Wednesday, 30 November 2016

ஃபீட் பேக் வேணும்!


நாம் பாக்கிறது எல்லாமே -நம்மையும் சேத்து- நம் கண்கள் வழியா உள்ளே போகுது. கண்கள் தானா எதையாவது பார்க்குமா? மனசு எதை பார்க்குமோ அதைத்தானே பார்க்கும்? நம்ம மனசோ அழுக்கான கண்ணாடி மாதிரி. நம்மோட அனுபவம், நம்பிக்கைகள், ‘மூட்’’ கள்…. இதெல்லாம் நாம பார்க்கிறதை உள்ளபடி பார்க்காம நம் கருத்தை ஏத்தி பார்க்க வைக்குது. பல சமயம் நாம் பார்க்கிற நாம் வேற; மத்தவங்க பார்க்கிற நாம் வேற; உண்மையான நாம் வேற!

இவற்றுக்குள்ள இருக்கிற இடைவெளியை சரியா அறிவது நல்லது, அப்பதான் நாம சரியா சுய விழிப்புணர்வை அடையலாம். வெளியிருந்து உள்ளே, உள்ளிருந்து வெளியே நம்மை நாமே முழுக்க அறியணும். வெளியிருந்து அறியணும்ன்னா நாம் நம்மை விலகி இருந்து பார்க்கணும். ஆனா நம்மோட அஹங்காரம் அதுக்கு விடாது. அதனால யாரானா இரண்டாம் நபர் வேணும். அது ஒரு நண்பரோ, சக ஊழியரோ, மேற்பார்வையாளரோ, குடும்பத்தினரோ அல்லது நாம் மதிக்கும் ஒரு பெரியவராகவோ இருக்கலாம். நாம் அவங்ககிட்ட நம்மை பத்தி கேட்க்கும் போது நீ இப்படின்னு சொல்கிறப்ப முடிஞ்சா அதுக்கு உதாரணத்தையும் கேளுங்க. ஏதோ ஒரு நிகழ்வை வெச்சுத்தானே அப்படி ஒரு முடிவுக்கு வந்தாங்க? இப்படி கிடைக்கற விமரிசனம் எல்லாத்தையும் சேர்த்து வெச்சு பார்த்தா நம்மோட உணர்ச்சிகள், அவை எப்படி மத்தவங்களை பாதிக்கிறது எல்லாம் புரிஞ்சுடும்.
ஆனா இந்த விமர்சனங்களை தாங்கிக்கற தைரியமும் நமக்கு வேணும். விமரிசனத்தை வெளிப்படையா சொல்கிற அவங்களை நாம் கோவிச்சுக்கவும் கூடாது. தயங்காம வெளிப்படையா சொல்லலைன்னா அவங்ககிட்ட இதை கேட்டு பிரயோசனமும் இல்லை. ‘சிங் சிக்’ அடிக்கற கூட்டத்தால கெட்டுப்போனவங்க பலர் இருக்காங்க!

இந்த நபர்களை தேர்ந்து எடுக்கறதுல கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கணும். இவர் கொஞ்சமாவது ஆப்ஜக்டிவா எல்லாத்தையும் பார்க்கிறவரா இருக்கணும். நம்பிக்கைக்கு உரியவரா இருக்கணும்.


நல்ல விமர்சகர் கிடைச்சு நாமும் நல்லபடியா அதை ஆராய முடிஞ்சா சுய விழிப்புணர்வுல நாம மிக உன்னத நிலைக்குப்போயிடுவோம்!

Tuesday, 29 November 2016

உங்க உணர்வுகளை புத்தகங்கள், திரைப்படங்கள், இசையில் கண்டெடுங்கள்!


உங்க உணர்ச்சிகளின் பாங்கையும் போக்கையும் புரிஞ்சுக்க கஷ்டமா இருந்தா என்ன செய்யறது?

சரி. உங்களுக்கு எந்த திரைப்படங்கள் பிடிச்சது? ரசிச்சு வாசிக்கற புத்தகம் எது? அடிக்கடி கேட்கிற முணுமுணுக்கிற பாட்டு எது? இதையெல்லாம் கொஞ்சம் ஆராயுங்க! அந்த பாட்டின் வரிகள் என்ன சொல்லுது? இல்லை ட்யூன் சோகமா இருக்கா? கதையில் பிடிச்ச பாத்திரம் யாரு? இவர்களோட உணர்ச்சிகள் உங்களோட உணர்ச்சிகளோட ஒத்துப்போகிறதா இருக்கலாம். அதனாலத்தான் அதெல்லாம் பிடிச்சு இருக்கு! அந்த கதா பாத்திரம் எப்படி நடந்துக்கறார்? அவரைச்சுற்றி இருக்கும் பாத்திரங்களோட செயல்கள் என்ன? இதை ஆராயலாம். இதை சொல்லுவதன் மூலம் உங்களைப்பத்தி பிறருக்கும் தெரிய வைக்கலாம். சில சமயம் நாம உணர்கிறதை வார்த்தைகளில சொல்ல வராது. அதை நேரடியா பார்க்கிறப்பத்தான் சரியாகும். அடுத்த முறை இந்த ஊடகம் எதையும் பார்க்கிறப்ப இதை நினைவில வைச்சுக்கலாம்.


பெண்கள் மாஞ்சு மாஞ்சு டிவி சீரியல் ஏன் பார்க்கிறாங்கண்ணு இப்ப தெரியுதா? அதில இருக்கிற அபாயமும் புரியுதா?

Monday, 28 November 2016

உங்க தோற்றத்தை ஆய்வு செய்க!

உங்க தோற்றத்தை ஆய்வு செய்க!

பல சமயம் வெளியே இருக்கறது உள்ளே இருக்கறதை காட்டும். நம் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். முகத்தில தெரியற பாவனைகள், உடலை தாங்குகிற விதம், நடத்தை, உடை, தலை முடி அலங்காரம் எல்லாம் உங்களைப்பத்தி நிறைய சொல்லுது.


பரட்டை தலையும் அழுக்கான கசங்கின உடைகளும் நீங்க வாழ்க்கையில் உற்சாகம் இல்லாம இருக்கீங்கன்னு சொல்லுது. அதீத அலங்காரம் தாழ்வு மனப்பான்மையை காட்டுது. நடத்தை கொஞ்சம் விவகாரமான விஷயம். அது தப்பா புரிஞ்சுக்கப்படலாம். புதுசா யாரையும் சந்திக்கும் போது இருக்கும் தயக்கம், இவர் எப்படி நம்மை நடத்துவாறோ என்கிற பயம் சேர்ந்து உங்களை தற்பெருமை ஆசாமியாகவோ சமூகத்தில ஒட்டாத நபராகவோ அடையாளம் காட்டக்கூடும். நாம இப்ப எப்படிப்பட்ட தோற்றத்தை காட்டணும்ன்னு கொஞ்சமே கொஞ்சமாவது யோசிச்சு முடிவெடுக்கறது நல்லது. இதை நம்ம மூடுக்கும் இயல்புக்கும் விட்டுடக்கூடாது. அப்படி விடுவதானா அது நல்லதா இருந்தா பரவாயில்லை. எதுக்கும் சோதிச்சு பாத்துக்கலாம்.

Friday, 25 November 2016

நீங்க மதிக்கற நடத்தை முறைகள் என்ன?

நீங்க முக்கியம்ன்னு நினைக்கிற, மதிக்கிற நடத்தை முறைகள் என்ன?

வாழ்க்கையில் ஆயிரம் வேலைகளை செஞ்சு கொண்டே இருக்கோம். காலை எழுந்துக்கறது முதல் படிக்கப்போற வரை இருக்கும் வேலைகளை நினைச்சுப்பாத்தா ஆச்சரியமா இருக்கும். எவ்வளோ வெரைட்டி! எத்தனை கடமைகள்! நாமா செய்யறது எத்தனை! இத்தனையும் செய்ய எத்தனை கவனமும் மனக்குவிப்பும் தேவைப்படுது!

கழைக்கூத்தாடி போல இது அத்தனையும் செஞ்சு கொண்டு போக நம்ம கவனம் எப்பவும் வெளியேவே இருக்கு! நம்ம பத்தி? ஹும்! அதுக்கு ஏது நேரம். இத செஞ்சாச்சா அத செஞ்சாச்சான்னு பாத்துண்டு இருக்கவே நேரம் சரியா இருக்கு! இதுல நம்மோட அடிப்படை நடத்தைகள் மதிப்புகள் பத்தி…. :( நாமா செய்யறதையும் நம்மோட அடிப்படை நடத்தையையும் யோசிச்சு பாக்கிறப்பத்தான் நாம நம்பாத சிலதை செஞ்சு கொண்டு இருக்கோம்ன்னு புரியும்.

மத்தவங்களை திட்டணும்ன்னு நம்ம தலை எழுத்தா என்ன? அது நமக்கு பிடிக்காதே? அது நல்ல பலனளிக்காதுன்னு தெரியுமே? இருந்தாலும் சில பல சமயத்துல அதை செய்யறோம். செஞ்ச பிறகு மோசமா உணருவோம்! ஒரு குற்ற உணர்ச்சி இருக்கலாம். அல்லது ஏதோ நிறைவில்லாம இருக்கறா மாதிரி…. இங்கே செய்ய வேண்டியது என்ன?

கொஞ்சம் நேரம் எடுத்துண்டு ஒரு பட்டியலே போடலாம். என் வாழ்க்கையில நான் மதிக்கிறது என்னென்ன குணங்கள்? அப்படி நான் இருக்கேன்னா? இல்லைன்னா ஏன் இல்லை? இல்லை, ‘ச்சே! நானா இப்படியெல்லாம் செஞ்சேன்?’ ந்னு நொந்துக்கறேனா? இதுக்கு என்ன செய்யலாம்?


தினசரியோ, குறைஞ்சது மாசம் ஒரு தரமோ இந்த ஆராய்ச்சி செய்யறது நல்லது. காலப்போக்கில நாம எதையும் செய்யும் முன்னே இந்த பட்டியல் நினைவுக்கு வந்தாலும் வரக்கூடும்! அப்ப செயலுக்கு சில தேர்வுகளும் தோணலாம்.

Thursday, 24 November 2016

ஏ உணர்ச்சியே! நீ ஏன் வந்தே?

உணர்ச்சிகள் வருவது தானா வருது. வா வான்னு அழைப்பு வெச்சா வருமா என்ன? அதாவது நீங்க ஒரு தேர்ந்த நடிகரா இல்லாத பட்சத்தில!

ரைட்! அது வரப்ப நீ ஏன் வந்தேன்னு கேட்டுப்பாருங்க! கொஞ்சம் கஷ்டம்தான்; இருந்தாலும் முயற்சி செஞ்சா வந்துடும். திடுதிப்புன்னு மேலெழுந்த உணர்ச்சிகள்; நாம இயல்பா இல்லாம செஞ்ச காரியங்கள்…. ஏன் செஞ்சோம்? எது தூண்டினது? இதை விசாரிக்க நமது சுய விழிப்புணர்வு நல்லாவே வளரும். இந்த கேள்வியை கேட்காம புரியாத விஷயங்களுக்கு இந்த உணர்ச்சிகள்தான் ஒரு க்ளூ கொடுக்குது! இதே போல எப்ப உணர்ந்தோம்? என்ன சூழ்நிலையில? யார் முன்னால? இது சிலரோடத்தானா எப்பவுமா? கேள்வியை முனைஞ்சு கேட்க கொஞ்சம் நேரம் செலவிடறதுதான் வேலையே. விடை நிச்சயமா தெரிஞ்சுடும். அது தெரிஞ்சா அதுக்கு என்ன செய்யணும் ன்னும் சுலபமாவே தெரிஞ்சுடும்.

Wednesday, 23 November 2016

நல்ல மூட் இன்னும் மோசம்!

இந்த மோசமான மூடாவது பரவாயில்லைகொஞ்சம் எச்சரிக்கையா இருந்துடலாம்இந்த நல்ல மூட் இன்னும் மோசம்!

காலை எழுந்ததிலேந்து ரொம்ப உற்சாகமா இருக்கேன்எல்லாம் சரியா நடக்குதுஉண்மையில நினைச்சதை விட நல்லா நடக்குதுஇன்னைக்கு நா எந்த தப்புமே செய்ய முடியாதுஇப்படி தோணினா அதுவும் கொஞ்சம் பிரச்சினைதான்ஆராயாம எதையாவது செஞ்சு வைப்போம்ரிசல்ட் அப்புறம்தானே தெரியப்போகுது?


உதாரணமா நாம வழக்கமா பொருட்கள் வாங்கப்போகிற கடையில் தீபாவளி சேல் ந்னு விளம்பரம் போட்டு இருக்கான். 50% முதல் 75% வரை தள்ளுபடி…அடடா ந்னு உடனே போய் வேண்டியது வேண்டாததுன்னு நிறைய வாங்கித்தள்ளிடுவோம்வாங்கலாமான்னு சபலப்பட்டது இந்த விலைக்கு கிடைக்குதாஅது அடிக்கடி பயன்படற சமாசாரம் இல்லைன்னு தெரிஞ்சாலும் அந்த எண்ணம் பின்னுக்கு தள்ளப்படும்அப்புறமா பில் வரப்பத்தானே தெரியும்க்ரெடிட் கார்ட்ன்னா நிலை இன்னும் மோசம்அதனால ஒரு ‘ஜோர்’ ல எடுக்கற முடிவுகளைப்பத்தி எச்சரிக்கையா இருப்போம்!

Tuesday, 22 November 2016

’மூட்’ ஒரு பிரச்சினை!

எல்லாருக்குமே மோசமான மூட் வரத்தான் செய்யும். அப்படி இல்லாதவங்களை பார்த்தா சொல்லுங்க. ஒரு நமஸ்காரம் பண்ணிக்கணும். ஏன்னா அவர் பெரிய மகானா இருப்பார்!
சாதாரண ஆட்களுக்கு சில சமயம் காலை எழுந்தது முதலே ஒரு மார்க்கமாத்தான் இருக்கும். எதுவுமே சரியா நடக்காது. வழக்கமா ஒழுங்கா நடக்கற சமாசாரங்கள் இன்னைக்கு இடக்கு பண்ணும். இதுல என்ன பிரச்சினைன்னா எல்லாமே கெட்டது, சரியில்லைன்னு தோணிடும். அதனால ஒண்ணு ரெண்டு நல்லது நடந்தாக்கூட அது மனசில பதியாது. எல்லாமே பிடிக்காம போகும். என்னடா வேலை இதுன்னு அலுப்பு வரும். வீட்டில இருக்கறவங்களோ, அலுவலகத்தில் இருக்கறவங்களோ எல்லாருமே நமக்கு எதிரா சதி செய்யறாங்களோன்னு தோணும். “ஒத்தர்ன்னா ஒத்தர் கூட …. எனக்கு ஹிதமா நடந்துக்கறதில்லைய்யா! இந்த வாழ்க்கையை வாழ்ந்து நா என்ன சாதிக்கப்போறேன்? என் எதிர்காலம் அவ்ளோதான், போச்!”

என்னதான் உள்ளுக்குள்ள புத்திக்கு நிலமை அவ்ளோ மோசமில்லைன்னு தெரிஞ்சாலும் மனசு அதை ஏத்துக்கப்போகுதா என்ன?

சரியான சுய உணர்வு பெற நம் நிலை நமக்கு புரியணும். பார்க்கறதெல்லாம் ஒரு ’மூட்’ புகை ஊடாத்தான் தெரியுது; உண்மையில்லை.

என்ன செய்யறது?
மூட் என்கிறது மாறக்கூடியது. அதாவது அதை பெருக்கிக்காம இருந்தா. முடிஞ்சா பேசாம படுத்து ஒரு தூக்கம் போடுங்க. அப்படி வாய்ப்பில்லைன்னா பரவாயில்லை. கொஞ்சமாவது எச்சரிக்கையா இருங்க. முக்கியமாக முடிவுகளை எடுக்க வேணாம். முக்கியமா இந்த மோசமான மூட் ஐ எதுவும் தூண்டி இருக்குனு கண்டு பிடிக்க முடிஞ்சா அதை மனசில போட்டு உருட்ட வேணாம். கொஞ்சம் பொறுமையா இருங்க. இதுவும் கடந்து போம்!


Monday, 21 November 2016

பதிவேடு எழுதுங்க

உணர்ச்சிகள் எப்பப்போ வருது, என்ன விளைவுகள்ன்னு ஒரு டைரி எழுதுங்க. யார் எப்போ நம்மை திட்டினாங்க, கோபப்பட்டோமா, அழுதோமா, வேற ஏதாவது செய்தோமா? இப்படி ஒரு பதிவேடு இருக்கறது நம்மோட உணர்ச்சிகளை ஆராய நிச்சயம் உதவும்.

தினசரி ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகள் வருது. நாளொண்ணுக்கு சுமார் ஐம்பதாயிரம் எண்ணங்கள் சராசரியா ஒத்தருக்கு வரதா கணக்கிட்டு இருக்காங்க. பெரும்பாலான எண்ணங்கள் உணர்ச்சியையும் சார்ந்து இருக்குமில்லையா? அதனால் இவ்வளோ உணர்ச்சி குவியல்ல என்ன வந்ததுன்னு நினைவு வெச்சுக்கறது கஷ்டமாவே இருக்கும். அப்புறம் எப்படி இதை விலகி நின்னு பார்க்கிறது

ஒரு மாசம் கழிச்சு இதை திருப்பி படிச்சுப்பாத்தா அப்ப எந்த உணர்ச்சிகள் நம்மை பாதிக்குது எது பாதிக்கலைன்னு புரியும். எது நம்மை உற்சாகப்படுத்துது, எது அதல பாதாலத்துல போட்டு அமுக்குதுன்னும் புரியும். போன பதிவில பார்த்தபடி யார் நம்மை எரிச்சலூட்டறங்க (அல்லது எது) ந்னும் புரியும். கூடுதலா நம்மோட இயல்பான போக்கு எப்படி இருக்கு, எதை சரி செஞ்சுக்கணும்ன்னும் புரியும்.  

Friday, 18 November 2016

உங்களை நீங்களே கழுகு மாதிரி கவனியுங்க!

உங்களை நீங்களே கழுகு மாதிரி கவனியுங்க!
நாம தெருவில நடந்து போறோம். நம் பார்வையில என்ன இருக்கு? இந்த தெரு, அதுவும் நம்ம முன்னாடி என்ன இருக்குன்னு மட்டும். இல்லையா?

வானத்தில மிக உயரத்தில மிதக்கிற கழுகை பாத்தி இருக்கீங்களா? கீழே நடக்கறதுகளில இருந்து அது விலகி இருக்கு. ரொம்பவே! ஆனா நாம நடந்து போறதை உன்னிப்பா பார்க்குது. நமக்கு எந்தெந்த வழிகள் எல்லாம் இருக்கு? ஆனா நாம போகிற வழி என்ன? நமக்கு பின்னால செயின். கைப்பை திருடன் எவனாவது வரானா, மோதறா மாதிரி பைக் எதாவது வருதா? இதெல்லாம் வானத்தில விலகி மிதக்கிற கழுக்குக்கு நல்லா தெரியும்; தெருவில நடக்கிற நமக்குத்தெரியாது! சாதாரணமா நம்ம பார்வை குறுகினது.  வண்டிக்குதிரைக்கு ப்ளைண்ட்ஸ் போட்ட மாதிரி எதிரே இருக்கிறது மட்டுமே தெரியும். நம்ம வாழ்க்கையை இந்த கழுகு போல விலகி இருந்து பார்க்க முடிஞ்சா…. எவ்வளவு விஷயங்கள் புரியும்! உணர்ச்சிகளில இருந்து விடுபட்டு பாசிடிவ்வா செயல்கள் நடக்க என்ன செய்யணும்ன்னு திட்டமிட்டு செயல்படுவோம் இல்லையா?

நாம கழுகு இல்லைத்தான். இருந்தாலும் நம்ம நடத்தையை கொஞ்சமாவது விலகி நின்னு கவனிக்கறது நம் செயல்களை செம்மைப்படுத்தும். வாழ்க்கை என்கிற ட்ராமா விரியும் போது நம் உணர்ச்சிகள், எண்ணங்கள், நடத்தை எல்லாத்தையும் விலகி நின்னு கவனிக்க ஆரம்பிங்க.

மொத்தத்தில நம்ம இலக்கு மனசால எதிர்வினை செய்யாம புத்தி பூர்வமா நிலையை அலசி இருக்கிற வழிகளை யோசிச்சு செய்வது.

ஒரு உதாரணம் பாத்தா புரியும். நீங்க ஒரு அம்மா. ஐடில வேலை பாக்கற இள வயசு பையன் வீடு திரும்ப தாமதமாகுது. செல் போன்ல ரிங் போகுது; பதில் இல்லை. பையன் வர தேவுடு காத்துகிட்டு இருக்கீங்க. நேரம் ஆக ஆக எதுக்காக நம்ம கவலை ஆரம்பிச்சதோ அது காணாமப்போகும், அவனுக்கு என்ன ஆயிருக்குமே, பாதுகாப்பா இருக்கானா இல்லையான்னு கவலையோட ஆரம்பிச்ச நம் உணர்ச்சிகள் ’இப்ப நாம் சொல்லறதை கேக்கறதில்லே, வீட்டுக்கு ஒரு ஃபோன் போட்டு வர லேட்டாகும்ன்னு சொல்லக்கூடாதான்னு’ பல வித கோபங்களை உருவாக்கி இருக்கும். ஒரு வழியா ராத்திரி பத்தரைக்கு வரான். வந்த உடனே என்ன நடக்கும்? ஏண்டா லேட் ந்னு கோபத்தோட கேப்போம். உண்மையான பதிலா வரப்போகுது? ஏதோ நொண்டி சமாதானம் வரும். இல்லைன்னா ’உழைச்சுட்டு பசியோட லேட்டா வரேன். சாப்படியான்னு கேக்காம நீ பாட்டுக்கு திட்டறே?’ ந்னு எதிர் தாக்குதல் வரும். அப்புறம் ரண களம்தான்.

இதுவே விலகி நின்னு பார்க்க முடிஞ்சு இருந்தா…. பையன் திரும்பி வந்ததும் நம்ம கோபம் மேலெழும்ன்னு தெரியும். திட்ட ஆரம்பிச்சா அது நாம் எதிர் பார்க்கிற பொறுப்பை கொண்டு வராதுன்னு தெரியும். என்ன செய்யலாம்ன்னு திட்டமிடுவோம். வந்ததும் மௌனமா தட்டை போட்டு சோறு போட ஆரம்பிச்சா முதல் அதிர்ச்சி! என்னடா திட்டுவான்னு பாத்தா அம்மா திட்டவே இல்லையே? சாப்பிட்டு முடிச்சப்பறம் மெதுவா “ ரொம்ப நேரமாயிடுத்தா, ரொம்ப கவலையாப்போச்சுடா! என்னா யிருக்குமோ ஏது ஆயிருக்குமோன்னு… செல்போன்ல கூப்டுப்பாத்தா பிக் பண்ணவே இல்ல. நிஜமா பயந்து போயிட்டேன்” ந்னு சொல்ல,
இப்படி பதில் வரலாம். “ரொம்ப சாரிம்மா. வேலை இன்னைக்கு கொஞ்சம் கடுமை. கிளம்பவே லேட் ஆயிடுத்து. இன்னைக்கு பயங்கர ட்ராஃபிக். போன் அடிச்சது காதில விழலை. கிளம்பறதுக்கு முன்னே ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாம். என்னமோ தோணலை. இனிமே இப்படி நடந்துக்காம பாத்துக்கறேன்.” சுபம் சுபம் சுபம்!


விலகி நின்னு பார்க்கிறதாலே நம் முதல் விருப்பமான பொறுப்பு வரணும் என்கிறதுக்கு தேவையானதை செஞ்சுட்டோம். கோபம் வராம இருக்க முதலிலேயே நிதானத்துக்கு வந்துட்டோம். எப்படி எல்லாம் நடந்துக்கலாம்ன்னு திட்டமிட முடிஞ்சது. நம்ம கவலையை தெளிவா சொன்னோம். சண்டை போடாததில நம்மோட ஆரோக்கியம் பாதிக்கப்படலை. உறவு பாதிக்கப்படலை. வேற என்ன வேணும்?

Thursday, 17 November 2016

யார்/ எது உங்களை எரிச்சலடைய வைக்கிறது?

யார்/ எது உங்களை எரிச்சலடைய வைக்கிறது?
ம்ம்ம் … உண்மையில் எரிச்சல்ன்னு இல்லை. உணர்ச்சிகளை தூண்டறதுன்னு சொல்லி இருக்கலாம். ஆனா இது கொஞ்சம் சுலபமா புரியும்ன்னு நினைச்சேன்!
சிலர் ஒரு ரூமில இருந்தா அங்கே அவங்கதான் ஆளுமை செலுத்தறா மாதிரி நடந்துப்பாங்க! அவங்கதான் சத்தம் போட்டு அதிகமா பேசுவாங்க. யார் எதை சொல்லப்போனாலும் அதுக்கு தானா பதில் சொல்வாங்க/ விமரிசனம் செய்வாங்க. கிடக்கட்டும்.
ஒரு வேளை நீங்க அறையில் இருக்கிற மக்களோட கவனத்தை ஈர்க்க நினைச்சா, அப்படி செய்ய வேண்டி இருந்தா இந்த நபரை வெறுப்பீங்க! சீரியஸா ஒரு ஸ்டாஃப் மீட்டிங் நடத்தப்போனா இவங்க அங்கே ஆளுமை செலுத்த ஆரம்பிச்சா எப்படி இருக்கும்? வந்துட்டான்யா! இனிமே மீட்டிங் உருப்படியா நடந்தாப்போலத்தான் ந்னு நினைப்போம். எரிச்சல், சமயத்துல இயலாமை, கோபம் எது வேணா வரும்!
யார் எப்படி நம்மை எரிச்சலடைய வைக்கிறாங்கன்னு தெளிவா புரிஞ்சுக்கறது இந்த சமயத்தில நிலைகுலையாம இருக்கவும் நம்மை ஆசுவாசப்படுத்திக்கவும் நிலையை கட்டுக்குள்ள வைக்கவும் உதவும். நம்மை எரிச்சலடைய வைக்கிறது சில நபர்களா இருக்கலாம். அல்லது ரொம்ப சத்தம் இருக்கிற இடங்கள் மாதிரி சில சூழ்நிலைகள். இதை புரிஞ்சுகிட்டா - முக்கியமா இவை திடீர்ன்னு ஏற்படாம எதிர்பாக்கப்படும் என்கிறதால- கையாளுவது சுலபம். இவற்றோட மூலத்தை அடையாளம் காண முடிஞ்சா இன்னும் நல்லது. அதெப்படி நம்மை எரிச்சலடைய வைக்கிற சிலர் செய்யறதை வேற சிலர் செஞ்சா எரிச்சல் வரதில்லை? அப்ப இவங்க எரிச்சலூட்டறதுக்கு வேற எதோ காரணமிருக்கும். என்னது? எப்பவும் இதே மாதிரி நடந்து கொண்டு எரிச்சலூட்டின உங்க க்ளாஸ் மேட்டை நினைவு படுத்தறாங்களா? அந்த க்ளாஸ்மேட் மேல இருந்த வெறுப்பு இவங்க மேல பாயுமே!

இருக்கட்டும். இப்போதைக்கு எதெல்லாம் எரிச்சலூட்டுதுன்னு ஒரு பட்டியல் போடுங்க. பின்னால மேலாண்மை பத்தி படிக்கறப்ப இவற்றை கையாளறது எப்படின்னு பார்க்கலாம்.  

Wednesday, 16 November 2016

உணர்வுகளை உடல் ரீதியா உணர்க!

உணர்வுகளை உடல் ரீதியா உணர்க!
உணர்ச்சிகளுக்கும் உடலுக்கும் நிறையவே சம்பந்தம் இருக்கு. ஒவ்வொரு உணர்ச்சியும் உடலில சில விளைவுகளை ஏற்படுத்தும். மார் பட படன்னு அடிச்சுக்கறதோ, கை கால் நடுங்கறதோ, வயித்தில பட்டாம் பூச்சி பறக்கறதோ, வாய் உலர்ந்து போறதோ...… ஆயிரம் விளைவுகள். நாம அடையாளம் காணக்கூடியது மட்டும் இல்லாம அடையாளம் தெரியாததும் இருக்கும். அதானால மனசோட உணர்வுகளை காண இந்த விளைவுகளும் உதவும்.
எதோ உளர்றேன்னு நினைக்கறிங்களா? சரி, எங்கானா தனி இடத்துக்குப்போய் உக்காருங்க.
கண்களை முடிக்குங்க. மூச்சு ஆழமா இழுத்து விடுங்க. இப்ப உங்க உடம்பை கவனியுங்க. இதய துடிப்பு எப்படி இருக்கு? மூச்சு சீரா இருக்கா? கழுத்து கைகால் தசைகள் எப்படி இருக்கு? கவனிச்சாச்சா? ரைட்!
இப்ப உங்க வாழ்க்கையில ரொம்ப கோபம் வர வெச்ச சம்பவம் ஒண்ணை மனசில நினைங்க. அதோட விவரங்களை மனசில போட்டு உருட்டுங்க. ரெண்டு நிமிஷமாவது போகட்டும். இப்ப முன்னே செஞ்ச மாதிரியே உடம்பை கவனியுங்க. இதயத்துடிப்பு அதிகரிச்சு இருக்கா? மூச்சு சீரா இல்லாம வேகமா இருக்கா? தசைகள் இறுகி இருக்கா? உடம்பு சூடா இருக்குமே? கவனியுங்க!
இதே போல இந்த பயிற்சியை ரொம்பவே மகிழ்ச்சி/ துக்கம் தந்த விஷயத்தைப்பத்தியும் செய்யலாம். அப்ப இருக்கற மாறுதல்கள் வித்தியாசமா இருப்பதை அறியுங்க.
இப்படி செஞ்சது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க. பின்னால் வாழ்க்கையில் ஏதும் நடக்கும் போது இப்படி கவனிக்க ஆரம்பிங்க. கொஞ்சம் விலகி நின்னு இதை கவனிக்க பழகுங்க. இப்படி எந்த உணர்ச்சி எந்த மாதிரி மாறுதல்கள் கொண்டு வருதுன்னு கவனிக்க கவனிக்க உணர்ச்சிகள் வரும் முன்னேயே கூட நாம அதை கண்டு கொள்ள முடியும். ஆமாமா, இதுக்கு நிறைய பயிற்சியும் வேணும்; கொஞ்ச காலமும் ஆகும். பரவாயில்லை. ஆரம்பிச்சாச்சுன்னுன்னா அது பாட்டுக்கு போகப்போக சுளுவாயிடும்.

இந்த உடம்பு உணர்ச்சி விஷயம் இன்னொரு வகையிலும் பெரிய உதவி செய்யும். அதை அப்புறம் பார்க்கலாம்.

Tuesday, 15 November 2016

சங்கடத்தை அரவணையுங்க!

சங்கடத்தை அரவணையுங்க!
நாம் சுய விழிப்புணர்வை வளர்க்க தடையா இருக்கக்கூடியது ஒண்ணு இருக்கு. அதான் நாம் எப்படி இருக்கோம்ன்னு நிஜமா பார்க்கறதில இருக்கிற சங்கடம்! சங்கடமா இருக்கறது நம்ம கண்ணுல படாதே! ஏன்னா அத நாம் விரும்ப மாட்டோம். இப்படி இருக்கறது தற்காலிக தீர்வுதான். அது எப்பவோ நிஜமா வெளிப்படும் போது நமக்கு பெரிய வலியா இருக்கும்.

என் அண்ணாவோட பொண்ணு ஸ்கூல்ல படிச்சுகிட்டு இருந்தப்ப ஸ்கூல்லேந்து வந்த உடனேயே ஹோம் வொர்க்கை எடுத்து வெச்சுண்டு பரபரன்னு முடிச்சுடுவா! அப்புறம் நிம்மதியா விளையாடப்போகலாமே!
அதே போல சங்கடமா இருந்தாலும் சுய ஆராய்ச்சியில நம் சுய ரூபத்தை வெளிப்படுத்தி எதிர்கொள்வதே நல்லது. உணர்ச்சியை பக்கவாட்டில தவிர்த்துக்கொண்டு போகாம நேரடியாவே போய், அதை சந்திச்சு, பிறகு அதன் ஊடே போவதே நல்லது. இந்த சங்கடங்கள் சின்னதா இருந்தாக்கக்கூட இதுவே நல்லது. அது போர் அடிக்கறதா இருக்கலாம்; குழப்பமா இருக்கலாம். ஒரு எதிர்பார்ப்பா இருக்கலாம்.

வாழ்க்கையில் நாம் நம்மோட திமிரை பார்க்கணும். சிலதை கத்துக்க முயலாம முக்கியமில்லைன்னு விலக்கறோம் இல்லையா? உதாரணமா நாம எதாவது தப்பா செஞ்சுட்டா மன்னிப்பு கேட்கறது. மன்னிப்பு கேட்கறது கீழ்மைன்னு நினைக்கிற நபருக்கு மன்னிப்பு கேக்கணும்ன்னு எப்பவுமே தோணாது.
உற்சாகம் குறைவா டல்லா இருக்கவே கூடாதுன்னு சிலர் நினைப்பாங்க. அவங்க சும்மா இருக்க முடியாம அர்த்தமே இல்லாம எதையாவது செஞ்சுகிட்டே இருப்பாங்க.
இந்த ரெண்டு வகையினருமே அவரவர் உணர்ச்சிகளை அரவணைக்க கத்துக்கணும். அப்பத்தான் அதைப்பத்தி யோசிச்சு ஏதாவது செய்ய முடியும். இல்லைன்னா பழையபடி செக்கு மாடா செஞ்சதையே செஞ்சுகிட்டு இருக்க வேண்டியதுதான்.


இப்படி முதல்ல அரவணைக்கறப்ப கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கும். சில முறை செஞ்சுட்டா அப்பறமா ‘ஓ இந்த சங்கடம் அப்படி ஒண்ணும் தாள முடியாதது இல்லை’ ன்னு தோணிடும். பலனை சீக்கிரமே பார்க்கலாம். ஆச்சரியமா சுய விழிப்புணர்வைப் பத்தி யோசிக்கறதே அதை பெருக்கிக்க உதவும். நமக்கு சுய விழிப்புணர்வு வேணும்ன்னு தெரியறதே ஒரு பெரிய விழிப்புணர்வு இல்லையா? :-) ஆரம்பத்தில எதையெல்லாம் தப்பா செய்யறோம் என்கிறதுலதான் நம் கவனம் இருக்கும். பரவாயில்லை. நாம் செய்யற தப்புகளைப்பத்தி கழிவிரக்கம் தேவையில்லை. முன்னேயே சொன்னது போல அதெல்லாம் நமக்கு எதையோ சொல்ல வருதுங்க. வாழ்க்கையை சரியா புரிஞ்சுக்க இவை அவசியம்.

Monday, 14 November 2016

தொத்திக்கொள்ளும் உணர்வுகள்

சின்ன வயசுல குளத்தில கல்லு விட்டு எறிஞ்சிருப்போமே? என்னது இல்லையா? குளத்த பாத்ததே இல்லையா? ஹும்! சரியான நகரவாசி நீங்க! சரி சரி. குளத்தில கல்லை விட்டு எரிஞ்சா அது விழுந்த இடத்தில தண்ணியை பிரிச்சுகிட்டு விழறதுனால அலைகள் தோணும். அது அங்கிருந்து கிளம்பி வட்ட வட்டமா கரை வரைக்கும் பரவும். அது போல நம்மகிட்ட தோன்றுகிற உணர்ச்சிகள் நம்மை சுத்தி இருக்கறவங்ககிட்டேயும் பரவும். துக்க சமாசார வீட்டுக்கு போனா…. போறப்ப நல்லாத்தானே இருப்போம்? ஆனா அங்க கதறி அழற பொண்ணையோ பிள்ளையையோ பாத்தா நமக்கும் துக்கம் தொத்திக்கும். இது எது வரை போகும் என்கிறது வெவ்வேறயா இருக்கலாம். ஆனால் துக்கம் நம்மை தாக்கறது நிஜம். பிறந்த நாள் கொண்டாடற குழந்தையோட உற்சாகம் நம்மையும் சந்தோஷப்பட வைக்குது. பலர் முன்னே மேனேஜர் ஒத்தரை கூப்பிட்டு திட்டு திட்டுன்னு திட்டினா அது அவரோட மட்டும் நிக்கறதில்லை. எல்லாருமே கொஞ்சமாவது பாதிக்கப்படுவாங்க. ஒரு வேளை மேனேஜர் “குட்! எல்லாருமோ கப்சிப்ன்னு ஆயிட்டாங்க. வேலை ஒழுங்கா நடக்கும்!” ந்னு நினைச்சா…. அது அப்படி நடக்கும்ன்னு இல்லே. மாறா எல்லாருமோ இன்னும் கொஞ்சம் ஜாக்ரதையா, முடிவெடுக்காம வேலைகளை தள்ளிப்போட சான்ஸ் இருக்கு. ஒரு வருஷம் கழிச்சு வேலை செய்ய முனைப்பில்லாத டீமை வெச்சுண்டு இருக்கேன்னு இவருக்கே கூட கல்தா கிடைக்கலாம். இவர் டீமை திட்டிண்டு இருப்பார்!

நம்மோட உணர்ச்சிகளும் சக்தி வாய்ந்தவை. அதெல்லாம் அந்த நேரத்துக்கு நமக்கு மட்டுமே பாதிக்கும்ன்னு நினைக்கறது முட்டாள்தனம். இதனால நம்மோட உணர்ச்சிகளை கட்டுக்குள் ஏன் வைக்கணும்ன்னா அதோட தாக்கம் கூட இருக்கறவங்க மேல உடனடியா எப்படி இருக்குன்னு பாருங்க! அப்ப இது எவ்வளோ தூரம் பரவலாம்; எவ்வளவு காலம் இதோட விளைவு இருக்கும்ன்னு புரிஞ்சு நம்மோட உணர்ச்சிகளை மாற்ற உதவலாம்.

Friday, 11 November 2016

உணர்ச்சியில் நல்லது கெட்டது இல்லை.

நல்ல உணர்ச்சி கெட்ட உணர்ச்சின்னு ஒண்ணுமே இல்லை! இரண்டுமே எனர்ஜிதான். அதோட விளைவை பாத்து நல்லது கெட்டதுன்னு நாம பாகம் செய்யறோம். அது எல்லாருக்கும் எப்பவும் அப்படி இருக்கும்ன்னு ஒண்ணுமில்லை.

உதாரணமா குற்ற உணர்ச்சி. பெரும்பாலும் இதை கெட்டதுன்னுதான் நினைப்பாங்க. யோசிச்சு பாத்தா விரும்பத்தகாத ஒரு செயலை செய்யாதேன்னு இது சொல்லுது! அதே போல ‘நல்ல’ உணர்ச்சிகளையும் தலை தெறிக்க ஓட விடறோம். இதுவும் உடம்புக்கு நல்லதில்லை. இந்த ‘நல்லது’ கெட்டது; என்கிறதை பிரிச்சுப்பாக்கிறதை நிறுத்தினா அவை தானே ஓடி செய்ய வேண்டியதை செஞ்சு, உணர்த்த வேண்டியதை உணர்த்தி காணாமப்போகும்!

பிரிச்சுப்பாக்கிறதுல என்ன பிரச்சினைன்னா அது சொல்ல வந்த விஷயம் நமக்கு புரியாம போகும். அதனால அது திருப்பித்திருப்பி வந்து கொண்டு இருக்கும். அதை உணர்ந்து ‘சரி, வா! உக்காந்து பேசலாம். என்னதான் சொல்ல வரே?” ந்னு விசாரிக்க அது சொல்ல வந்ததை சொல்லிட்டு காணாமப்போகும். மாறா தப்பு ரைட்டுன்னு பார்க்க ஆரம்பிச்சா அது இன்னொரு குற்றவுணர்ச்சியை கொண்டு வந்து குழப்பிடும். முதல் வந்த உணர்வு சொல்ல வந்தது அடிபட்டுப்போயிடும்.


அதனால அடுத்த முறை உணர்ச்சி ஏதும் மேலெழும் போது நல்லது கெட்டதுன்னு பார்க்காம அதை என்ன சமாசாரம்ன்னு விசாரிங்க!

Thursday, 10 November 2016

விரிவாக - சுய விழிப்புணர்வு

எளிதா சொல்ல இது நாம் உண்மையில எப்படிப்பட்டவர்ன்னு நாமே உணர்வது. இது கொஞ்சம் புகைபடர்ந்த விஷயம். கொஞ்ச நாள் கழிச்சு யாரும் வந்து உனக்கு முழுக்க சுய உணர்வு வந்துடுத்து; பாராட்டுக்கள் ந்னு சொல்லப்போறதில்லை! நாமேதான் நம் முன்னேற்றத்தை கணிக்கணும்; அது தப்பா இருந்தா வேற யாரும் வந்து சரிசெய்ய முடியாது! நாம போட்டுகிட்டு இருக்கற முகமூடிகளை எல்லாம் நிர்தாட்சண்யமா கழட்டி பாக்கணும். வெங்காயத்தை உரிக்கறா மாதிரி உரிய உரிய மேலும் மேலும் நம்மோட சுய ரூபம் தெரியவரும்! எவ்வளோ தூரம்தான் உள்ளே போக முடியுதுன்னு பார்த்துடுவோமே!
உணர்ச்சிகள் இல்லாத ஆசாமி மிகவே அரிது என்கிறதால நம்மோட உணர்ச்சிகளை - நல்லது, கெட்டது இரண்டுமே- சரியா புரிஞ்சுக்கணும்.

இந்த உணர்ச்சிகளில எதுவுமே தப்பில்லை. கெட்டது நல்லதுன்னு எதுவும் இங்க இல்லே. அவை அத்தனையும் நமக்கு எதையோ சொல்ல வருது. அதை சரியா புரிஞ்சுக்கற வரை அது திருப்பித்திருப்பி வந்துகிட்டுத்தான் இருக்கும். திருப்பித்திருப்பி கோபம் வர விஷயத்தை கவனிச்சுப்பாத்தா கடைசில நாம் பயப்படும் சமாசாரத்தை அது காட்டும். சைக்கிள் விட பழகற குழந்தைய ஏன் கோபித்து திட்டிக்கொண்டே இருக்கே? அது எங்கான வெளியே போய் ரோடில ஆக்ஸிடெண்ட் ஆயிடுமோன்னு பயம்; அதான்! இப்படி பலது! இதை கவனிச்சு ‘அட! இதுக்கு பயந்தா பையன் சைக்கிள் ஓட்ட கத்துகவே மாட்டான். என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம்!’ ந்னு யோசிச்சு பாத்தா இந்த கோபம் (இது மட்டும்!) நின்னுடும்.


ஆனா இப்படி யோசிச்சு உள்ளே இருக்கற உணர்ச்சியை சரியா புரிஞ்சுக்க கொஞ்சம் தைரியம் வேணும். உண்மை சில சமபம் கசக்கலாம். அதுக்கு தயங்கினா நாம முன்னேற முடியாது! கசப்பான உண்மைகளை நொண்டி சாக்கு சொல்லி ஜஸ்டிஃபை செய்ய மனசு முயற்சிக்கும்! இடம் கொடுக்கக்கூடாது.

Wednesday, 9 November 2016

செயல்திட்டம்

எல்லாம் சரி! ஈக்யூ முக்கியம்ன்னு ஒத்துக்கறேன். இப்ப அதுக்கு நான் என்ன செய்யணும்ன்னு கேக்கறிங்களா? நல்லது!
இதோ ஒரு செயல்திட்டத்தை வகுக்கலாம்.
நம்ம மூளையில ஒரு பக்கம் பகுத்தறிவு மூளை. கணக்கா செயல்படும். இன்னொரு பக்கம் உணர்ச்சி மையங்கள். இது ரெண்டுத்துக்கும் நடுவே தகவல் போய் வந்துகிட்டேத்தான் இருக்கும். ஈக்யூ திறன் இருந்துதுன்னா இரண்டு பக்கத்து போக்குவரத்தும் சிக்கல் இல்லாம அமைதியா இருக்கும். அதிக போக்கு வரத்து இருந்தா இது இன்னும் பலமா இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு தன் உணர்ச்சிகளை கவனிக்கறோமோ, அதை பகுத்தறிவு மூளையின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பாதை இன்னும் அகலமாகும். பெரும்பாலானோர் ஒத்தையடிப்பாதையில் கஷ்டப்படறாங்க. சிலர் ஆறு வழி பாதை அமைச்சு இருக்காங்க! நாம் இதுல எங்கே இருந்தாலுமே எப்பவுமே கூடுதல் வழிகளை சேத்துக்கலாம். உடற்பயிற்சிக்கு பளு தூக்கறோம். உடனேவா நம்ம தசைகள் எல்லாம் உருண்டு திரண்டு பையில்வான் மாதிரி ஆயிடும்? பழகப்பழக எடையைத்தூக்கறது சுலபமாகிறா மாதிரி பழகப்பழக மூளை புது இணைப்புக்களை உருவாக்கிக்கும். இது தசை மாதிரி பெருகாது. அதே அளவில்தான் இருக்கும்; ஆனா புதிய இணைப்புகளோட. இதை ’ப்ளாஸ்டிசிடி’ என்கிறாங்க. மூளையின் ஒவ்வொரு செல்லும் 15,000 இணைப்புகள் வரை உருவாக்க முடியும். இதனால நம்மோட நடத்தைக்கான பாதைகள் பல்கிப்பெருகும். எதிர்காலத்தில இதை சுலபமா பயன்படுத்தலாம்.
இந்த செயல்திட்டத்தில காணும் பயிற்சிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தணும். நாளடைவில அது இயல்பா ஆயிடும். ஆனா அது வரை கொஞ்சம் அதிக முயற்சி எடுத்துத்தான் ஆகணும். உதாரணமா கோபப்படக்கூடாது; மாற்று வழியை கையாளனும்ன்னு நினைக்கிறோம். இதை செயலுக்கு கொண்டு வரது அவ்வளவு சுலபமில்லைத்தான். திருப்பித்திருப்பி முயற்சி செஞ்சா கைவரும்! கொஞ்சமாவது வெற்றி அடைய ஆரம்பிச்சாச்சுன்னா அப்பறம் அந்த உற்சாகம் இதை இன்னும் சுலபமாகும். புதிய இணைப்புகள் உருவாகறது சுலபமாகவும் விரைவாகவும் நடக்கும். நாளடைவில கோபத்துக்கான தூண்டுதலே ரொம்ப பலஹீனமாயிடும். அப்ப அதை சுலபமா அடக்கிடலாம்! வெற்றி! இது மேலும் பயிற்சி இல்லாமலே ஆறு வருஷத்துக்காவது தாங்கும்.

முதல்ல எதை மாத்தணும்ன்னு திட்டமிடலாம். இது அப்போதைக்கு அத்யாவசியமா இருக்கறதா இருக்கலாம். அல்லது சுலபமா மாத்தக்கூடியதா இருக்கலாம்! சட்டுன்னு ஒரு வெற்றியை பாத்தா ஒரு உற்சாகம் இருக்குமில்லையா? அது அடுத்து கஷ்டமானதுகளையும் மாத்த ஹேதுவா இருக்கும். பின்னால வரப்போற வழிகளில பொருத்தமானவற்றை தேர்ந்தெடுங்க. கூடுதலா இந்த விஷயங்களில பழக்கப்பட்ட ஒத்தரை வழிகாட்டியா வெச்சுக்கொண்டாலும் நல்லது.

முக்கியமா முன்னேற்றம் இருக்கான்னு மட்டும்தான் கவனிக்கணும். பர்பெக்டா ஆக்கணும் என்கிறது உற்சாகத்தை கெடுக்கும். என்னடா இவ்வளோ நாளா முயர்சி செய்யறோம்; பர்பெக்‌ஷன் வரலையே!” ந்னு சலிப்பு வரும். மாறா முன்னேற்றம் எதாவது வரதான்னு பாத்தா ஒவ்வொரு சின்ன முன்னேற்றமும் உற்சாகத்தை கொடுக்கும். உடனேயே மாற்றம் வராது; சளைக்காம தொடர்ந்து முயற்சி செய்யணும். பொறுமை வேணும்.

Tuesday, 8 November 2016

சமூக உணர்வு மேலாண்மை

அடுத்து சமூக உணர்வு மேலாண்மை. முதல் மூணும் இருந்தாத்தான் இது சாத்தியம்ன்னு சொல்ல வேண்டியதில்லை. நாம் எப்படி உணர்கிறோம்ன்னு தெரியும்; மத்தவங்க உணர்வும் புரியும்; நாம் செய்கிறதுல நமக்கு கட்டுப்பாடு இருக்கு. இந்த நிலையில நாம் மத்தவங்களோட உறவாடறதுல தெளிவா இருக்க முடியும். நமக்கிடையே பிரச்சினைகள் இருந்தா அதை தீர்க்கறது கொஞ்சம் சுலபம். கொஞ்ச நாட்கள் இதை செய்ய நாம் ஒரு நல்ல உறவை உருவாக்கிப்போம். நல்ல நண்பர்கள் என்பது கடவுள் தந்த வரம். போற்றிப்பாதுகாக்கணும். நமக்கும் நண்பர்களுக்கு பொதுவான விஷயங்கள் என்ன, நாம் ஒத்தரை ஒத்தர் எப்படி நடத்தறோம், என்ன பகிர்ந்துக்கிறோம்ன்னு பல விஷயங்கள் இதில இருக்கு.

உலகம் ஒரு மிருக காட்சி சாலைப்போல. பலவிதப்பட்ட மக்களும் இருக்காங்க. அதில பலரையும் நமக்கு பிடிக்காம இருக்கலாம். இருந்தாலும் ஒரு சுமுகமான உறவு இருக்கறது வேலை நிமித்தமாகவோ சமூக உறவு நிமித்தமாகவோ கட்டாயமா இருக்கலாம். அந்த நேரத்தில இந்த திறன் இருக்கறது அவசியம். ஏதோ ஒரு விஷயத்தில அவங்களோட ஒத்துப்போகிறா மாதிரி இருந்தா நல்லது.இரண்டு பேருக்கும் கிரிக்கெட்காரர் அஷ்வினை பிடிக்குமா இருக்கும். அப்படி இருக்கறதுல அஷ்வினுக்கு ஒண்ணும் லாபம் இல்லை. இவங்களுக்கும் லாபமில்லைன்னாலும் ஏதோ ஒண்ணு பொதுவா இருக்கு! அது நல்லது.
யாரோட நம்ம உறவு பலகீனமா இருக்கோ அவங்களுக்கு நம் கருத்தை பறிமாறுவது கஷ்டம். நாம் சொல்லறதை அவங்க காது கொடுத்து கேட்கணும்ன்னா சமூக உறவு மேலாண்மையை நாம பழகி எவ்ளோதான் கஷ்டமான ஆசாமியா இருந்தாலும் அவரோட ஒரு ஒரு நல்ல உறவை ஏற்படுத்தி லாபமடைய பார்க்கணும். ஒருவரோட எவ்வளவு நேரம் எவ்வளவு பலமா எவ்வளவு ஆர்வத்தோட உறவாடறோம் என்கிறது இந்த உறவு பலத்தை நிர்ணயிக்கும்.


சாதாரண நேரத்திலேயே இப்படின்னா ஒரு இறுக்கமான சூழ்நிலை உருவாயிட்டா அதை கையாளறது இன்னும் கஷ்டம். 70% பேர் இந்த இறுக்கமான சூழல்களை கையாள ரொம்ப கஷ்டப்படறாங்களாம். இந்த மாதிரி சூழல்கள் வேலைக்களத்திலதான் அதிகமா உருவாகுது. இதை சரியா கவனிக்கலைன்னா புரையோடிடும். நிலை இன்னும் மோசமாகும். நிறைய பேருக்கு நேரடியான ஒரு ஆரோக்கியமான உரையாடலை நடத்தி இதுக்கு தீர்வு காணத்தெரியலை. வெறுப்பும் கோபமும் சேர்ந்து ஒரு நாள் வெடிச்சு ரண களத்தை உருவாக்கிடும். அல்லது ஒத்தர் மேல இருக்கற இந்த உணர்ச்சிகள் மத்தவங்க மேல பாயும்! அவங்க ஏண்டா நம்ம மேல பாயறாங்கன்னு தெரியாம முழிப்பாங்க.

Monday, 7 November 2016

சமூக விழிப்புணர்வு:

இதுவே சமூக திறனுடைய அடிப்படை. நம்மை ஆராய்ந்து நாம் ஏன் எப்படி உணர்ச்சி வசப்படுகிறோம்ன்னு பார்க்கிறோம் இல்லையா? அதே போல மற்றவர்களைப்பற்றியும் உணர முடிவது சமூக விழிப்புணர்வு. மற்றவர்கள் எந்த உணர்ச்சிகளோட இருக்காங்க? ஏன் அப்படி? இதை சரியா புரிஞ்சுகிட்டா பல விஷயங்கள் முடிஞ்சுடும். ஆனா அது சுலபமில்லை என்கிறது வெளிப்படை!

ஒரு சமயத்தில் நாம் ஒரு மாதிரி உணர்வோம். மத்தவங்க அதே மாதிரி உணரணும்ன்னு ஒண்ணும் கிடையாது. முந்திரி கேக்கை பாத்தா எனக்கு ஜொள்ளு ஊறும். மத்தவங்களுக்கும் அப்படியே இருக்கும்ன்னு சொல்ல முடியுமா என்ன?

நம்மோட உணர்ச்சிகளை கொஞ்சம் ஒதுக்கி வெச்சுட்டு மத்தவங்களை அவங்க இடத்தில இருந்து பார்க்க முடியணும். கூர்ந்து கவனிக்கறதும் காது கொடுத்து கேட்கிறதும் இதுக்கு உதவும். இதுக்கு நம்மோட செயல்களை கொஞ்சம் நிறுத்தணும், நாம் பாட்டுக்கு அடுத்து என்ன செய்வோம், என்ன பேசுவோம், மற்றவர் என்ன சொல்லப்போகிறார், என்ன செய்யப்போகிறார் என்பதைப்பத்தி ஊகம் செய்துகிட்டு இருந்தா அது இதுக்கு முட்டுக்கட்டையா இருக்கும். இதுக்கு நிறையவே பொறுமையும் பயிற்சியும் வேணும். ஒரு மனித இயல் ஆய்வாளர் மாதிரி கவனிக்கணும். ஒரே வித்தியாசம்; அவங்க தூரத்தில இருந்துகிட்டு கவனிப்பாங்க. இங்க நாமளோ அவங்க கூடவே இருந்துகிட்டு செயலாற்றிகிட்டு பேசிகிட்டு கவனிக்கவும் செய்யணும்!


Friday, 4 November 2016

சுய ஆளுமை

அடுத்ததா சுய ஆளுமை.
ஒரு நேரத்தில தான் விழிப்புடன், செயல்படுவதோ செயல்படாமல் இருப்பதோதான் சுய ஆளுமை. அதாவது மனசு தூண்டற மாதிரி இல்லாம புத்தி பூர்வமா செயல்படறது. நாம கோபப்பட்டா நாம் கோபமா இருக்கோம்ன்னு தெரியணும்; சோகமா இருந்தா சோகமா இருக்கோம்ன்னு. அதாவது நம்மோட விழிப்புணர்வு இருக்கறது அவசியம். இப்ப என்ன செய்யணும்ன்னு புத்திய செலுத்தி யோசிக்கணும்; அதாவது அப்ப ஏதேனும் செய்ய வேண்டி இருந்தா. சில சமயம் ஒண்ணும் செய்ய தேவையும் இருக்காது இல்லையா? என்ன செய்யலாம் என்கிறதுல சில தேர்வுகள் -ஆப்ஷன்ஸ்- இருக்கும். அதையும் யோசிக்கணும். அப்புறமா செயல்படணும். அதாவது மற்றவர்கள் ஏற்படுத்தும் சூழ்நிலையால் உணர்ச்சி பூர்வமான எதிர்வினையா இல்லாம யோசிச்சு எதையும் செய்யணும்.
சில அதீத உணர்ச்சிகள் நமக்கு தேர்வு எதுவுமே இல்லையோன்னு நினைக்க வைக்கலாம். நல்லதும் நடக்கலாம்; கெட்டதும் நடக்கலாம். முடிவு இப்படித்தான் இருக்கணும் என்கிறது நம்ம கையில இல்லையே? அதத்தானே பகவத் கீதை சொல்லுது? ஆனாலும் நிச்சயமில்லாத தன்மையை பொறுத்துக்கொண்டு உணர்ச்சிகளை கவனிச்சு புரிஞ்சுக்கொள்ள பழகியாச்சுன்னா ஏதோ வழி நிச்சயமா தென்படும்.
சுய ஆளுமை வெறுமே கோபத்தை அடக்கவோ பிரச்சினையான நடத்தையை மாத்தவோ மட்டுமில்லே. இதுல பெரிய விஷயம் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களிலேயும் இதை கடைபிடிச்சு நடந்துக்கறதுலதான் இருக்கு. சிறுதுளி பெரும் வெள்ளம் இல்லையா?
சர்க்கரை வியாதி இருக்கற ஆசாமி ஆரம்பத்திலிருந்தே “அட இது நல்லா இருக்கும் போலிருக்கே? சாப்பிடலாமே!” ந்னு தோணுகிற சின்ன சின்ன சபலத்தைக்கூட இந்த நிலையிலேயே கிள்ளி எறியணும். நிலமை கட்டுக்குள்ள இல்லாம போகிற வரை பொறுத்து செய்கிறதில்லை. தற்காலிக லாபத்துக்காக, சபலத்துக்காக நெடு நாள் இலக்குக்கு கேடா எதையும் செய்யக்கூடாது.

சொல்ல வரது என்னன்னா செய்கிற எல்லாத்தையுமே புத்தி பூர்வமா செய்கிறதா பழக்கம் கொண்டு வரணும். இது சின்ன விஷயம்தானே, மனசுல படறதை செய்யலாம்ன்னு எதையுமே நினைக்கக்கூடாது.

Wednesday, 2 November 2016

சுய விழிப்புணர்வு

இந்த சுய விழிப்புணர்வுல ஆச்சரியம் என்னன்னா இதைப்பத்தி கொஞ்சம் கவனம் இருந்தாலே, யோசிச்சாலே போதும், நாம இதுல முன்னேறுவோம். ஆரம்பத்துல நாம் நம்மோட குறைகளைப்பத்தியே அதிகம் கவனம் செலுத்துவோமா இருக்கும். ஆனாலும் பின்னால நாம இதைப்பத்தி பயப்படாம இருப்போம். இது என்ன சொல்லுது? நாம எதை சரி செஞ்சுக்கணும்ன்னுதானே? ரைட், செஞ்சுடுவோம். இப்படித்தான் நினைக்கத்தோணும்.
நாம வளர்த்துக்க வேண்டிய இந்த நாலு திறமைகளில இதுவே ரொம்ப முக்கியம். இது இருந்துட்டா மற்றதை எல்லாம் நல்லாவே சுலபமாவே பயன்படுத்த முடியும். இது அதிகமாக ஆக நாம் நம் வாழ்க்கையைப்பத்தி சந்தோஷப்படுவோம். நம்மால சுலபமா நாம நினைச்சதை - வீட்டிலேயோ வேலையிலேயோ - சாதிக்க முடியறதே

ஆராய்ச்சிகள் சொல்வது, இதில அதிக திறனோட இருக்கறவங்களில 83 % பேர் நல்லா வேலை செய்கிறவங்களில மேல் மட்டத்தில இருக்காங்க. 2% மட்டுமே கீழ்மட்டத்தில இருக்காங்களாம்.

நம் மனசை ஆராயறதுன்னாலே தயங்கறோம். பயப்படறோம். அது மன நோய்ன்னு நினைக்கிறோம். எதாவது ஆபத்தை எதிர் நோக்கறப்பத்தான் நம்மோட பலம் பலகீனங்களை புரிஞ்சுக்கணுமா என்ன? சாதாரணமா இருக்கறப்பவே மனசை ஆராய்ஞ்சு அதோட கோரமான முகம் புன்னகைக்கும் முகம்ன்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம். ஆனா அப்படி நாம செய்யறதில்லை. எது சௌகரியமா இருக்கோ அதை மட்டும் ஏத்துக்கொண்டு அசௌகரியமானதை கண்டுக்காம விட்டா நம்மால நம் முழுத்திறனோட செயல்பட முடியாது. அழகான கன்னத்துக்குழிகளையும் பருக்களையும் சேர்த்தே பார்க்கலாம்!

Tuesday, 1 November 2016

நான்கு திறன்கள்


அடிப்படையில் நாம் 4 விஷயங்களை கவனிக்க வேண்டும். இதுல ரெண்டு ஒவ்வொத்தருக்கும் சொந்தமானது, இன்னும் ரெண்டு சமூகத்தை சார்ந்தது. ரெண்டு விழிப்புணர்வு. ரெண்டு மேலாண்மை.
இல்லையில்லை. மொத்தம் எட்டு இல்லை. நாலுதான்.

சுய விழிப்புணர்வு, சுய மேலாண்மை. சமூக விழிப்புணர்வு, சமூக உறவு மேலாண்மை, நாலுதானே? ரைட்!

சமூகம் பத்தி சொல்கிறது நாம எப்படி சமூகத்தைப்பத்தி தெரிஞ்சு வெச்சிருக்கோம், அதோட உறவாடறோம் என்கிறதை குறிக்குது.

சுய விழிப்புணர்வு? நாம எந்த நேரத்தில எந்த உணர்வுகளோட இருக்கோம் என்கிறதை அறிஞ்சு இருப்பது. குறிப்பிட்ட நேரங்களில் எப்படி நடந்துப்போம் என்பதையும் அறிஞ்சு இருப்பது. ஒருத்தர் நம்மை பாராட்டினா அப்படியே நம்பி குளிர்ந்து போயிடுவோமா அல்லது இவன் எதுக்குடா நம்மை பாராட்டரார்ன்னு சந்தேகப்படுவோமா? ஒத்தர் நம்மை திட்டினா என்ன செய்வோம்? இது போல… புரியுதில்லையா?

உண்மையா நாம நம் உணர்வுகளை புரிஞ்சுக்கணும்ன்னா அதுக்குன்னு தனியா நேரம் ஒதுக்கி உட்கார்ந்து அதைப்பத்தி யோசிக்கணும். உணர்வுகளுக்கும் ஒரு வேலை இருக்கு. அது பாட்டுக்கு சும்மா வரதில்லை. இந்த உணர்வுகள் ஏன் எங்கிருந்து வரதுன்னு பார்க்கணும். பல சமயம் அது சரியா பிடிபடாது.

குறிப்பிட்ட விஷயத்துல எனக்கு நிறைய தெரியும்ன்னு நினைச்சுக்கிட்டு வெளியே காட்டிகிட்டு இருக்கேன், ஆனா உள்ளுக்குள்ள அப்படி இல்லைன்னு தெரியும். இப்ப யாரும் நான் சொல்கிறதை மறுத்து பேசினா இந்த குறைபாடு வெளிப்பட்டுடுமோன்னு பயப்படுவேன். அதனால கோபம் வரும். “உனக்கு என்ன தெரியும்? பெரிசா பேச வந்துட்டே?” ந்னு கத்துவேன். இது போல பலதும். இதை நிதானமா உட்கார்ந்து யோசிச்சாத்தான் வெளியே வரும். இப்படி நம்மோட உண்மை ரூபத்தை நேருக்கு நேர் சந்திக்கற தைரியம், நம் பலவீனங்களை, அவமானங்களை சந்திக்கிற தைரியம் அவசியமா இருக்கணும். அப்பத்தான் நாம இந்த விஷயத்துல கொஞ்சமாவது முன்னேறலாம்.
பலமான உணர்வுகளுக்கு இன்னும் அதிக நேரம் செலவழிச்சு யோசிக்க வேண்டி இருக்கலாம். ஆனா பின்னால ‘அடடா, இப்படி செஞ்சுட்டோமே’ ந்னு வருத்தப்படாம இருக்கணும்ன்னா இது அவசியமே.

இப்படி ஆழ் மனசில புதைஞ்சு இருக்கிற கருத்த ரகசியங்களை அடிமனசு உந்துதல்களை வெளிச்சம் போட்டுக்காட்டறது இதோட நோக்கமில்லை. ஆனா அதை புரிஞ்சுகிட்டா, ரைட் இதை சரி செய்ய இப்படி செய்யணும் என்கிறது சுலபமா புரிஞ்சுடும். எதை நாம் நல்லா செய்யறோம், எது நம்மை செயல்பட உந்துது; எதை செஞ்சா நமக்கு நிறைவை தருது; யார் அல்லது எந்த சூழ்நிலை நம்மை உணர்ச்சிகுள்ளாக்குது என்பதை எல்லாம் புரிஞ்சு கொண்டால் தெளிவா இருக்கலாம்.