Monday 30 January 2017

5. விமர்சனத்தை நல்லபடி எடுத்துக்குங்க!

5. விமர்சனத்தை நல்லபடி எடுத்துக்குங்க!

இதயே எடுத்துக்குங்களேன். மாஞ்சு மாஞ்சு இதை எழுதிகிட்டு இருக்கேன். ஏதோ எல்லாருக்கும் நல்லதா இருக்கும்ன்னு ஒரு நினைப்புத்தான். ஆனா இதை சரியா எழுதறேனா, பயனுள்ளதா இருக்குமா? இன்னும் எளிமையா எழுதணுமா? உதாரணங்கள் போதலையா? இதெல்லாம் எப்படி தெரியும்? யாரானா சொன்னாத்தான் தெரியும். இதுக்குத்தான் பின்னூட்டம் முக்கியம் என்கிறது.

நம்மோட எண்ண ஓட்டம் ஒரு மாதிரி இருக்கும். அந்த ஓட்டத்தில எல்லாரும் சேர்ந்துப்பாங்கன்னு சொல்ல முடியாது. பிரமாதமா எழுதறதாத்தான் நினைச்சுகிட்டு இருக்கோம். ஆனா பலருக்கும் நாம் பிரயோஜனமா இருக்கணும்ன்னா நாம எழுதறது பலருக்கும் புரியணும். இல்லைன்னா இதை எழுத செலவு செஞ்ச நேரம் வீண்தானே?
ஆனா விமர்சனத்தைப்பத்தி நமக்கு ஒரு சரியான கற்பனை இருக்கணும். அதை சரியா எடுத்துக்கத்தெரியணும்.

விமர்சனம் ஒரு எதிர்பாராத ப்ரசண்ட் மாதிரி. உள்ளே என்ன இருக்குன்னு தெரியாது. நமக்கு ரொம்ப பிடிச்ச புத்தகமாவும் இருக்கலாம். ஆச்சரியப்படுத்தற சித்திரமாகவும் இருக்கலாம். கோபமூட்டற சில்லி ப்ராக்டிகல் ஜோக்காவும் இருக்கலாம்.

அதே போல விமர்சனமும் ஆஹோ ஓஹோ இதப்போல உண்டான்னும் இருக்கலாம். நல்லா எழுதறீங்க; இதையும் படிங்க பிரயோஜனமா இருக்கும்ன்னும் இருக்கலாம். வண்டாரு, பெரிஸ்ஸா சொல்லறதுக்கு. படு மோசம் போய்யா ன்னும் இருக்கலாம்.

இதெல்லாம் எழுத்துலகத்தில பரவாயில்ல; சமாளிச்சுடலாம். ஆனா மெய்யுலகத்தில நேருக்கு நேர் விமர்சனம் எழும் போது அதை சரியா எடுத்துக்க பழகி இருக்கணும். விமர்சனம் வரும்போது நாம எப்படி உணர்கிறோம்? அதை எப்படி வெளிக்காட்டறோம்? எதிர்வினைக்கு நம் தேர்வுகள் என்ன?

இதெல்லாம் சரியா இருக்க சிலது செய்யணும். கொஞ்சம் ஆலோசிக்கணும். விமர்சனம் செய்கிறது யார்? நம்ம மேல அக்கறை இருக்கற நடுநிலை தவறாத விமர்சகரா? அப்படி சரி, உன்னிப்பா கவனிப்போம். திருத்த வேண்டியது இருந்தா திருத்திப்போம். புது ஆசாமியா? எப்படிப்பட்டவர்ன்னு அப்புறம் யோசிச்சுக்கலாம். இப்ப கவனிப்போம். எப்பவும் ஏதாவது அர்த்தமில்லாத விமர்சனம் செய்யற ஆசாமியா? ரைட். விமர்சனம் உண்மையான்னு கொஞ்சமே கொஞ்சம் விசாரம் செஞ்சுட்டு, விட்டுடுவோம்.

விமர்சனத்தை கேட்கும் போது நம்மோட சமூக விழிப்புணர்வை செயலுக்கு கொண்டு வருவோம். என்ன காதில விழுது. அது மட்டுமா இல்லை உள்குத்து ஏதாவது இருக்கா? மறைவா பொதிந்த பொருள் ஏதாவது இருக்கா? தேவையானா விளக்கம் கேட்போம். அவர் சொல்லற கருத்துக்களை ஒத்துக்கப்போறோமோ இல்லையோ அவருக்கு நன்றியும் சொல்லுவோம். ஏன்னா விமர்சனத்தை சரியா எடுத்துக்க நாம மெனக்கெடறது போலவே அவரும் விமர்சனத்தை செய்ய கொஞ்சமாவது மெனக்கெட்டு இருக்கார்.

விமர்சனத்தை உள் வாங்கின பிறகு நம்மோட சுய மேலாண்மை திறன் செயலுக்கு வரணும். விமர்சனம் எழுந்த உடனே பதில் சொல்லி ஆகணும்ன்னு ஒரு கட்டாயமும் இல்லை. சில பல விஷயங்கள் கொஞ்சம் அமைதியா யோசிக்க யோசிக்கப் புலப்படலாம். “இதைப்பத்தி நான் யோசிக்கிறேன்” என்கிறது நல்ல பதில்.

இதெல்லாம் முடிச்சு பிறகு இந்த விமர்சனங்களை ஒட்டி ஏதாவது செய்யணுமா, என்ன செய்யலாம்ன்னு முடிவெடுக்கலாம். இப்படி சரி செய்யறது ஒத்தரோட விமர்சனத்தை மதிக்கிறோம் என்பதுக்கு அடையாளம். அவரோட இன்னும் நெருங்க ஒரு வாய்ப்பு!


No comments:

Post a Comment