவு. உறுதியா, காலம் ஆக ஆக பலப்படுகிற, பரஸ்பரம் திருப்தி செய்கிற உறவுகள் வேணுமானால் உறவு மேலாண்மை என்கிற திறமை வேணும். நல்ல காலமா அதை வளர்த்துக்க முடியும். முன்னே சொன்ன மூணு திறன்களும் வந்தாச்சுன்னா இது சுலபமே! என்னன்னு நினைவு இருக்கு இல்லே? சுய விழிப்புணர்வு, சுய ஆளுமை, சமூக விழிப்புணர்வு…. ரைட்!

நம் உணர்வுகளைப் பார்த்து நம் தேவைகள் கிடைக்குதான்னு தீர்மாணிக்கலாம். நம்மோட சுய மேலாண்மையை பயன்படுத்தி நமக்கு தேவையானதை சரியான விதத்தில சரியான நேரத்தில சொல்லி உறவிலிருந்து பெறலாம். இதில மத்தவங்களோட தேவைகளையும் உணர்வுகளையும் சமூக விழிப்புணர்வில் இருந்து அறியலாம்.

மீதி இப்ப இருக்கறது அவங்களோட தேவையை எப்படி பூர்த்தி செய்யறது என்கிறது. அது நமக்கும் பாதகமில்லாம இருக்கணும்!


உறவில இரண்டு பக்கம் இருக்கு இல்லையா? நம்மோட பக்கம் ஒண்ணு; மத்தவங்க பக்கம் ரெண்டு. ஆக உறவில 50% பொறுப்பு நம்மகிட்ட இருக்கு. பின் வர இருக்கிற 17 உத்திகளை பயன்படுத்தி நாம சமூக மேலாண்மையை உறுதி செஞ்சுக்கலாம்.

Friday 20 January 2017

17. அறையின் ‘மூட்’ ஐ கவனியுங்க!

17. அறையின் ‘மூட்’ ஐ கவனியுங்க!
நம்மோட/ மத்தவங்களோட உணர்ச்சிகள், குறிப்புகளை கவனிச்சுப்படிக்க தெரிஞ்சாச்சா? இப்ப ஒரு அறையில இருக்கற அத்தனை பேரையும் படிக்கலாம். யப்பான்னு மலைக்க வேணாம். இது ஏற்கெனெவே செஞ்சதுதான்; கொஞ்சம் பெரிய அளவில.

உணர்ச்சிகள் ஒத்தர்கிட்டேந்து ஒத்தருக்கு தொத்திக்கும்ன்னு பார்த்தோமில்லே? ஆமாம். இது ஒருத்தர் ரெண்டு பேர்கிட்ட இருந்து அறையில் இருக்கிற அத்தனை பேருக்கும் பரவிடும். உண்மையா உணர்ச்சியோட பேசறவங்க அறையில் இருக்கறவங்க மனசை கவருவது இப்படித்தான். ஏதோ ஒரு புள்ளியில இது அறை முழுதும் பரவறதை நாம் உணர முடியும்.
எப்படி?
முதலாவதா முக்கியமா உள்ளுணர்வு சொல்லும்! ஒரு வேளை ஏதோ புது விஷயம் சொல்லி இருக்காங்க. கூடியிருந்தவங்க அது குறிச்சு ஒரே ஆர்வமா இருக்காங்கன்னா அறையில் நுழைஞ்சதுமே அந்த உற்சாகத்தை நாம உணர முடியும். எல்லாரும் குழு குழுவா பேசிகிட்டு இருக்காங்களா, யோசனைல தனியா இருக்காங்களா, சிலர் படு உற்சாகத்தில இருக்காங்களா இப்படி பல விஷயங்களை கவனிக்கறதால இதை உறுதி செஞ்சுக்கலாம்.

பரிட்சை ஹால்ல நுழையறோம். அங்க இருக்கிற டென்ஷன், பரபரப்பு, திகைப்பு, பயம் எல்லாம் சேர்ந்து நம்மை தாக்கும். ஓ கேள்வித்தாள் ரொம்ப கடினம் போலிருக்குன்னு உணர்ந்துக்கலாம். சிலர் முகம் பேயடிச்சா மாதிரி இருக்கு என்கிறது போல சில குறிப்புகளில இருந்து இதை உணர்ந்துக்கலாம்.

அப்படி இல்லாம வேற வழி? ஒரு வழி காட்டியை அமர்த்திக்கலாம். முன்ன பின்ன தெரியாத சுற்றுலா இடங்களுக்கு போகிற போது அப்படி ஒரு ஆசாமிய கூப்பிட்டுக்கறோம் இல்லையா? இல்லைன்னா அந்த இடத்தை சுத்திப்பார்க்க இன்னும் அதிக நேரமாகும்.
இவர் அந்த அறைக்குள்ள போறப்ப கிரிக்கெட் நேரடி வர்ணனை மாதிரி சொல்லிகிட்டே போகலாம். “ அதோ பாரு, அவன் அரசியல்வாதி. ரூபா நோட்டு செல்லாதுன்னு வந்ததுக்கு பேஸ்தடிச்சு போயிருக்கான். நிறைய கருப்புப்பணம் இருக்கு போலிருக்கு. இதோ இவன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். இவன்கிட்ட எப்பவுமே பைசா மிஞ்சினதில்லே. இப்ப நம்ம மாதிரி மத்தவனும் கஷ்டப்படறானேன்னு ஒரு குரூர திருப்தி. இப்படி சொல்லிகிட்டு போய் மொத்தத்தில பெரும்பாலோருக்கு திருப்தி!” ந்னு முடிக்கலாம்.

இப்படி பழகி அடுத்து நீங்களே இது போல ஆராய ஆரம்பிக்கணும்.


இது பழகியாச்சுன்னா ஒரு அறையில் நுழைஞ்சதுமே மூடை கணிக்கலாம். பாதுகாப்பா உணரறாங்களா, கவலை இருக்கா, மூட் மாறிகிட்டே இருக்கா, அதை நமக்கு சாதகமா மாத்த என்ன செய்யணும்ன்னும் புரிய ஆரம்பிக்கும்.

அடுத்து உறவு மேலாண்மை உத்திகளை பார்க்க ஆரம்பிக்கலாம்

Thursday 19 January 2017

16. உள்ளதை உள்ளபடி பாருங்க.

16. உள்ளதை உள்ளபடி பாருங்க.
நமக்குன்னு சில நம்பிக்கைகள் இருக்கும்; இது இப்படின்னு ஒரு முன்கூட்டிய தீர்மானம் இருக்கும். சிலதை முக்கியமில்லைன்னு தள்ளிடுவோம். சிலதுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்போம். இதை எல்லாம் தாண்டி உள்ளதை உள்ளபடி பார்க்க நம்மால முடியுமா? அப்படி பார்க்கக்கூடியவங்க அரிதே. சாதாரணமா நமக்கு கிடைக்கற படம் கொஞ்சம் சாயம் பூசினதுதான்!


அப்படின்னா என்ன செய்யலாம்?
கொஞ்சம் தைரியம் வேணும்; பலம் வேணும்; நேர்மை வேணும். இது கூட ஒரு சர்வே வேணும்!
உதாரணமா நீங்க உலவற சமூக வலைதளத்தில ஒரு சர்வே நடத்தலாம். அதுல வழக்கமா ஆஹா ஓஹோ ந்னு சொல்லறவங்களும் இருக்கணும். நீ சொல்லறது எல்லாம் தப்புன்னு சொல்லறவங்களும் இருக்கணும். கூடவே இடைப்பட்ட எல்லாரும். “தப்பா நினைச்சுக்க மாட்டேன். நேர்மையா பதில் சொல்லுங்க!” ந்னு கேட்டுக்கலாம்.
இந்த பதில்கள் எல்லாம் நமக்கு உவப்பாவா இருக்கும்? ஒண்ணு ரெண்டு இருக்கலாம். அவரவர் பார்வையில நீங்க சொல்லறது செய்யறது சரியா இருக்கலாம்; தப்பா இருக்கலாம்; பழுது பட்டதா இருக்கலாம். அவங்க சொல்லறது தப்பா இருந்தா என்ன செய்ய? ஜீரணிக்க முடியாத பதிலா இருந்தா என்ன செய்ய? உண்மையா இருந்துட்டா? காய்த்தல் உவத்தல்ன்னு இல்லாம எல்லாத்தையும் கேட்டுக்கோங்க. சிலர் தப்புன்னு சொல்லற விஷயத்துக்கு காரணம் இருக்கலாம். சிலது நம்மோட தப்பாவே இருக்கலாம். எப்படியா இருந்தாலும் இது முக்கியம். ஏன்?
நாம தனி ஆளா இருந்துட்டா பிரச்சினை இல்லை. ஆனா நாம் சமூகத்தில ஒரு அங்கம். அதனால மத்தவங்க நம்மைப்பத்தி என்ன நினைக்கிறாங்க என்கிறது முக்கியம்.
நாம் ஒரு மீட்டிங்க்ல உட்கார்ந்து இருக்கோம். ஒத்தர் ஒரு கருத்து சொல்லறார். அது பத்தி நம்ம கருத்தை கேட்க்கறாங்க. நம்ம பழக்கம் எதானாலும் நல்லா யோசிச்சு பதில் சொல்லறது. இந்த யோசிக்கிற நேரத்தில ‘ஓ இவனுக்கு ஒண்ணும் தெரியலை’ ன்னு அடுத்த ஆசாமிய கேட்கப்போயிடலாம். நாளடைவில இவன் ஒண்ணும் பிரயோசனமே இல்லேன்னு நினைச்சு மீட்டிங்க்கே கூப்பிட மாட்டாங்க!
இவங்க இப்படி நினைக்கிறாங்கன்னு மட்டும் நமக்கு தெரிஞ்சு இருந்தா…… அஹா! நாம் யோசிச்சுதான் பதில் சொல்லுவோம் என்கறதை இவங்களுக்கு தெளிவு படுத்தி இருக்கலாமே!
மத்தவங்க நம்மைப்பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு உறுதியா தெரிஞ்சுக்க நல்ல வழி அவங்களை கேட்க்கறதுதான். இது வரை பாத்த விஷயங்கள் - சுய விழிப்புணர்வு, சுய ஆளுமை, சமூக விழிப்புணர்வு, சமூக ஆளுமை நமக்கு எப்படி இருக்குன்னு அவங்க நினைக்கிறாங்கந்னு தெரிஞ்சுப்போமே! பெரும்பாலும் அவங்க நம்மைப்பத்தி நினைக்கறது நாம் நம்மைப்பத்தி நினைக்கறதை விட சரியாகவே இருக்கும்!

இல்லைன்னாலும் மத்தவங்க நம்மைப்பத்தி என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கறது நல்லதே! இதுக்கு ஒரே மாத்து வழி நம்மை நாமே விடியோ படம் எடுத்து மத்தவங்களோட பழகறப்ப என்ன செய்யறோம்ன்னு எல்லாம் கவனிக்கறதுதான்!