Thursday 16 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 11

60. “உன் கவலை எவ்வளோ பெரிசு? அதை கொஞ்சம் சின்னதாக்க முடியுமான்னு பார்க்கலாம்."
மனக்கலக்கத்தை அளவிடறது நல்லது. எறும்பு சைஸ்ன்னா அதை பிடிச்சு ஒரு தீப்பெட்டில போட்டுடலாம். மரம் அளவுன்னா அதை கோடாலியால வெட்டிடலாம். இப்படி குழந்தையின் கற்பனையை பயன்படுத்தி மனக்கலக்கத்தை குறைக்கலாம்.

61. “வா, யாருக்கானா உதவி செய்ய போகலாம்."
மனக்கலக்கம் ஒத்தரை அவரைப்பத்தியே மட்டும் நினைக்க வைக்குது. எனக்கு இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோ, நான் கஷ்டப்படறேன்.... மத்தவங்களுக்கும் கஷ்டம் இருக்குன்னு தெரியறப்போ ‘ ஓ நமக்கு மட்டுமில்லைன்னு தோணும். அதே சமயம் கவனமும் திசை மாறும். அவங்களால மத்தவங்க கஷ்டத்தில உதவ முடியறப்ப கொஞ்சம் நிறைவும் ஏற்படும்.

62. “நமக்கு கொஞ்சம் இயற்கை டானிக் வேணும்!"
இயற்கை சூழல்ல உலாவ போறதோ அல்லது வெறுமே இதமான சூரிய வெளிச்சத்தில படுத்து கொண்டு தோல் வைட்டமின் டி ஐ உற்பத்தி செய்யும்போது வானத்தில மிதக்கிற கழுகளை வேடிக்கை பார்க்கிறதோ.... சுவையான அனுபவம். இந்த சூழல்ல மனக்கலக்கத்தோட இருக்கறது கஷ்டம்!

63. “அத கொஞ்சம் சின்ன சின்ன துண்டா வெட்டலாம்!"
ஹோம் வெர்க்கை பாத்தா மலைப்பா இருக்குதான்! எப்படி முடிக்கப்போறோம்ன்னு ஒரே கலக்கம். அதை சுலபமா முடிக்கக்கூடிய சின்ன பகுதி பகுதியா வெட்டுங்க. சைய்ன்ஸ், தமிழ் பாடம் மட்டும் இப்ப செய். விளையாடிட்டு வந்து கணக்கு போட்டுக்கலாம் என்கிற ரீதியில் அதை வெட்டிக்கொடுத்தா செஞ்சுடுவாங்க!

64. “செய்ய ஆரம்பி; பிடிக்கலைன்னா விட்டுடலாம்.’"
பல குழந்தைகளோட மனக்கலக்கத்தின் காரணத்தை கண்டு பிடிக்க இயலாது. புது விஷயங்களை செய்யத்தயங்குவாங்க. சாப்பாட்டு நேரத்தில உணவு ஏதாவது பிடிக்கலைன்னா அதை ருசி பார்க்காம அப்படி சொல்லக்கூடாதுன்னு சில வீடுகளில ஒரு விதி! கொஞ்சமா சாப்டு பாத்து பிடிக்கலைன்னா அது ரைட்ன்னு ஏற்றுக்கொள்ளப்படும்!
இதோட உபயோகம் என்னன்னா புதுசா எதையாவது செய்ய தயங்கற குழந்தைகிட்டே சாப்பாட்டில புது ஐடம் மாதிரித்தான் இதுவும். செய்ய ஆரம்பி; பிடிக்கலைன்னா விட்டுடலாம்ன்னு சொல்ல முடியும்.

65. “உன் அத்தைபாட்டி பத்தி உன்கிட்டே சொன்னேனோ?"
குழந்தைகளோட ‘உணர்வு நலன்’ க்கும் அவங்க தன் குடும்பம் பத்தி கதைகள் தெரிஞ்சு வெச்சிருக்கறதுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. தான் தனி இல்லை, ஒரு குடும்பத்துடைய அங்கம்ன்னு இது அவங்களுக்கு நிறைய தைரியத்தை கொடுக்கும்.
.
66. “இப்ப உனக்கு வேற ஏதாவது பிரச்சினை இருக்கா?"

தூக்கக்கலக்கம், பசி, தாகம் ... இப்படி சிலது இருக்கும்போது மனக்கலக்கம் உள்ளே வந்துடும். இதை எல்லாம் சரி செஞ்சாலே கலக்கம் அடங்கிவிட வாய்ப்பிருக்கு.

No comments:

Post a Comment