Monday 13 February 2017

15. நீங்க ஏற்படுத்துகிற தாக்கம் உங்க நோக்கத்துக்கு பொருத்தமானதா?

15. நீங்க ஏற்படுத்துகிற தாக்கம் உங்க நோக்கத்துக்கு பொருத்தமானதா?

கம்பனி மீட்டிங்கல இருக்கோம். அடுத்ததா விவாதிக்க வேண்டியது என்னன்னா ஏன் சில வேலைகள் கால தாமதமா நடக்குதுன்னு கண்டு பிடிக்க வேண்டியது. அது சம்பந்தமா சிலர் சிலதை பேசின பிறகு என்ன விஷயம்ன்னு புரியறது. வேலை சம்பந்தப்பட்ட ஒருத்தர்தான் நேரத்துக்கு தன் பங்கை முடிக்காம இருக்கார். எல்லாரும் இப்ப செம டென்ஷன்ல இருக்காங்க. எல்லாரையும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வைக்கலாம்ன்னு “சித்ரா, உங்க மைக்ரேந்தான் குற்றவாளி போலிருக்கு!” ந்னு சொல்லறீங்க. ஆனா யாரும் சிரிக்கலை. சித்ரா அழுதுகிட்டே வெளியே போயிடறாங்க! அட! நாம் எதிர்பார்த்தது இது இல்லையே! நான் ஜோக்காத்தான் சொன்னேன் என்கறீங்க! ஆனா சேதம் நடந்துமுடிஞ்சாச்சு! உங்க நோக்கம் சரிதான். ஆனா தாக்கம் வேறயா போயிடுத்தே! யார் இந்த நேரத்துல எப்படி எடுத்துப்பாங்கன்னு சரியா கணிக்கலை!

அதே போல எப்பவும் ரிசல்ட் ரிசல்ட்ன்னு ஜபிச்சுகிட்டே வேலை பாக்கிற, வேலை வாங்குகிற மேனேஜர் இருக்கலாம். இன்னும் இன்னும் அதிக ரிசல்ட் என்கிறதே இவங்களோட குறிக்கோளா இருக்கும். எல்லாம் இவங்க சொல்ற படியே செய்யணும். ஏன் எதுக்குன்னு கேக்காதே! சொல்லறதை செய்! அப்படி செய்யறதுதான் நல்ல ரிசல்டை தரும்ன்னு தீவிரமா நம்பறாங்க. கொஞ்ச நாள் கழிச்சு பாத்தா எல்லாரும் இவங்க மேல செம கடுப்புல இருப்பாங்க.

இவங்க நினைச்சது தான் பல வருஷமா கண்டு பிடிச்ச வழில வேலை செஞ்சு இதான் சுலபம்ன்னு எல்லாரும் கத்துக்கட்டுமே என்கிறது. மத்தவங்களுக்கோ ஒண்ணுமே சொல்லாம இப்படித்தான் செய்யணும்ன்னு துன்புறுத்தலாமான்னு தோணும்.

நிறைய மாமியார் மாட்டுப்பெண் சண்டை இப்படித்தான் ஆரம்பிக்கும். இப்பல்லாம் எல்லாரும் தனித்தனிக்குடும்பமா போயிடறதால அதிகமா இந்த பிரச்சினையை பார்க்க முடியறதில்லைமாமியார் தன்னோட நீண்ட அனுபவத்தில இப்படி இப்படி செய்யறதுதான் சரின்னு கண்டு பிடிச்சிருப்பாங்க. அது வேலையை இன்னும் சுளுவா ஆக்கறதோ, சீக்கிரம் முடிக்கறதோ அல்லது பாதுகாப்பானதோ ஏதோ ஒரு காரணம் இருக்கும். சில சமயம் அந்த காரணம் அவங்களுக்கே தெரியுமான்னு கூட சொல்ல முடியாது. மாட்டுப்பெண் மாடர்ன். அவங்க ஒண்ணு அந்த வேலையையே செஞ்சு இருக்க மாட்டாங்க. அல்லது இப்ப செய்ன்னு சொன்னா எப்படி செய்யறதுன்னு அவங்களுக்கே ஒரு கற்பனை இருக்கும்! மாமியார் இப்படித்தான் செய்யணும்ன்னு சொன்னா ‘நீ என்ன எனக்கு சொல்லறது?” ந்னு ஒரு ஈகோ பிரச்சினை ஆரம்பிக்கும்

இந்த நோக்கம் - தாக்கம் பொருத்தம் சரியா வரதுக்கு சுய விழிப்புணர்வு, சுய மேலாண்மை, சமூக விழிப்புணர்வு எல்லாம் அவசியம்ன்னு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எதையும் சொல்லும் முன்னே கொஞ்சமே கொஞ்ச நேரம் எடுத்துண்டு நாம் என்ன சொல்லப்போறோம், அதோட தாக்கம் என்னவா இருக்கும்ன்னு ஒரு அவசர ஆலோசனை செஞ்சா போதும்!

அடிக்கடி இந்த தப்பை செஞ்சு மாட்டிக்கிற ஆசாமியா நீங்க? ரைட்! ஒரு காகிதத்தை எடுங்க. எழுத ஆரம்பியுங்க. என்ன நடந்தது, உங்க நோக்கம் என்ன. உங்க செயல் என்ன, தாக்கம் என்ன? தாக்கம் என்கிறது மத்தவங்க அதை எப்படி எடுத்துக்கிட்டாங்க என்பது.
அடுத்து நிலமையில் உங்களுக்கு என்ன புரியலை? இப்படி சேதம் ஏற்பட்ட பிறகு புரியறது என்ன? எதை சரியா கவனிக்காம விட்டுட்டோம். (சித்ரா கண்ணுல ஏற்கெனெவே கண்ணீர் தளும்பிகிட்டு இருந்தது) நாம இதுலேந்து நம்மைப்பத்தியும் மத்தவங்களைப்பத்தியும் புரிஞ்சு கொண்டது என்ன? வேற எந்த மாதிரி செஞ்சு இருந்தா இந்த நோக்கம் - தாக்கம் பொருத்தமா இருந்திருக்கும்? இந்த கேள்விக்கு விடை தெரியலைன்னா வேற யாரான அனுபவஸ்தர்கிட்ட கேளுங்க.

சித்ரா சமாசாரத்தில அவங்க ஏற்கெனெவே குற்ற உணர்ச்சியோட இருந்தாங்க. ஜோக்கடிக்கற நேரம் அது இல்லை. கொஞ்சம் கவனமா இருங்கன்னு சொல்லிட்டு அடுத்த விஷயத்துக்கு போயிருக்கலாம்.

மாமியார்கள் ‘இந்த வேலையை இப்படி செஞ்சா இன்ன லாபம்’ ந்னு சொன்னா மாட்டுப்பெண் எடுத்துக்கிற விதமே வேறயா இருக்கும்! ஆனா நிறைய மாமியார்களுக்கு இது தெரியறதில்லையே!

No comments:

Post a Comment