Friday, 10 February 2017

13. ஏன் இப்படி நடக்குது?

13. ஏன் இப்படி நடக்குது?
கண்ணைக்கட்டி காட்டில விட்டாப்போல ந்னு ஒரு சொலவடை உண்டு. ஏற்கெனெவே காட்டில திக்கு திசை தெரியாம அல்லாடணும். அதுல கண்களையும் கட்டி விட்டுட்டா என்ன கதி? நிறைய பயம், மன உளைச்சல், பதட்டம், இன்ன பிற.

முன்னே பின்னே தெரியாத இடத்துக்கு பயணம் செய்து இரவு நேரம் போய் சேர்ந்தா அப்படித்தான் இருக்கும். பெரிய நகரமா இருந்துட்டா பரவாயில்லே. ஒரு சின்ன க்ராமமா இருந்தா? அதுவும் பவர் கட் சமயத்துல? என்னென்னவோ தெரியாத சத்தம் எல்லாம் கேக்கும்! என்னதான் நம்மை வரவேத்தவர் நல்ல மெத்தை தலைகாணி கொடுத்திருந்தாலும் லேசுல தூக்கம் வராது!

அதுவே காலை பொழுது விடிஞ்ச பிறகு… அட! க்ராமம் இவ்வளோ ரம்மியமா இருக்கே! சிலு சிலுன்னு ஓடற ஓடை, தோப்புகள், பச்சை பசேல் வயல்கள்….. நேத்து இங்கேயா பயந்துக்கொண்டு இருந்தோம்? ஏன்?
ஒரே வித்தியாசம் - வெளிச்சம்.

இரவு வெளிச்சம் இல்லாம புரியாத பலதும் பயமுறுத்தியது. இப்ப என்ன இருக்கு என்ன நடக்குதுன்னு தெரியுது, அதனால பயமில்லை. எப்பவுமே அறிவுக்கு எட்டாதது பயமுறுத்தும்.

ஒத்தருக்கு ரொம்ப நாளா உடம்பு சரியில்லை. என்னென்னவோ டெஸ்ட் எல்லாம் செஞ்சு நிறைய ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை பாத்து…. குடும்ப டாக்டர் ரொம்ப கவலையா இருக்கார். கடைசில ஒரு ரிப்போர்ட் வருது. அதை பாத்துட்டு அப்பாடா! என்கிறார். என்னன்னு கேட்டா ஒண்ணுமில்லே, டிபிதான்கறார். என்ன டிபியான்னு அதிர்ச்சி அடைஞ்சா, “ஆமாம். இது இவ்வளோ நாள் என்னன்னு தெரியாம இருந்தது. இப்ப தெரிஞ்சுடுத்து. அதனால சரியான சிகிச்சை கொடுக்கலாம்.உடம்பு சரியாயிடும்!” என்கறார்!

என்ன பெரிய பிரச்சினையானாலும் அது என்னன்னு பிடிபடாத வரைதான் பிரச்சினை. அது பிடி பட்ட பிறகு அதை கையாள வழிகள் இருக்கும்.

நீங்க ஒரு கம்பனி நடத்தறீங்கன்னா அப்பப்ப சில முடிவுகள் எடுப்பீங்க. முடிவு எடுத்தா மட்டும் போறாது. சில சமயம் நீங்க எடுக்கற முடிவுகள் ஏன்னும் சிலருக்கு தெரியணும். எல்லா முடிவும் எல்லாருக்கும் எப்பவும் தெரியணும்னு இல்லை. யார் யாருக்கு எப்போ தெரியணுமோ அப்ப தெரியணும்.

உதாரணமா உங்க தொழிற்சாலையில ஒரு குறிப்பிட்ட சமாசாரத்தை தயார் செய்யறதை நிறுத்தப்போறீங்கன்னு வெச்சுக்கலாம். அது சரியா விற்கலை. அல்லது வேற ஒண்ணு அதை மார்கெட்ல இருந்து தள்ளப்போகுதுன்னு தகவல் கிடைச்சு இருக்கு. ஏதோ ஒரு காரணம். இதை சிலருக்காவது சொல்லி வைக்கணும் இல்லையா? இல்லைன்னா அதோட மூலப்பொருளை பர்சேஸ் டிபார்ட்மெண்ட் வாங்கிகிட்டே இருக்கும். சேல்ஸ் மக்கள் ஆர்டர் புக் பண்ணிகிட்டே இருக்கலாம். மெய்ண்டெனஸ் மக்கள் ஓரங்கட்ட போற/ விற்கப்போற மெஷினை மாஞ்சு மாஞ்சு பழுது பாத்துகிட்டு இருப்பாங்க. அனாவசியமான பொருட்களை வாங்கறதை தவிர்க்க, உற்பத்தி செய்யபோறதில்லை என்கிற பொருட்களை சப்ளை செய்யறதா ஒப்பந்தம் செய்யாம இருக்க, இதுக்கா ராப்பகலா இந்த மெஷினை சரி செஞ்சேன்னு பொறியாளர்கள் புலம்பாம இருக்க….. இவங்க எல்லாரையும் கூப்பிட்டு “தோ பாருங்க. இன்ன காரணத்துக்காக இத்தனாம் தேதிலேந்து இன்ன பொருளை உற்பத்தி செய்யறதை நிறுத்தப்போறோம்!” ந்னு சொல்லிடலாம். ஒவ்வொருத்தரும் இதனால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படலாம். அவங்களோட கஷ்டம் என்ன என்கிறது அவங்களோட நிலையில இருந்து பார்த்தாத்தானே தெரியும். உங்க சமூக விழிப்புணர்வை இதுக்கு செயலுக்கு கொண்டு வந்து ஆராய்ஞ்சு அதுக்கு தக்க நடவடிக்கை எடுக்கணும்.
எல்லாருக்கும் இனிமே டிடிஎஸ் பிடிக்கச்சொல்லி அரசு உத்தரவு; இனிமே எல்லாருக்கும் வங்கி பரிவர்த்தனை மூலம்தான் சம்பளம் கொடுக்கணும்ன்னு அரசு உத்தரவு - இந்த ரீதியில எடுக்கற முடிவுகளைப்பத்தி தெரிய வேண்டியவங்க எல்லாருக்கும் சொல்லிட்டா நல்லது. யாரும் அதிர்ச்சி அடைய மாட்டாங்க. அவங்களுக்கு தெரிவிக்காம அவங்களை பாதிக்கக்கூடிய விஷயம் எதுவும் நடக்காது என்கிறது அவங்களுக்கு பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரும். அது அவங்களுக்கு துன்பம் கொடுக்கும்ன்னாக்கூட அதை ஒத்துப்பாங்க.

சமீபத்தில 500, 1000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைக்கு விதிச்ச கட்டுப்பாடு ஒரு நல்ல உதாரணம். இந்த முடிவால எல்லாருமே கொஞ்சமாவது கஷ்டப்பட்டாங்க. இருந்தாலும் அரசுக்கு எதிரா வழக்கம் போல சத்தம் போடறவங்களைத்தவிர பெரும்பாலும் யாரும் எதிர்ப்பு காட்டலை. இதே மாதிரி முடிவை வெனிசுலாவில திடுதிப்புன்னு அறிவிச்சதுல மக்கள் புரட்சி எல்லாம் ஏற்பட்டு முடிவை வாபஸ் வாங்க வேண்டி இருந்தது.

ஒரு நிறுவனத்தில வேலை பார்க்கிறவங்களை சொன்னதை செய்; கேள்வி கேக்காதே என்கிற முறையில் அணுகாம அவங்களுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுக்கறதை அவங்க வரவேற்பாங்க.

நாம் ஒரு வேளை முந்தின வேலையில் சட்டு புட்டுன்னு திடீர் முடிவுகள் எல்லாம் எடுத்து மேலாள வேண்டியதா இருந்திருக்கலாம். அப்ப அது வெற்றியடைஞ்சு இருக்கலாம். ஆனா இப்பவும் அதே மாதிரி மேலாண்மை பொருந்துமான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க!
முன்னே எடுத்த முடிவுகள் ஒரு ரிஃப்லக்ஸ்ல எடுத்து இருக்கலாம். இப்ப அதயே யோசிச்சு புத்தி பூர்வமா எடுக்க முயற்சி செய்யுங்க. கொஞ்சம் இடைவெளி கொடுத்து யோசிக்க நாம இன்னும் கொஞ்ச நாட்களில எடுக்க வேண்டிய முடிவுகள் இப்பவே புரிய ஆரம்பிக்கும். யார் யார் பாதிக்கப்படுவார்கள்? யார் யார் வேலை எப்படி எப்படி மாறணும்? அதுக்கு இப்பவே என்ன செய்யணும். அவங்களுக்கு இதை எப்ப தெரிவிக்கணும்? எவ்வளவு தெரிவிக்கணும்? அதுக்குன்னு தனியா ஒரு மீட்டிங் கூப்பிட்டு சொல்லணுமா? இல்லை ஒரு சர்குலர் போதுமா?


வேலை செய்யறவங்களுக்கு தன்னை எவ்வளவு தூரம் நம்பறாங்க, என்ன எதிர்பார்க்கிறாங்கன்னு புரிஞ்சா அவங்களோட வேலை இன்னும் சிறப்பா இருக்கும்.