Tuesday 8 November 2016

சமூக உணர்வு மேலாண்மை

அடுத்து சமூக உணர்வு மேலாண்மை. முதல் மூணும் இருந்தாத்தான் இது சாத்தியம்ன்னு சொல்ல வேண்டியதில்லை. நாம் எப்படி உணர்கிறோம்ன்னு தெரியும்; மத்தவங்க உணர்வும் புரியும்; நாம் செய்கிறதுல நமக்கு கட்டுப்பாடு இருக்கு. இந்த நிலையில நாம் மத்தவங்களோட உறவாடறதுல தெளிவா இருக்க முடியும். நமக்கிடையே பிரச்சினைகள் இருந்தா அதை தீர்க்கறது கொஞ்சம் சுலபம். கொஞ்ச நாட்கள் இதை செய்ய நாம் ஒரு நல்ல உறவை உருவாக்கிப்போம். நல்ல நண்பர்கள் என்பது கடவுள் தந்த வரம். போற்றிப்பாதுகாக்கணும். நமக்கும் நண்பர்களுக்கு பொதுவான விஷயங்கள் என்ன, நாம் ஒத்தரை ஒத்தர் எப்படி நடத்தறோம், என்ன பகிர்ந்துக்கிறோம்ன்னு பல விஷயங்கள் இதில இருக்கு.

உலகம் ஒரு மிருக காட்சி சாலைப்போல. பலவிதப்பட்ட மக்களும் இருக்காங்க. அதில பலரையும் நமக்கு பிடிக்காம இருக்கலாம். இருந்தாலும் ஒரு சுமுகமான உறவு இருக்கறது வேலை நிமித்தமாகவோ சமூக உறவு நிமித்தமாகவோ கட்டாயமா இருக்கலாம். அந்த நேரத்தில இந்த திறன் இருக்கறது அவசியம். ஏதோ ஒரு விஷயத்தில அவங்களோட ஒத்துப்போகிறா மாதிரி இருந்தா நல்லது.இரண்டு பேருக்கும் கிரிக்கெட்காரர் அஷ்வினை பிடிக்குமா இருக்கும். அப்படி இருக்கறதுல அஷ்வினுக்கு ஒண்ணும் லாபம் இல்லை. இவங்களுக்கும் லாபமில்லைன்னாலும் ஏதோ ஒண்ணு பொதுவா இருக்கு! அது நல்லது.
யாரோட நம்ம உறவு பலகீனமா இருக்கோ அவங்களுக்கு நம் கருத்தை பறிமாறுவது கஷ்டம். நாம் சொல்லறதை அவங்க காது கொடுத்து கேட்கணும்ன்னா சமூக உறவு மேலாண்மையை நாம பழகி எவ்ளோதான் கஷ்டமான ஆசாமியா இருந்தாலும் அவரோட ஒரு ஒரு நல்ல உறவை ஏற்படுத்தி லாபமடைய பார்க்கணும். ஒருவரோட எவ்வளவு நேரம் எவ்வளவு பலமா எவ்வளவு ஆர்வத்தோட உறவாடறோம் என்கிறது இந்த உறவு பலத்தை நிர்ணயிக்கும்.


சாதாரண நேரத்திலேயே இப்படின்னா ஒரு இறுக்கமான சூழ்நிலை உருவாயிட்டா அதை கையாளறது இன்னும் கஷ்டம். 70% பேர் இந்த இறுக்கமான சூழல்களை கையாள ரொம்ப கஷ்டப்படறாங்களாம். இந்த மாதிரி சூழல்கள் வேலைக்களத்திலதான் அதிகமா உருவாகுது. இதை சரியா கவனிக்கலைன்னா புரையோடிடும். நிலை இன்னும் மோசமாகும். நிறைய பேருக்கு நேரடியான ஒரு ஆரோக்கியமான உரையாடலை நடத்தி இதுக்கு தீர்வு காணத்தெரியலை. வெறுப்பும் கோபமும் சேர்ந்து ஒரு நாள் வெடிச்சு ரண களத்தை உருவாக்கிடும். அல்லது ஒத்தர் மேல இருக்கற இந்த உணர்ச்சிகள் மத்தவங்க மேல பாயும்! அவங்க ஏண்டா நம்ம மேல பாயறாங்கன்னு தெரியாம முழிப்பாங்க.

No comments:

Post a Comment