Tuesday 27 December 2016

சமூக விழிப்புணர்வு

இத்தோட சுய விழிப்புணர்வு, சுய மேலாண்மை இரண்டையும் பார்த்தாச்சு.
அடுத்து மூணாவது.
3. சமூக விழிப்புணர்வு : நான் ஒரு மைக்ரேன் ஆசாமி. இப்பல்லாம் வெகுவாக குறைந்துவிட்டாலும் அவ்வப்போது தலைகாட்டுகிறது. விஷயம் அதில்லை. நான் மைக்ரேனில் அவஸ்தை பட்டுக்கொண்டு இருப்பது என் மன்னிக்கு தெள்ளத்தெளிவாக தெரியும். இத்தனைக்கும் அதன் தாக்கம் கொஞ்சம் குறைந்துபோன பிறகு, பழகிப்போன ஒன்னுந்னு, அது இருந்தாலும் வெளியே நான் பாட்டுக்கு என் வேலைகளை செய்து கொண்டு இருந்தேன். இருந்தாலும் எனக்கு மைக்ரேன் என்பதை மிகச்சரியாக கண்டு பிடித்துவிடுவார்!

ஓட்டலுக்கு போகிறோம். சில சர்வர்கள் தன் கஸ்டமர்களுக்கு என்ன வேணும்ன்னு சரியா கணிப்பாங்க. அதோ அவருக்கு உடனடியா எல்லாத்தையும் கவனிச்சு அனுப்பணும். இந்தப்பக்கம் இவங்க பேச வந்திருக்காங்க. முதல் கோர்ஸ் கொடுத்த பிறகு கண்டுக்காம விடணும். அந்த டேபிள்ல அதிகம் பேசக்கூடாது. இருந்தாலும் உம்மணாமூஞ்சியா ஆர்டர் மட்டும் எடுக்காம சிரிச்சுக்கொண்டே கொஞ்சமா பேசறதை விரும்புவாங்க. எல்லாரும் சாப்பிட டேபிள்ல உட்கார்ந்து இருக்காங்க. இருந்தாலும் அவங்கவங்க தேவையில் எவ்வளோ வேறுபாடு! இந்த சர்வர் ஒவ்வொண்ணும் சரியா கணிச்சு சர்வ் செய்யறதால அந்த ஓட்டலை எல்லாரும் விரும்புவாங்க.

இந்த மாதிரி மக்கள் உருவாக்கி வெச்சு இருக்கிறது ஒரு உச்ச கட்ட சமூக விழிப்புணர்வு.
நாம் நமக்குள்ளேயே பார்த்து நம்மை சரியா புரிஞ்சுக்கறது சுய விழிப்புணர்வு; வெளியே மத்தவங்களை உள்ளே பார்த்து சரியா புரிஞ்சுக்கறது சமூக விழிப்புணர்வு. எவ்வளவுக்கு எவ்வளவு மத்தவங்களை சரியா கணிக்கறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த திறன் மேம்பட்டு இருக்குன்னு அர்த்தம். நாம் மத்தவங்களோட பேசும்போது எவ்வளவு தூரம் அவங்களோட உணர்ச்சிகளோட ட்யூன் ஆகிறோம் என்பது நம்மோட சூழலோட சரியான பார்வையை கணிக்க உதவும். இது உறவுகள் முதற்கொண்டு பலதையும் பாதிக்கும்.
சரி, இதை எப்படி வளர்த்துக்கறது?

கவனிக்கணும். மக்களை கவனிக்கணும். பலவித சூழ்நிலைகளில. க்யூல நிக்கறப்ப, பேசிகிட்டு இருக்கறப்ப, வீதியில நடந்து போறப்ப….. அவங்களோட உடல் மொழி என்ன சொல்லுது? முக பாவனை எப்படி இருக்கு? குரல் தரும் சேதி என்ன? ஆழமா புதைஞ்சு இருக்கற உணர்ச்சிகள் எண்ணங்கள் என்ன? சாதாரணமா கவனிக்காம கடந்து போகிற இதை எல்லாம் கவனிக்க கவனிக்க அவங்களை புரிஞ்சுக்க ஆரம்பிப்போம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா சிலதை தவிர்த்து முக்காலே மூணு வீச உடல் மொழி, முகபாவனை முதலானது தரும் செய்தி ஒண்ணேதான். அது எந்த நாடானாலும் எந்த இனமானாலும் மாறுகிறதில்லை!
ஆனா நாம பார்க்கிற பார்வை சாயம் பூசிய லென்ஸ் வழியா இருக்கக்கூடாது.

இப்படி கவனிக்கறது வெளியே இருக்கிறதை நடக்கிறதை மட்டுமில்லை. இதை செய்யறப்ப நம் ஐந்து புலன்களையுமே கவனிக்க ஆரம்பிக்கிறோம். வழக்கமா இவை என்னதான் கத்தோ கத்துன்னு கத்தினாலும் கூட கவனிக்க மாட்டோம். இப்ப சின்ன சின்ன புலன் செய்திகளையுமே கூட கவனிக்க ஆரம்பிப்போம். நமது இன்ஸ்டின்க்ட் உணர்ச்சிகளையே கவனிக்க ஆரம்பிப்போம். அப்படிச்செய்ய மற்றவர்கள் பார்வை புரிய ஆரம்பிக்கும். அவங்க இடத்தில இருந்துகொண்டு விஷயங்களை கவனிக்கவும் பழகுவோம்.


அடுத்து எப்படி இதை கத்துக்கறதுன்னு உத்திகளை பார்க்கலாம்.

No comments:

Post a Comment