Wednesday 14 December 2016

8. எண்ணங்கள்

8. எண்ணங்கள் 
ஆராய்ச்சிகள் சொல்லறது என்னன்னா ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 எண்ணங்கள் வந்து போறது! ஆச்சரியமா இருக்கா? அப்படி தோணலையே? எப்படி?
மூச்சு விடறது எப்பவுமே நடக்கறது; ஆனா அது எவ்வளோ தரம்ன்னு நம்ம கவனத்திலேயா இருக்கு? அது போலத்தான். தேவையானா நாம மூச்சு விடறதை கவனிக்கவும் முடியும்; எண்ணம் வந்து போறதை கவனிக்கவும் முடியும்! அதை கவனிக்கறதில்லே என்கிறதால் அது நினைவில இல்லாம போகிறது. ஆனா ஒவ்வொரு எண்ணமும் அதோட ரசாயன விளைவுகளை உண்டு செய்யவே செய்யும்! இது நம் உடம்பு எப்படி இருக்கு, மனசு எப்படி இருக்கு என்கிறதை நிர்ணயம் செய்யும். உண்டாகிற கெமிகல்களோட விளைவு நேரம் குறைவானதுதான். அதனால அடுத்த எண்ணம் அதோட விளைவை உண்டாக்கும்! அப்ப இருந்த விளைவா அது இருக்கலாம் அல்லது வேற விளைவாவும் இருக்கலாம். இப்படி மாறி மாறி நடக்கலாம்.
இந்த எண்ணங்கள் எல்லாத்தையும் மானிட்டர் பண்ண முடியுமா? ஒரு நாளைக்கு சுமார் 50000? சான்ஸே இல்லை! பின்னே என்ன செய்யறது?
அடிக்கடி நமக்கு நாமே பேசிக்கறோம். அது வெளியே - வெளியே என்ன? நமக்கே! - தெரியறதில்லை. வெளியே தெரியற மாதிரி தனக்குத்தானே பேசிக்கறவங்களை பைத்தியம்ன்னு சொல்வாங்க. ஆனா நாமோ ரகசியமா பைத்தியமா இருக்கோம். கிடக்கட்டும்!
பல வித எண்ணங்கள் வந்துபோறது. சிலது எதிர்மறையா இருக்கும். சிலது நேர் முறையா இருக்கும். சில சமயம் “ச்சூ! சும்மா இரு, இப்படி செய்ய வேணாம்” ந்னு சொல்லிப்போம். ஒரு வேலை நல்லா செஞ்சுட்டா “சபாஷ்டா கண்ணா!” ந்னு சொல்லிப்போம். ”நீ செஞ்சது முட்டாள்தனமான காரியம்!” ந்னு கடிந்துப்போம். “அச்சோ! இப்படி ஆயிடுத்தே!” ந்னு வருத்தப்படுவோம். இந்த மாதிரியான எண்ணங்கள்தான் கிளைவிட்டு வளர்ந்து உணர்ச்சிகளை மேலுக்கு கொண்டு வந்து எல்லா ரகளையும் செய்யும்! அதே போல உணர்ச்சிகளை அமுக்கி அல்லது வடிகால் போட்டு மடை மாற்றவும் செய்யும்.
ஆகவே இது மேல நமக்கு மேலாண்மை வந்தா போதும். இயல்பாவே வர இந்த மாதிரி பேச்சுக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நமக்கு நாமே திட்டத்துல நாமே நம்மோட கவனத்தோடவே பேச ஆரம்பிக்கலாம். “விட்றா, இந்தப்பய ஏதோ உளறிண்டு இருக்கான்!” , “இவன் சொல்லறதுலே ஏதோ அர்த்தம் இருக்கும் போலிருக்கு. யோசிக்கலாம்”; “இப்போதைக்கு எதிர்வினை வேணாம்!” - இந்த ரீதியில நமக்கு நாமே நேர் முறையா பேசிக்க ஆரம்பிச்சா நம் உணர்ச்சிகளை ஒரு கட்டுக்கு கொண்டுவர நம்மால முடியும்! நாளடைவில நமக்கு நாமே பேசிக்கறதும் நம்ம கவனத்துக்கு வந்துடும்!
சில வழக்கமா வர பேச்சுக்கள் இப்படி இருக்கலாம். அவற்றை மாத்திக்கொண்டா நல்லது.
நீதிபதி மாதிரி ஜட்ஜ்மெண்ட் கொடுத்துக்கறது ஒண்ணு. ‘நான் ஒரு முட்டாள்!’ என்கிற மாதிரி. இதை சரியா சொல்ல பழகணும். “நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்”
இன்னொன்னு: ‘எப்பவுமே இப்படி செய்வேன்’, 'எப்பவும் இப்படி செய்ய மாட்டேன்!’ - இதை இந்த ஒரு முறை இப்படி செய்வேன் அல்லது சில சமயம் இப்படி செய்வேன்னு மாத்திக்கலாம். நம்மோட செயல்கள் ஒவ்வொண்ணும் அந்தந்த நிலைக்கு தகுந்தபடி தனித்துவமானது. தப்பா நடக்கறதை எப்பவுமே இப்படி தப்பா செய்யறேன்னு நினைச்சுக்கொண்டு நம்மை நாமே சாட்டையால அடிச்சுக்கக்கூடாது!


இன்னொருத்தரை மேல பழியை போடறதும் எதிர்மறையா நமக்கு நாமே பேசிக்கிற பேச்சும் கை கோர்ந்துண்டு போகும். ‘இது எல்லாம் நான் செஞ்ச தப்பு’ என்கிறது முக்காலே மூணுவாசி முறை சரியா இருக்காது, நாமும் மத்தவரும் சேர்ந்தே ஒரு தப்பான காரியத்துக்கு பொறுப்பு. யாருக்கு எவ்ளோ பொறுப்பு என்கிறது வேணா மாறலாம். நாம செஞ்ச தப்புக்கு நாம் பொறுப்பு ஏத்தா போதும். எல்லாத்தையும் நம்ம தலையில போட்டுக்கொண்டா அளவுக்கு மேல நம்மை நாமே இழிவு படுத்திக்கிறோம். அதே போல எல்லாத்தையும் மத்தவங்க தலை மேல போடாம நம்ம பங்கை ஏத்துக்கணும்! அது மிக உயர்ந்த குணம்.

No comments:

Post a Comment