Friday, 5 February 2016

பார்வை - 2

அதுக்குன்னு லோகத்தில எல்லாம் நல்லாத்தான் இருக்கு; பிரச்சினையே இல்லைன்னு சொல்ல வரலை. பிரச்சினைகள்/ குறைகள் நிறைய இருக்குத்தான். சிலது நம்மோட சொந்த பிரச்சினைகள். சிலது நம்மை ரொம்ப பாதிக்கிற பிரச்சினைகள். சிலது நம்மை பாதிக்காத, இருந்தாலும் நாம கொஞ்சம் கவலையோட பார்க்க வேண்டிய பிரச்சினைகள்…. பிரச்சினைகள் ஏராளம்!

இது எல்லாத்துக்கும் நாம் அழணும்ன்னு இந்த ஒரு ஜன்மா போறாது.
உலகத்தில சுக துக்கங்கள் கலந்தே எப்பவும் இருக்கு! நாம ஏன் சுகத்தை பார்க்காம துக்கங்களையே பாத்துகிட்டு இருக்கோம்? சுகமா இருக்கறது நம்ம பிறவி உரிமைன்னு நினைப்பா? அப்படித்தான் இருக்கணும். யாரும் டாக்டர் எனக்கு தலைவலியே வரதில்லையே! ஏதேனும் பிரச்சினையோ ந்னு டாக்டர்கிட்ட போறதில்லை.
இருந்தாலும் நாம் செய்யற அவப்பத்தியங்களுக்கும் பாபங்களுக்கும் இன்னும் நிறைய பிரச்சினைகள் இருக்கணும். அப்படி இல்லையே!
எவ்வளவு விஷயங்கள் டேக்கன் ஃபார் க்ராண்டட்!

தடையில்லாம மூச்சு விடறதுல இருக்கிற சுகம் பத்தி நெடு நாள் ஆஸ்த்மா நோயாளிகிட்டே கேளு. நல்ல காத்து சூழ்ந்து இருக்கறப்பவே அது உள்ளே போகாத கொடுமை அவருக்குத்தான் தெரியும்.
தடையில்லாம சாப்பிடறதுல இருக்கிற சுகம் பத்தி முழுங்க முடியாதவன்கிட்டே கேளு.
வலி இல்லாம நடக்கிறதுல இருக்கிற சுகம் பத்தி முட்டி தேய்ஞ்சு போனவன்கிட்ட கேளு.
இப்படி எல்லாம் இருக்கறது நார்மல்; அதனால நான் அப்படி இருக்கறதுல என்ன ஆச்சரியம்ன்னு நினைக்கலாம். இருந்தாலும் இது நமக்கு கிடைக்க கொடைன்னு சந்தோஷப்படுவோம்.

ஒரு விஷயத்தோட அருமை அது நமக்கு கிடைக்காத போதுதான் தெரியுது.
சில சமயம் சில அம்மாக்கள் கத்துவாங்க, “ உன்னை உக்காத்தி வெச்சு சேவை பண்ணிண்டு இருக்கேன் பாரு! இதோட அருமை இப்ப தெரியாது. ஹாஸ்டலுக்கு போவே இல்லே? அப்ப தெரியும்!” ஹும்! இது ஏதோ உளருதுன்னு நினைச்சுகிட்டு நகர்ந்து போற இளைஞனுக்கு அந்த அருமை நிஜமாவே ஹாஸ்டலுக்கு போன பிறகுதான் தெரிய வரும்!

நமக்கு ஏற்கெனெவே கிடைச்சு இருக்கிற அருமையான நல்ல விஷயங்கள் நமக்குத்தெரியறது இல்லை! கடைசியா என்னைக்கு நீல வானத்தை பாத்தீங்க? அதுல மிதந்து வர மேகங்களோட வரிசையை, அது வித விதமான மிருகங்கள் போல உரு மாறிகிட்டே வரதை ரசிச்சீங்க? உங்க வீட்டுக்கு பக்கத்திலேயே குயில் இருக்குன்னு தெரியுமா? அது வசந்த காலத்தில தினசரி பாடறதை கேட்டு இருக்கீங்களா? ஏசி யை விட தென்னை மர நிழல் அருமையா இருக்குன்னு தெரியுமா? கான்க்ரீட் ஜங்கிள்ன்னு நாம் நினைக்கிற நகரங்களில கூட இது போல சில ஆச்சரியங்கள் வாழ்ந்துகிட்டு இருக்குன்னு தெரியுமா? கொஞ்சம் கவனிச்சு பாருங்க!

பிரச்சினைகளைத்தவிர வாழ்க்கையில ஒண்ணுமே இல்லைன்னு நினைச்சுகிட்டு இருக்கறவங்க கொஞ்சம் கண்ணைத்திறந்து இருக்கிற நல்ல விஷயங்களை பார்க்கக் கத்துப்போம். தினமும் இரண்டு விஷயமாவது நல்லதா நடந்ததுன்னு ரிப்போர்ட் பண்ணணும்ன்னு ஒரு விளையாட்டை ஒத்தர் ஆரம்பிச்சார். நாளடைவில அவரோட பார்வையே மாறிப்போச்சு. இதுல என்ன இருக்குன்னு நினைக்கீறீங்களா? அப்ப இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்!

நேத்தைக்கு நீங்க பார்த்த நல்ல விஷயங்கள் ரெண்டு சொல்லுங்க! ம்ம்ம்ம்ம் நேத்தைக்கு? ஒண்ணும் நினைவுக்கு வரலையா? சரி போன நாலு நாட்கள்? ஒரு வாரம்?
நான் இப்படி கேட்ட போது பலரால விடை சொல்ல முடியலை. ஒருத்தர் ரொம்ப முயற்சி செய்து ஒண்ணை சொன்னார். சரி அடுத்துன்னு கேட்டா, ஒரு நல்ல விஷயம் என்னால் சொல்ல முடிஞ்சது. இதான் ரெண்டாவது நல்ல விஷயம்ன்னார்! இதுதான் நம்ம பார்வை எப்படி கண்டிஷன் ஆகி இருக்குன்னு காட்டுது!


பார்வையை மாத்திப்போம். கெட்ட விஷயங்கள் மட்டுமே பட்டுக்கொண்டு இருந்த கண்களால நல்லதையும் பார்க்க ஆரம்பிக்கலாம். அப்புறமா பார்வையில் ஒரு பேலன்ஸ் கிடைக்கட்டும்!