Monday, 5 December 2016

1. மூச்சுப்பயிற்சி.

அடுத்ததா நாம் பார்க்கபோகிறது இதற்கான பயிற்சிகள். நாம தியரியா படிச்சுட்டுப்போகாம வாழ்க்கையில செயலுக்கு கொண்டு வர வேண்டியன. இந்த எளிய பயிற்சிகளை பார்க்கலாமா? இதனால வாழ்க்கை நாளைக்கே ரோஜா மலர்க்ள் தூவின பாதை ஆகிடப்போறதில்லே! இருந்தாலும் காரை எப்படி ஓட்டறதுன்னு பயிற்சி எடுத்தாச்சு; இனி பழகப்பழக திறமை வந்துடும் என்கிறது போல இது.

1. மூச்சுப்பயிற்சி.
ஆங்கிலம் தெரிந்தவர்கள நேரடியாக படித்துவிடலாம். மற்றவர்கள் சிவப்பு எழுத்தில் குறித்த இடத்தை பார்த்துகொள்ளுங்கள.

இந்த வரைபடம் மூச்சு உள்ளே இழுத்துவிடுவதை குறிக்கிறது. நடுவில் உள்ள நீல நிறக்
கோடு மேலே செல்வது மூச்சு எடுப்பதையும் கீழே செல்வது மூச்சு விடுதலையும்
குறிக்கிறது. எக்ஸ் அச்சு நேரத்தையும் ஒய் அச்சு கொள்ளளவையும் குறிக்கிறது.
சாதாரணமாக மூச்சு எடுத்துவிடும்போது கொள்ளளவு கூடிக் குறைகிறது. இதை ஆங்கிலத்தில்
டைடல் வால்யூம் என்கிறோம். T குறிப்பது அதையே. இது கொழுப்பு இல்லாத உடல்
எடை கிலோவுக்கு 70 மில்லி லிட்டர் என்று ஒரு கணக்கு. இருந்தாலும் வளர்ந்த ஆண்
ஒருவரின் சராசரி மதிப்பையே ஒரு சௌகரியத்துக்காக பார்த்துக்கொண்டு போகலாம். நம்
புரிதலுக்கு அது போதும்.
சரி. இப்போது நன்றாக மூச்சை உள்ளே இழுக்கிறோம். வரைபடத்தை பாருங்கள். 5 வது
அலை மிகவும் மேலே போகிறது. I என்று குறித்து இருக்கிறது. சுமார் மூன்றரை லிட்டர்
வரை காற்றை கூடுதலாக உள்ளே இழுக்கலாம். இது பயிற்சியை பொறுத்தது. இது நமக்கு
தேவையான போது கிடைப்பதற்காக 'ரிசர்வ்' இல் வைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக உள்ளே இழுப்பது போலவே கூடுதலாக வெளியே விட முடிய வேண்டும்
அல்லவா? ஆமாம், அப்படி முடியும். E என்று குறித்து இருக்கிறது. இது சுமார் ஒரு லிட்டர்.
என்னதான் நன்றாக மூச்சை வெளியே விட்டாலும் கொஞ்சம் காற்று உள்ளே இருந்தே
தீரும். அதுவும் இல்லாமல் காற்று வெளியேறிவிட்டால் கஷ்டம்! பலூனை முதலில் ஊதி
கொஞ்சம் பெரிதாக்க மிக அதிக சக்தி தேவை. கொஞ்சம் காற்று பலூனுள் போய்விட்டால்
அப்புறம் ஊதி பெரிதாக்குவது சுலபம். அதே பௌதிக அடிப்படைதான் இங்கே. அதனால்
காற்றை முழுக்க வெளியேற்றுவது இல்லை! இந்த காற்று சுமார் 1.2 லிட்டர். இது R என
குறிக்கப்பட்டுள்ளது.
நாம் 500 மில்லி லிட்டர் காற்றை உள்ளே இழுக்கிறோம். அது மூக்கு, தொண்டை,
காற்றுக்குழல்கள, காற்றுப்பைகள் எல்லாவற்றிலும் நிறைகிறது. ஆல்வியோலை என்னும்
இந்த காற்றுப்பைகளில்தான் ஆக்ஸிஜன் ரத்தத்துக்கு போய் கார்பன் டை ஆக்ஸைட்
காற்றுப்பைகளுக்கு வருகிறது. இதுதான் முக்கியம்; மூச்சு எடுப்பதன் பயன். இந்த
காற்றுப்பைகள் அல்லாத மற்ற மூக்கு முதலான இடங்களில் இருக்கும் காற்று இப்படி
பயன்படாது. அதை டெட்ஸ்பேஸ் என்கிறோம். இது சுமார் 150 மில்லி லிட்டர். 500 மி.லி காற்றை உள்ளே இழுத்தா பயன்படறது 350 மி.லி. 300 மி.லி காற்றை உள்ளே இழுத்தா பயன்படறது 150 மி.லி தான்!

பயப்படாதீங்க! அனாடமி பாடம் இவ்வளோ போதும். முக்கியமா சொல்ல வந்தது சாதாரணமா அரை லிட்டர் காத்து உள்ளே போய் வரணும். அப்படி நடக்கறதில்லை என்கிறதே பிரச்சினை! குறைந்த அளவு காற்றை உள்ளே இழுத்து வெளிவிட்டே பழகிட்டோம். காலப்போக்கில உடல் உழைப்பும் குறைஞ்சு போச்சு. இல்லாட்டா உழைப்பின் போது சாதாரணத்தை விட அதிக மூச்சையே உள் இழுத்து வெளி விடுவோம். காற்று பல நாட்கள் புகாம இருக்கும் காற்றுப்பைகள் அப்படியே சுருங்கிப்போயிடும். இவற்றை திருப்பி நல்ல நிலைக்கு கொண்டு வரது கஷ்டம்.
உணர்ச்சி வசப்படுறவங்களை பாருங்க. சின்ன சின்னதா வேக வேகமா மூச்சு விடுவாங்க. முன்னே பார்த்த கணக்குப்படி பயனாவது குறைச்சலே. இப்படி குறைவாக கிடைக்கும் ஆக்சிஜன் எங்கே போகும்?
நாம உயிர் வாழ அடிப்படையான சில முக்கிய செயல்கள் இருக்கு இல்லையா? இதயம் துடிக்கணும், ரத்தம் ஓடணும், நுரையீரல்கள் சுருங்கி விரியணும், சிறுநீரகம் செயல்படணும், கண்கள் பார்க்கணும். இப்படி பலது. இவற்றுக்கு முதல் மரியாதை. அவற்றுக்கு தேவையான ஆக்சிஜன் கொடுக்கப்படும். மூளை கேட்கிற ஆக்சிஜன் விழிப்போட இருக்க, யோசிக்க, நினைவு கொள்ள, முடிவெடுக்க ,…. இதுக்கான ஆக்சிஜன் குறைபடும். இதனால் என்ன நடக்கும்? உன்னிப்பா பார்க்க முடியாது. மறதி இருக்கும். மூட் மாறிக்கொண்டே இருக்கும். நிலையழியும். மனத்தளர்வு, கலக்கம், சுறுசுறுப்பின்மை,…..
அடுத்த முறை உணர்ச்சி வசப்படும்போது/ மன இறுக்கம் வரும்போது, மறக்காம ஆழ்ந்த நிதானமான மூச்சு எடுத்து விடுங்க. மூக்கால மூச்சு எடுங்க; வயிறு நிறைந்து வெளி வரட்டும். நிதானமா வாயால வெளிவிடுங்க. நுரையீரல் முழுக்க காலி ஆகட்டும். இதுக்கு முன்னாலேயே பயிற்சி எடுக்கறது நல்லது. சாதாரண நேரத்தில தினசரி வயித்து மேல ஒரு கை மார் மேல ஒரு கை வெச்சுகொண்டு ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு பயிற்சி செய்தா இந்த சமயத்தில சுலபமா இருக்கும். பயிற்சி ஆன பிறகு மத்தவங்களுக்கு தெரியாமலே செய்ய இயலும்.
சும்மா இப்பவேதான் முயற்சி செஞ்சு பாருங்களேன். மேலே சொன்னப்படி மூச்சு எடுத்து விடுங்க. வெகு சீக்கிரமே மனசு அமைதியாகிறதை பார்க்கலாம். புத்தி தெளிவா இருக்கும். உடம்பு இறுக்கம் தளர்ந்துடும், பலர் மத்தியில் இரண்டாம் பேர் அறியாமலே இதை செய்ய முடியும்.
உணர்ச்சிவசப்பட்ட மனசு என்கிற நிலையிலிருந்து புத்தி நிலைக்கு கொண்டு போறதுக்கு இதை விட சிறந்த வழி இல்லை. மன இறுக்கமோ கலக்கமோ சேய்ய வேண்டிய வேலை குறித்து மலைப்பு கலந்த பயமோ மனக்குழப்பமோ எதிர்மறை எண்ணங்களோ கடந்த காலம் குறித்த கழிவிரக்கமோ எதானாலும் சரியாக நிதானமான ஆழ்ந்த மூச்சு விடுவதால உங்களை ஆசுவாசப்படுத்தி யோசிச்சு முடிவெடுக்கும் மன நிலைக்கு உங்களை கொண்டு போகும்.

தை செய்யறோமோ இல்லையோ மனசை/ உணர்ச்சிகளை கட்டுப்படுத்த எல்லாரும் அவசியமா செய்ய வேண்டியது இது!