Thursday 4 February 2016

பார்வை - 1


நாட்டில சில பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையே ஒரு பிரச்சினைதான். காலையில் எழுந்திருக்கிறப்ப முடியவே இல்லை முதுகு வலி தாங்கலைன்னு ஆரம்பிச்சு ராத்திரி தூக்கமே வர மாட்டேன் என்கிறதுன்னு சீரியல் பாத்துட்டு படுக்கப்போகிற வரை பிரச்சினை பிரச்சினை பிரச்சினையேதான். குறை குறைன்னு எதாவது குறை சொல்லியே காலை முதல் ராத்திரி வரை வாழ்க்கை ஓடும்! எதையாவது உருட்டறதுக்கு இல்லைன்னா அதுவே ஒரு பிரச்சினையா இருக்கும். அதாவது பிரச்சினையே இல்லையே என்ன செய்யறதுன்னு ஒரு பிரச்சினை இருக்கும்! இவங்களோட குடும்பத்தில இருக்கறவங்க உலகத்துல பிரச்சினை தவிர ஒண்ணுமே கிடையாதுன்னு கொஞ்சம் கொஞ்சமா நம்ப ஆரம்பிச்சுடுவாங்க!

இதெல்லாம் நம்ம காதுல விழக்கூடாதுன்ம்னு நினைச்சு கொண்டு ந்யூஸ் பேப்பர் படிக்கலாம்ன்னு எடுத்தா அதுலேயும் இதேதான் கதை. என்ன விஷயங்கள் கொஞ்சம் போல தூரமா போயிருக்கும். அங்கே மாணவர்கள் ஸ்ட்ரைக், இங்கே அதிக சம்பளம் கேட்டு போராட்டம்; அங்கே மாணவி தற்கொலை, இங்கே விவசாயி தற்கொலை ந்னு பேப்பர் முழுக்க இருக்கிற செய்தியை எல்லாம் படிச்சா நாட்டில நல்லது நடக்கவே இல்லைன்னு தோணிடும். எங்கேயோ ஒரு மூலையில ஒரு 18 வயசு மாணவர் சாதனை படைச்சார்ன்னு வேண்டா வெறுப்பா செய்தி போட்டுடுவாங்க. கொட்டை எழுத்தில போடற செய்தி எல்லாம் ஏதாவது அரசியல் பரபரப்போ அல்லது விபத்தோ…. இந்த விபத்துல எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் பேர் சாகிறாங்களோ அவ்வளவு நல்லதுன்னு பத்திரிகைகாரங்க நினைக்கிறாங்களோன்னு தோணும்!

இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் தூரத்தில நடக்குது. நம்ம ஊர்ல நடந்த விபத்துன்னா அடப் பாவமேன்னு கொஞ்சமா பார்ப்போம். நம்ம நாட்டிலேயே ஏதோ ஒரு மூலை- வடகிழக்கு மாநிலத்துல பூகம்பம் ந்னா அச்சோச்சோன்னு படிச்சுட்டு அடுத்த பக்கத்தை புரட்டுவோம். சிலி நாட்டில வெள்ளம்ன்னா ஓஹோன்னு சொல்லிக்கொண்டே காப்பியை உறிஞ்சிக்கொண்டு மேலே படிப்போம். இதெல்லாத்துக்கும் நமக்கும் ஒரு சம்பந்தம் இல்லைன்னு நினைப்பு.

ஒழியறது. பேப்பர்தான் இப்படின்னு டிவி யை போட்டா அது இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. இன்னும் மோசம். வெறும் எழுத்தா இல்லாம ஆடியோ விசுவலா இருக்கறதால் தாக்கம் இன்னும் அதிகம். 24*7 ஏதாவது புதுசு புதுசா செய்தி வரணும்; பரபரப்பா இருக்கனும்; டிஆர்பி ரேட்டிங்க் எகிறணும்… அவ்ளோதான் நோக்கம். செய்தில இருக்கற உண்மைத்தன்மையோ அல்லது அது சமூகத்தில என்ன தாக்கம் விளைவிக்கும்ன்னோ ஒரு அக்கறையும் இல்லை.

தொலையறதுன்னு கணினில உக்காந்து ஃபேஸ்புக் லொட்டு லொசுக்குன்னு சமூக வலைத்தளங்களுக்கு போனாலோ அங்கே இன்னும் மோசம்! எந்த பதிவுக்கும் உண்மை துளிக்கூட இருக்கணும்ன்னு இல்லை. நம்ம இஷ்டம்தான்! எது கண்ணுல படுதுன்னு என்கிறதை கண்ட்ரோல் பண்ணத்தெரியாத ஆசாமி பாவம்தான்! அந்தப்பக்கம் தலை வெச்சு படுக்க மாட்டேன்ன்னு சங்கல்பம் பண்ணலைன்னா அவர் தொலைஞ்சார்!
இதை எல்லாம் பாத்து உலகம் எப்படி இருக்குன்னு கணிச்சா அதைப்போல ஒரு தவறு இல்லைன்னு சொல்லுவேன்!

ஒரு ஆசாமி வீட்டில வீட்டம்மா ஏதோ பொலம்பிண்டு இருந்தாங்க. இவருக்கோ அது பழகிப்போச்சு. அதனால் உம் உம்னு ஆட்டோமேடிக்கா சொல்லிக்கிட்டே செய்திப்பத்திரிகையை படிச்சுக்கொண்டு இருந்தார். அர மணி ஆச்சு. அந்த அம்மா அவங்க பொலம்பறதை இவர் கவனிக்கவே இல்லை என்கிறதை பார்த்தாங்க. போட்டாங்க ஒரு அணுகுண்டு! திடீர்ன்னு பொலம்பலோட பொலம்பலா நீங்களும் அப்படித்தான் அப்படீன்னாங்க!
அவ்வளோதான் ஆசாமி உஷாராயிட்டார்! எப்படி நீ அந்தமாதிரி சொல்லப்போச்சுன்னு ஆரம்பிக்க அந்த அம்மணியோட நோக்கம் நிறைவேறிடுத்து.


நமக்கு சம்பந்தம் இல்லைன்னு நினைக்கற வரை பல விஷயங்களைப்பத்தி கவலைப்படறதில்லை. ஆனா தினம் தினம் குறை குறைன்னு போட்டு அடிச்சு அடிச்சு தாக்கிகிட்டு இருக்கறதுல நம்ம மனசே கெட்டுப்போயிடுமோன்னு பயமா இருக்கு!

2 comments:

  1. தினம் தினம் பயந்து அதுவே பழக்கமாகிவிடும்,கவலை வேண்டாம். :-)

    ReplyDelete