Friday 31 July 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 11

உணர்வுகளுக்கு எதிர்வினை:

உணர்வுசார்நுண்ணறிவில ஒரு முக்கியமான உண்மை உணர்ச்சிகள், எண்ணங்கள் செயல்களுக்கு இடையே இருக்கிற வித்தியாசங்களை எல்லாம் புரிஞ்சுக்கிறது.
இதை கற்பனை பண்ணிப்பாருங்க!  நீங்க செஞ்ச எதையாவது உங்க தம்பி விளையாட்டா கலைச்சுட்டான்னா என்ன நடக்கும்? கோபம் வந்து, என் தம்பி ஒரு முட்டாள்ன்னு சொல்லி அவனை அடிப்பீங்கதானே? ம்ம்ம்.... இதுல ஒரு உணர்வு, ஒரு எண்ணம் ஒரு செயல் இருக்கு. மூணும் ஒண்ணுத்துக்கொன்னு தொடர்பு உள்ளதுன்னாலும் அவை எல்லாம் வேற வேற.

விவரமா பார்க்கலாமா? கோபம் வருது, சரி. அது வெறும் கோபம் மட்டுமே. எப்பவும் கோபம் வந்தா இதே எண்ணம் வருமா? இல்லைதானே? அதனால அது தனி. “என் தம்பி ஒரு முட்டாள்” ந்னுதான் எண்ணம் வரணும்ன்னு இல்லையே? ”விவரங்கெட்ட பய” ந்னு தோணலாம். ”வேணும்ன்னு செய்யறான்” ந்னு தோணலாம். வேற பலவிதமா தோணலாம்.

அல்லது கோபம் வந்து இதே எண்ணம் வந்தாக்கூட செயல் வேற மாதிரி இருக்கலாம். அடிக்காம வீட்டுக்குபோடான்னு துரத்தலாம். உன்னோட பேச மாட்டேன்னு சொல்லலாம். இன்னும் பலவிதமா….

ம்ம்ம்ம்… ஆனா நாம ஏன் பல சமயம் பிரச்சினையை உண்டாக்குகிற செயல்களை செய்யறோம்? ஒவ்வொரு சூழலுக்கும் எதிர்வினை செய்யக்கூடியது ஆயிரம் விதமா இருக்க ஏன் ஒண்ணையே எப்பவும் செய்யறோம்? ம்ம்ம்ம்? ஒரு பக்கம் பாத்தா இப்படி கோவப்பட்டு தம்பியை அடிக்கிறது நமக்கு நிறைவா இருக்கு. இதுல ஏதோ நமக்கு பிடிச்சிருக்கு என்பதால திருப்பி திருப்பி அதையே செய்கிறோம்! சிலருக்கு புத்தி பூர்வமா இது தப்புன்னு தெரிஞ்சிருந்தாலும் கூட – அப்பா அம்மா ஆயிரம்தரம் புத்தி சொல்லி இருந்தாக்கூட- இது தானியங்கி போல தானா நடக்குது!

இதுல என்ன முக்கியம்ன்னா இந்த மாதிரி நடக்கிறது தானியங்கித்தனம் இல்லை; இது திருப்பித்திருப்பி செய்து செய்து நாமா கத்துக்கொண்டது!

நாம “எனக்கு கோபம் வந்தா அடிப்பேன்” ந்னு பழகி இருந்தா, இந்த மாதிரியை நாம கத்துக்கொண்டு இதயேத்தான் ஒவ்வொரு தரமும் செய்வோம். இந்த எதிர்வினை ஆளுக்கு ஆள் மாறுபடும்ன்னு உங்களுக்குத் தெரியும்தானே? சிலர் கோபம் வந்தா கத்தோ கத்துன்னு கத்துவாங்க; சிலர் பிடிக்காதது நடந்தா உடனே ரொம்பவே அடங்கி அமைதியாயிடுவாங்க; சிலர் அறையை விட்டு வெளியே போயிடுவாங்க.

நீங்க எப்படி?

துக்கம் வந்தா நீங்க எப்படி நடந்துக்கறீங்க? அழுவீங்களா, கோபப்படுவீங்களா, வேற யாரையும் நீதான் காரணம்ன்னு குற்றம் சுமத்துவீங்களா, இல்லை துக்கமே இல்லாத மாதிரி நடிப்பீங்களா? அல்லது ஒரு ஜோக் சொல்லுவீங்களா, வேற எதுவும் செய்வீங்களா?

கோபம் வரப்ப என்ன செய்வீங்க? அடிப்பீங்களா, கெட்ட வார்த்தையால திட்டுவீங்களா, இல்லை முறைச்சுகிட்டு போவீங்களா இல்லே…. எந்த மாதிரி நடந்துப்பீங்க?

இங்கே ’மாதிரி’ என்கிறது நாம பழகி எப்பவும் நடந்துக்கிற வழி.
இப்படி பலது யோசிக்க முடியுதா?
(எண்ணம் அல்லது உணர்ச்சி) அப்ப, நான்/ எனக்கு (எதிர்வினை)…

உதாரணமா, நீங்க நான் சொல்கிறதை கேக்கலைன்னு நினைக்கிறப்ப எனக்கு வருத்தமா இருக்கு!