Thursday, 26 January 2017

3. குழப்பமான சமிக்ஞைகளை கொடுக்காதீங்க!

3. குழப்பமான சமிக்ஞைகளை கொடுக்காதீங்க!
முன்னே எங்கேயோ படிச்ச ஜோக். இஸ்ரேல்ல வெளிநாட்டுப்பயணி ஒரு டாக்ஸில போயிட்டுருந்தார். அந்த அனுபவம் அவருக்கு ரொம்ப புதுசு. டாக்ஸிகாரர் சிவப்பு விளக்கு எரிஞ்சா படுவேகமா சிக்னலை கடப்பார். பயணி பயங்கர டென்ஷனாயிட்டார். உசிர கையில பிடிச்சுண்டு பயணம் செஞ்சார். ஓரிடத்தில சிக்னல்ல பச்சை விளக்கு எரிஞ்சது.
ட்ரைவர் டாக்ஸியை நிறுத்திட்டார். பயணிக்கு ஆச்சரியம். “ஏன்பா நிறுத்திட்டே? பச்சை விளக்குதானே எரியுது? போக வேண்டியதுதானே?” ந்னு கேட்டார். ட்ரைவர் திரும்பிப்பாத்து சொன்னார்: “ஏம்யா அறிவிருக்கா உனக்கு? நமக்கு பச்சைன்னா எதிரே வரவணுக்கு சிவப்புதானே? அவன் வருவானில்ல?”

எது சிக்னல்ன்னாலும் தெளிவா இருக்கணும். நாம பாட்டுக்கு குழப்பமான சிக்னல் எல்லாம் கொடுத்து நம்ம குழப்பத்த மத்தவங்களுக்கும் கடத்தக்கூடாது.

உடல் மொழி, நம் எதிர் வினைகள் மூலமா உணர்ச்சிகள்தான் உண்மையை சொல்லும். வெற்று வார்த்தைகள் இல்லை. “அருமையான வேலை செஞ்சு இருக்கீங்க!” ந்னு தாழ்வான குரல்ல உர்ர்ருன்னு முகத்த வெச்சுகிட்டு சொன்னா அத பாராட்டா எடுத்துக்கவா முடியும்? வழக்கமா மக்கள் தாம் என்ன பார்க்கிறாங்களோ அதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. கேட்கிறதுக்கு இல்லே! இதனாலத்தான் இணையத்தில உரையாடறதுல்ல நிறைய பிரச்சினைகள் வருது. அதை தவிர்க்க சிரிப்பான்கள் போட்டாலும் முழுக்க ஈடு செய்ய முடியாது.

ஏம்ப்பா உடல்நிலை எப்படி இருக்குன்னு கேட்கிற கேள்விக்கு ஓ பிரமாதமா இருக்கேன்னு பதிலை லொக்கு லொக்குன்னு இரும்பிகிட்டே சொன்ன ஜனங்க எதை நம்புவாங்க?
தேர்ந்த நடிகரா இல்லைன்னா நம் உணர்ச்சிகள் வெளிப்படுவதை தடுக்க முடியாது. தினசரி ஐம்பதாயிரம் எண்ணங்கள் வந்து போற போது இது மாறிகிட்டே இருக்கும் இல்லையா? அது எல்லாமே நம் கவனத்துக்கு வரும்ன்னு இல்லை. ஒத்தர்கிட்டே பேசிகிட்டு இருக்கோம். ஆனா இன்னும் முந்திய ஆசாமியோட பேசின சீரியஸான விஷயத்தோட உணர்ச்சிகள்தான் இப்பவும் மேலோங்கி இருக்கு. நம்ம கூட பேசிகிட்டு இருக்கற ஆசாமிக்கு இப்ப குழப்பம். நாம் பேசற விஷயத்தை இவர் ரொம்ப சீரியஸா எடுத்துகிட்டு இருக்காரா? அப்படி ஒண்ணும் சீரியஸா எடுத்துக்கற மாதிரி நாம் பேசலையே?

இது தொடர்ந்துகிட்டே இருந்தா எல்லாரும் நம்மோட பேசறதையே நிறுத்திடுவாங்க. குழப்பமும் விரக்தியும்தான் மிஞ்சும்.

இதுக்கு ஒரே தீர்வு நம் உணர்ச்சிகளை அப்போதைக்கப்போது அறிஞ்சு கொண்டு தகுந்த படி எந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டணுமோ அதை எப்படி வெளிக்காட்டணுமோ அப்படி வெளிக்காட்டணும். ஆமாம் ஒரு முகமூடி அணிஞ்சு இருக்கணும்! அல்லது ஒருத்தரோட பேசின பிறகு அடுத்தவரோட பேச நாம் தயாரான்னு செக் பண்ணிட்டு அதுக்க்கு போகணும். ஸ்லேட்டை க்ளீனா துடைச்சுட்டு புதுசா ஆரம்பிக்கணும்.

நம்மோட பயிற்சிகளைப்பொருத்து சில பல சமயம் இது முடியாது. உதாரணமா ஒரு மீட்டிங்ல இருக்கோம். சில விஷயங்கள் சிலர் பேசறதை/ செஞ்சதை கேட்டு/ பாத்து நமக்கு கோபம் வருது. ஆனா அதை அங்கே வெளியே காட்ட முடியாது. அதை முழுங்க வேண்டாம். கொஞ்சம் கிடப்பிலே போடுங்க. சரியாக சமயத்துக்காக காத்திருங்க, எது சரியான சமயம்? எப்போ நம் கோபத்தை கட்டுப்பாட்டோட எப்படி வெளிப்படுத்தினா நேர்முறையான எதிர்வினைகள் இருக்குமோ அதுவே சரியான நேரம்.

ஒரு வேளை நம் உணர்ச்சி கட்டுப்படுத்த முடியாத பலத்தோட இருந்தா வெளிப்படையா சொல்லிடுங்க. “இன்னைக்கு காலையில ஒரு ஃபோன் வந்தது. கெட்ட செய்தி. அதை கேட்டதிலேந்து கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கேன். உனக்கு சரியா பதில் சொல்லைன்னா தப்பா நினைக்காதேப்பா!” பேசிகிட்டு இருக்கறவர் “பரவால்லே. இது ஒண்ணும் தலை போற சமாசாரமில்லே. அப்புறம் பேசிக்கலாம்” ன்னு சொல்லிட்டு போனாலும் போயிடுவார், எப்படி இருந்தாலும் தப்பான சிக்னல் போகாது.


அடுத்த மாதம் முழுக்க இதை பயிற்சி பண்ணிப்பாருங்க. நம்மோட உடல் மொழியும் பேசற விதமும் நாம் சொல்ல நினைக்கறதோட ஒத்துப்போகிறதா? இல்லை சிக்னல் குழப்பமா இருக்கா? அப்படி இருந்தா அதை மாத்திச்சொல்லிப்பாருங்க.