Friday 13 January 2017

11. ஆர்ட் ஆஃப் லிவ்விங்…. ஹிஹி லிஸ்னிங்!

11. ஆர்ட் ஆஃப் லிவ்விங்…. ஹிஹி லிஸ்னிங்!
பசங்களுக்கு விளையாட்டுகள் எடுத்துக்கொண்டு இருந்த காலம் ஒண்ணு இருந்தது. சாதாரணமா ‘உஷ் சத்தம் போடாதே! ன்னுதானே சொல்லிக்கொண்டு இருப்போம்? ஆனா ஒரு விளையாட்டு எல்லாருக்கும் பிடிக்கும். ஏன்னா சத்தம் போடறதுதான் அந்த விளையாட்டுல முக்கியம். மூணு அணியா பிரிக்கணும். பூமில ரெண்டு கோடு போட்டு அவங்களை நடுவில ஒரு டீம், ரெண்டு பக்கமும் ஒவ்வொரு டீம்ன்னு நிறுத்தி வைக்கணும். ஒரு பக்க டீமுக்கு ஒரு வாக்கியத்தை சொல்லுவோம். மனசில வாங்கிக்கணும். நடுவில இருக்கிறவங்க சிக்னல் கிடைச்சதும் கத்த ஆரம்பிப்பாங்க. ரெண்டாவது சிக்னலுக்கு வாக்கியத்தை எந்த டீம்கிட்ட சொன்னோமோ அவங்க அதை திருப்பித்திருப்பி கத்தி சொல்லுவாங்க. மூணாவது டீம் அதை காது கொடுத்து கேட்டு என்ன சொல்றாங்கன்னு கண்டு பிடிக்கணும். சுமார் அரை நிமிஷம் டைம். அடுத்த சிக்னலுக்கு வாக்கியத்தை சொல்றவங்க நிறுத்தணும். அடுத்து நடுவில சத்தம் போடறவங்க நிறுத்தணும். அடுத்து மூணாவது டீம் எந்த வாக்கியம் சொல்லப்பட்டதுன்னு சொல்லணும். சான்ஸ் இருந்தா விளையாடிப்பாருங்க! ரொம்பவே சுவாரசியமானது.

இங்கே விஷயம் நமக்கு என்னன்னா காது கொடுத்து கேட்கிறது. அந்த ஃபோகஸ் வரலைன்னா என்ன சொல்றாங்கன்னு புரியாது. முக பாவம், உதட்டு அசைவு, உடல் மொழி எல்லாம் கணக்கில வரும்.

இப்ப இருக்கிற பெரிய மனிதர்கள் இதை விளையாடினா எப்படி இருக்கும்ன்னு கற்பனை செய்து பார்க்கிறேன். வெற்றி சதவீதம் கொஞ்சமாகவே இருக்கும்ன்னு தோணுது. இந்த காது கொடுத்து கேட்கிற பழக்கமே இல்லாம போயிடுத்து. ஃபோகஸ் இருக்கணும். இது சும்மா பேச்சை கேட்கறதில்லே. டோன் எப்படி இருக்கு; வேகமா பேசறாங்களா மெதுவாவா; எவ்வளவு உரக்க பேசறாங்க …. இது எல்லாத்திலேயும் விஷயம் இருக்கு. சொல்லப்பட்டது என்ன? சொல்லாம விட்டது என்ன? உள்குத்து ஏதும் இருக்கா? மறை பொருள் ஏதும் இருக்கா? பேசற விஷயம் இந்த மத்ததோட பொருந்திப்போகிறதா? பல சமயம் இந்த வெற்று வார்த்தைகளைவிட மத்தத்து இன்னும் மதிப்புள்ளது. என்னதான் உணர்ச்சிகரமான வார்த்தைகளா இருந்தாலும் மத்ததோட ஒத்துப்போகலைன்னா பேசறவர் அதுல ஒரு ஈடு பாடு இல்லாம கடமைக்கு பேசிகிட்டு இருக்கார்ன்னு புரிஞ்சுக்கலாம்! கவனிக்க எவ்வளோ விஷயங்கள்! இதுல எவ்வளவு நாம் செய்யறோம்?


பயிற்சி என்ன? ஒத்தர் நம்மகிட்ட பேசினா மத்த எல்லா காரியத்தையும் நிறுத்திட்டு அவங்க சொல்லறதையும் கூட இருக்கிற உடல் மொழியையும் கவனிக்க ஆரம்பிக்கணும். ஃபோன்ல பேசறீங்கன்னா அதை மட்டும் செய்யுங்க. பேசிகிட்டே ஈமெய்லை நோண்டாதீங்க! பையன் ஏதாவது கேள்வி கேட்டா எல்லா வேலையையும் நிறுத்திட்டு கண்களை பார்த்து பதில் சொல்லுங்க. வீட்டில எல்லாருமா சாப்பிட உட்காரலாம். டிவியை நிறுத்திட்டு ஒவ்வொருத்தரும் பேசறதை மத்தவங்க கேளுங்க. யாரும் உங்களை சந்திக்க வந்தா முடிஞ்சா கதவை சாத்திட்டு கிட்ட உட்கார்ந்து அவங்க சொல்லறதை கேளுங்க. இப்படி சின்ன சின்ன விஷயங்களில கவனம் செலுத்த நிகழ்காலத்தில இருக்கவும் கத்துப்போம்; மத்தவங்க சொல்லறதுல இருக்கற விஷயத்தையும் சரியா புரிஞ்சுப்போம்.

No comments:

Post a Comment