Monday, 26 October 2015

சூரிய குளியல் - 2

அதனால் இயற்கையா உடம்பு தயாரிக்கற வைட்டமின் டி தான் உசிதம்முன்ன மாதிரி வெய்யில்ல வேலை செய்யறதில்லை என்கிறதால இதுக்குன்னு மெனெக்கெட்டு வெய்யில்ல போய் படுக்கணும்!
 .........
சரி, சரி, எப்படி செய்யறது?
வழி முறை சொல்லும் முன்னே ரொம்ப முக்கியமான எச்சரிக்கையை சொல்லிடறேன். பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுங்க.
நாம் செய்ய வேண்டியது அடிப்படையில் முடிஞ்ச வரை உடலை வெய்யிலுக்கு எக்ஸ்போஸ் செய்யறது! வெய்யில்ல நில்லுங்கன்னு சிலர் சில தளங்களில சொல்லிகிட்டு இருக்காங்க. நிற்கிறது அவ்வளவா எக்ஸ்போஸ் செய்யாது! சிம்பிள் பிசிக்ஸ்! படுக்கறதே உசிதம். மேலிருந்து வரும் வெய்யில் அப்பத்தான் அதிக அளவு தோல் மேலே படும். ஆண்கள் இடுப்புல ஒரு ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டா போதும். பெண்கள் விஷயத்துலதான் இன்னும் கவனம் தேவைப்படுது. ஆடை குறைப்பு நம் கலாசாரத்துல நல்லதா பார்க்கப்படலை. பல ஆண்களோட மனசுல வக்கிர எண்ணங்கள் அதிகமா இருக்கு. இதுக்கு இண்டர்நெட் எவ்வளவு பங்களிக்குது என்கிற சர்ச்சைக்கெல்லாம் போகலை. வக்கிர மனசு இப்பல்லாம் அதிகம் என்கிறது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். அதனால் படுக்கக்கூடிய இடத்தை கவனமா தேர்ந்தெடுங்க. தயை செய்து இதை மறந்துடாதீங்க. படுக்கக்கூடிய இடத்தில இருந்து நாலா பக்கமும் பாருங்க. யாரும் நின்னுகிட்டு பார்க்கக்கூடிய இடமா இருக்கான்னு செக் ப்ண்ணுங்க!
அக்கம் பக்கத்தை விட நம்ம வீட்டு மொட்டை மாடிதான் உசரம்ன்னு தெளிவா தெரிஞ்சா அப்பாடாங்கலாம். பிரச்சினை வர வாய்ப்பு குறைவு. கவனிங்க, குறைவு - அவ்ளோதான். ஏதேனும் ஒரு பக்கம் மட்டும் இன்னும் உயரமான மொட்டை மாடிகள் இருக்குன்னா ஆஸ்பத்ரிகளில பயன்படுத்தற ஸ்க்ரீன் மாதிரி ஏதேனும் மறைப்பை பயன்படுத்தலாம். அது வெய்யிலை மறைக்காம பாத்துக்கணும்.
அடுத்து மொட்டை மடில துணி உலர்த்தரேன்னு யாரும் வரலாம். அதையும் கவனத்துல வெச்சுக்குங்க! முடிஞ்சா தாழ்ப்பாள் போட்டுக்கலாம்.
தலையை வெய்யில்ல நேரடியா எக்ஸ்போஸ் செய்யறது அவ்வளோ உசிதமில்லை. உழவர்களை பாருங்க! என்ன வேத்து கொட்டினாலும் தலையில ஒரு முண்டாசு கட்டிகிட்டு வேலை செய்வாங்க. மொட்டை மாடில ஷெட் மாதிரி ஏதேனும் கொஞ்சமா மறைப்பு கொடுக்க இருந்தா நல்லது. தலையை வெய்யில்ல காட்டாம இந்த மறைப்புல வர மாதிரி பாயை/ துணியை போட்டுக்கலாம். இல்லைன்னா தலை மறைப்புக்கு ஒரு குடையை பயன்படுத்தலாம்.
கண்ணுக்கு கருப்புக்கண்ணாடி அணிவது உசிதம். வானத்தை பார்த்து படுத்தா கண் கூசாம இருக்கும். உக்கார்ந்து கொண்டு முடிந்த வரை ஆடை குறைப்பு செய்து கொண்டு படுங்க. தல நிழலில இருக்கட்டும். கழுத்துக்குக்கீழே எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெய்யில்ல படும் படி விடுங்க. ஆடைக்குறைப்பு அக்கம் பக்க வீட்டு இளைஞர் / இளைஞிகளை சபலப்படுத்தாமலும் ஆண்டி அங்கிள்களுக்கு ஹார்ட் அட்டாக் வராம பாத்துக்கும் படியும் இருக்கட்டும்!
உடலில் தலை சுமார் 9% பரப்பு. இடுப்பு முதல் பாதம் வரை 18 % ஒவ்வொரு பக்கமும். அதே போல தோள் முதல் விரல் வரை 9%. மார்பு, வயிறு 18 %. இதெல்லாம் குத்து மதிப்பா… ரூல் ஆஃப் நைன்னு… … வாழப்பழ கணக்கு எல்லாம் கேக்கப்படாது!
கால்கள் கைகள் முட்டி வரையிலும் எக்ஸ்போஸ் ஆச்சுன்னா சுமார் 28% ஒரு பக்க உடம்பு எக்ஸ்போஸ் ஆகும். நாட் பேட்! ரொம்ப ரிஸ்க் எடுக்காம சுமார் மூணுல ஒரு பங்காவது வைட்டமின்டி சம்பாதிக்கலாம்.ரைட்! இடம். எவ்வளோ எக்ஸ்போஸ் செய்யறதுன்னு பாத்தாச்சு. இப்ப எப்போ செய்யறதுன்னு பார்க்கலாம். குத்து மதிப்பா நம்மோட நிழல் நம்ம உசரத்தைவிட குறைவா இருக்கறப்ப செய்யணும். அப்பத்தான் தேவையான யூவிB கதிர்கள் கிடைக்கும். வானம் முழுக்க மேகத்தால் இருட்டின பிறகு செய்யறதுல பயனில்லை. அதனால் மழைக்காலம் எல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான். மழ எங்க பெய்யுது இப்பல்லாம் என்கறிங்களா? அதுவும் சரிதான்!
சூரியன் உச்சில இருக்கறப்ப அதிகமான யூவிB கதிர்கள் கிடைக்கும். உச்சி வெயில் என்கிறது 12 மணி இல்லே. அது மாறிகிட்டே இருக்கும். உதாரணமா இன்னைக்கு எங்க ஊர்ல அது 11-24!
இந்த நேரம் எல்லாருக்கும் சாத்தியமா இருக்காது. எப்படியும் சூரியன் வானத்தில 30 டிகிரியாவது மேலே வந்தாத்தான் யூவிB கிடைக்கும். அதே போல 30 டிகிரிக்கு மேலே சாய்ஞ்சாச்சுன்னா அன்னைய வாய்ப்பு முடிஞ்சது!உச்சி வெயில்ல அதிக பட்சமும் அதுக்கு இந்த பக்கம் அந்தப்பக்கம் கொஞ்சம் கொஞ்சமா குறைவாகவும் கிடைக்கும்.
சரி படுத்தாச்சு. எவ்ளோ நேரம்?
அது பல விஷயங்களை பொருத்தது.
முதலாவது உங்களுக்கு ஒதுக்க முடிஞ்ச நேரம். இரண்டாவது உங்க தோலோட நிறம். என்னதான் டோலர்கள் சமத்துவம் பேசினாலும் இயற்கையில் பல விஷயங்களில சமத்துவம் இல்லை என்கிறதே நிதரிசனம்! நல்ல கருப்பா இருக்கிறவங்க தோல்ல மெலனின் நிறமி அதிகமா இருந்து கொண்டு வெய்யில்லேந்து அவங்களை பாதுகாக்கும்! இவங்க இப்ப எங்க இருந்தாலும் சில தலைமுறைகளுக்கு முன்னே நல்ல வெயில் அடிக்கற இடங்களில இருந்ததால இயற்கை செய்த ஏற்பாடு அது! இவங்களுக்கு வைட்டமின்டி உற்பத்தியாக நேரம் பிடிக்கும்!
வெள்ளை தோல் மக்களுக்கு சீக்கிரமா உற்பத்தி ஆகும். அவங்களுக்கு கிடைக்கிற வெயிலே குறைவு. அதனால் இயற்கை அப்படி வெச்சு இருக்கு! சில தலைமுறைகளா அமேரிக்காவிலே வாழற நீக்ரோகள் வெள்ளை தோலோட இருக்காங்கன்னு கேள்வி!
இந்தியர்கள் பொதுவா பழுப்பு நிறம். இது அவங்களுக்கு இது ரெண்டுக்கும் இடைப்பட்டு இருக்கும்.
இளைஞர்களுக்கு எடுத்துக்கிற நேரத்தை விட வயசானவங்களுக்கு நேரம் அதிகமாகும். 20 வயசு ஆசாமி போல 50 வயசு ஆசாமிக்கு தேவையான நேரம் ரெட்டிப்பாகக்கூட ஆகலாம்!
பொத்தாம் பொதுவா சொல்லப்போனா 20 நிமிஷமாவது வேணும்!

அதுக்கு எங்க எனக்கு நேரம் இருக்கு?
எல்லாம் இருக்கு! இப்பல்லாம் ஸ்மார்ட் போன் இல்லாத ஆசாமிங்களை பாக்க முடியலை.
போய் சூரியஒளியில படத்துக்கிட்டு ப்ளஸையோ ஃபேஸ் புக்கையோ நோண்டுங்க! நேரம் போறதே தெரியாது!

ஆரம்ப சில நாட்களில கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். நல்ல வெயில்ல அஞ்சு நிமிஷம் போதும். ரெண்டு மூணு நாள் போன பிறகு அதிகமாக்கிக்கலாம். எடுத்த எடுப்பில உற்சாகமா நாப்பது நிமிஷம் படுத்துட்டு கால் செவந்து எரிஞ்சே போச்சு ந்னு எங்கிட்ட புகார் சொல்லாதீங்க! வேர்க்குரு வந்து சொறிஞ்சிண்டு நிக்காதீங்க! ஒவ்வொர்த்தருக்கும் இருக்கிற சென்ஸ்ஸிடிவிடி எதிர் பார்க்க முடியாதது.
வேர்த்துக்கொட்டி சுடுதா? ரைட் அப்படியே புரண்டு படுங்க. அது எப்ப முடியலையோ அப்ப நிமிர்ந்து படுங்க. இப்படியே தேவையான நேரத்துக்கு வெயில்ல இருக்கப்பாருங்க.

இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த கணினி காலத்துல இதுக்கு உதவி எல்லாம் ஒண்ணும் இல்லையா ந்னு கேட்டா…. இருக்கு! அது அடுத்த பதிவில.


 (தொடரும்)