Tuesday 17 January 2017

14. துல்லியத்துக்கு சோதனை.

14. துல்லியத்துக்கு சோதனை.
சமூக விழிப்புணர்வு நிறைய இருக்கறவங்க கூட சமயத்தில சொதப்பிடுவாங்க. காரணம் இது அவசர உலகம். ஓடிக்கிட்டே இருக்கோம், ஓடிக்கிட்டே இருக்கோம். நின்னு கொஞ்சம் பேச நேரமில்லை.

அல்லது சமயத்துல கொஞ்சம் சந்தேகமா இருக்கலாம். அனேகமா இப்படித்தான்னு பட்சி சொன்னாலும் நமக்கு சில சமபம் கொஞ்சம் உறுதிப்படுத்திக்க வேண்டி இருக்கு.
என்ன செய்யலாம்?
கேளுங்க.
கேளுங்க?
ஆமாம். கேளுங்க கொடுக்கப்படும்.
ஒரு விஷயம் தெரியாம இருக்கறதுலேந்து தெரிஞ்சு கொண்டோம் என்கிற நிலைக்கு போக ரொம்ப எளிசான வழி கேட்கிறது. இதுல என்ன ஈகோ பார்க்க வேண்டியிருக்கு? தெரியலை, கேட்கிறோம். யாரேனும் பதில் சொல்லுவாங்க. தெரிஞ்சுப்போம். அப்படி இல்லாம சந்தேகத்திலேயே வண்டியை ஓட்டிகிட்டு இருந்தா சரியா போகாது!

ஆஃபீஸுக்கு போகிறோம். கூட வர சுப்புணி இன்னைக்கு தலையை தொங்க போட்டுகிட்டு உம்ன்னு மூஞ்சியை வெச்சுகிட்டு வரான். ‘என்னப்பா எப்படி இருக்கே?’ ன்னு கேட்கிறோம். “உம் சௌக்கியம்; ன்னு பதில் வருது. இது உண்மையான பதிலா என்ன? இது வழக்கமான பதில். ஜுரம் அடிச்சுகிட்டு இருமிகிட்டு இருந்தாக்கூட எப்படி இருக்கீங்கன்னு யாரும் கேட்டா - கேட்கிறவர் டாக்டரா இல்லாத பட்சத்தில - இருமிகிட்டே “நல்லா இருக்கேன்!” ந்னு சொல்ல நாம பழகிட்டோம்.

சுப்புணி சௌக்கியம்ன்னு சொன்னாக்கூட அவன் சௌக்கியமா இல்லைன்னு தெரியறதே?
இப்ப நாம என்ன செய்யலாம்?
கொஞ்சம் கவலையோட இருக்கே போலிருக்கே? என்ன பிரச்சினைன்னு எங்கிட்ட சொல்லலாமா?” நம்மோட ஊகம்; ஒரு நேரடி கேள்வி. அவ்ளோதான்.
அவர் நமக்கு எவ்வளவு தெரியணுமோ அவ்வளவு சொல்லுவார். விஷயம் தெரிய வேணாம்ன்னு நினைச்சா “அதெல்லாம் ஒண்ணுமில்லை”ம்பார். இல்லை கொஞ்சமா தெரியலாம்/ முழுக்க தெரியலாம்ன்னா அதுக்கு தகுந்தபடி பதில் வரும்.
எப்படி இருந்தாலும் நாம செஞ்சது ரைட்டு. அவருக்கு ஒரு உதவிக்கரம் நீட்டினோம். அது போதும்.

இன்னொரு வகை குறிப்புகளை நாம் உணர்ந்ததை உறுதி செஞ்சுக்க. “கண்ணை இடுக்கிண்டு பார்க்கிறதை பாத்தா மைக்ரேன் வந்துடுத்து போலிருக்கே? மாத்திரை வேணுமா?”
பதில் ஆமான்னும் இருக்கலாம். இல்லை “யோவ்! ஜன்னலுக்கு எதிரேந்து நகரு. உன் பின்னாலேந்து சூரிய வெளிச்சம் கண்ணை குத்துது” ந்னும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் நமக்கு உறுதியாயிடும்!


நாம பார்த்து ஊகிச்சதை இப்படி உறுதி செய்து கொள்ளக்கொள்ள நம்மோட சமூக விழிப்புணர்வு வளரும்

No comments:

Post a Comment