Tuesday 14 February 2017

16. முறியும் பேச்சு வார்த்தையை சரி செய்ய...

16. முறியும் பேச்சு வார்த்தையை சரி செய்ய...

இப்பல்லாம் விமானங்கள் காத்தில ஓடாம காத்தோடிகிட்டு இருக்கும் போல இருக்கு! சில நாடுகளில சர்வ சாதாரணமா மக்கள் விமானங்களில் பறக்கறதால எப்பவும் பிரச்சினை இருக்கும். தொழில் போட்டி இருக்கறதால டிக்கட் வாங்கிட்டு அதை கடைசி நாள் ரத்து செய்யவும் செய்வாங்க. இதை எதிர்பார்த்து புள்ளிவிவரத்தை பாத்து இவ்வளோ சதவீதம் கான்சல் ஆகறதுன்னு சொல்லி அவ்வளோ அதிகமாவும் டிக்கெட் வித்துடுவாங்க. சரி, ஒரு வேளை அவ்வளோ கான்சலேஷன் வரலைன்னா?

இதுக்குன்னு இருக்கற பலியாடு ஏர்லைன் ஏஜெண்ட். இவரேதான் விமானம் பனி மூட்டத்தால் தாமதமா வருது; எஞ்சின் கோளாறால தாமதமா கிளம்பும் மாதிரி அசுப செய்திகளை எல்லாம் சொல்லவும் வேண்டியவர்! இப்படி செய்தி கேட்டதும் பத்து பேராவது போய் அவரை திட்டுவாங்க! “எனக்கு என்ன அவசரம் தெரியுமா? நீங்க பாட்டுக்கு அசால்டா இப்படி லேட்டாகும்ன்னு சொல்லறீங்க?” இவங்களை எல்லாம் சமாதானப்படுத்தி வேற புக்கிங், விலை குறைப்பு, இலவச ஓய்வறை, இலவச உணவு ந்னு எதையாவது செஞ்சு ஜனங்களை சமாதானப்படுத்தறதே இவரது தினசரி பொழைப்பு! பாவமா இருக்கில்லே?!

இந்த சமாதானப்படுத்தறது என்கிறது நம்ம தினசரி வாழ்க்கையில் கூட அடிக்கடி வரும். எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கும். திடீர்ன்னு சந்திராஷ்டமம் மாதிரி போறாத காலம் வந்தாச்சுன்னா கணவன் டிபனை குறை சொல்ல ஆரம்பிப்பார்!
என்னடி இது?
என்ன எது?
உப்புமாவில உப்பு கொஞ்சம் தூக்கலா இருக்கே?
அது உப்புமாதானே? உப்பு இருக்கத்தான் இருக்கும்!
கிண்டலா? உங்க அம்மா மாதிரியே பேசறியே!
என்ன என்ன? எங்க அம்மாவை இழுத்தாறது? நாங்க ஒண்ணும் சோத்துக்கு லாட்டரி அடிச்ச கும்பல் இல்லே!
அப்ப எங்க குடும்பம் சோத்துக்கு லாட்டரி அடிச்சதா சொல்லறியா?
நா ஏன் சொல்லணும்? அதான் சந்தியா சிரிச்சதே! போனாப்போறதுன்னு உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்.
அவ்ளோதான்! உப்பு கொஞ்சம் தூக்கல்ல ஆரம்பிச்சது கதை எங்கெங்கேயோ போகும்! பழைய உரசல்கள் திருப்பி மேலெழும். பழைய ரணங்கள் கிளரப்படும். அது வரை செஞ்ச சின்ன சின்ன தப்புகள் எல்லாம் பூதாகாரமா சித்தரிக்கப்படும். எல்லாம் சுத்தி சுத்தி வட்டத்தில திரும்ப வரும்! சாதாரணமா சொல்லில வராததெல்லாம் வரும். ஒத்தரை ஒத்தர் குறை சொல்லிக்கொண்டு…

இதுல யார் ரைட் யார் தப்பு; யார் இதை ஆரம்பிச்சது என்கிறதெல்லாம் விஷயம் இல்லை. யாரோ ஒத்தர் விட்டுக்கொடுக்கணும். சட்டுன்னு நிலமையை புரிஞ்சு கொண்டு இந்த ‘உரையாடலை’ ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்; அல்லது திசை திருப்பணும். தப்பு நம்ம மேல இல்லைன்னாலும் நமக்கு இப்ப வேண்டியது தீர்வா இல்லை யார் சரி என்கிற ஜட்ஜ்மெண்டா?
இப்ப எரிகிற நெருப்புல தண்ணியை ஊத்தி அணைக்கணும், அதுக்கு ஏதேனும் சொல்லணும். அது ‘சரி, விடு!’ என்கிற எளிசான வார்த்தைகளில் இருந்து ஆரம்பிச்சு விவரமான வேற ஏதாவும் இருக்கலாம்.

நம்மோட சுய விழிப்புணர்வால “என்னய்யாது? இந்த பிரச்சினை ஆரம்பிச்சதுல என் பங்கு என்ன? இப்ப என்ன செஞ்சு இதை வளத்துகிட்டு இருக்கேன்? ” ன்னு யோசிக்கணும். சுய மேலாண்மை சரியா இருந்தாத்தான் நம்மோட வழக்கமான கிண்டல் பதில்களை ஒதுக்கி வெச்சுட்டு சமாதான வழிக்கு போவோம். சமூக விழிப்புணர்வு மத்தவங்களோட உணர்வுகள் என்ன? இப்ப எதை வெளிப்படுத்தி இருக்காங்க; என்ன செஞ்சா இப்ப இதை முடிவுக்கு கொண்டு வரலாம்ன்னு சொல்லும். இரண்டு பக்கத்தையும் பார்த்தாத்தான் ஏன் எங்கே உரையாடல் திசை திரும்பித்துன்னு புரியும். அதே சமயம் என்ன மாதிரி எவ்வளோ தண்ணியை நெருப்பில ஊத்தணும்ன்னு புரியும். எல்லாமே அவசியம்.

ரொம்ப வருஷங்களுக்கு முன்னே எங்க நகர் பகுதி மக்களோட கூடுதல் நடந்தது. ஓரிரண்டு வருஷங்கள் உருப்படியா நடந்தது. ஒரு மீட்டிங் போது நகர் பகுதி தெரு ரொம்ப மோசமா இருக்குன்னும் அதுக்கு ஏதாவது செய்யணும்ன்னும் பேச்சு வந்தது. ஆரம்ப உற்சாகமா? நேரா கமிஷ்னரை இப்ப போய் பார்க்கலாம்ன்னு கிளம்பிட்டோம். அவரோட வீடு பக்கத்துலதான் என்கிறதால் ஒரு கும்பலே கிளம்பிடுத்து. எல்லாரும் போய் அவர் வீடு எதிரே நின்னோம். வெளியே இருந்த ஆள்கிட்ட **** நகர வாசிகள் வந்திருக்கோம்; கொஞ்சம் பேசணும்ன்னு சொல்லி அனுப்பினோம். அவரும் உள்ளே வரச்சொன்னார். ஆரம்பத்தில எல்லா சுமுகமாத்தான் போச்சு. ஆனா அவரோட பதில்களில யாருக்கும் திருப்தி இல்லை. அப்படி பார்க்கலாம்ன்னு சொல்லி இருந்தாக்கூட அப்போதைக்கு முடிஞ்சிருக்கும்.
ரோடா? இப்பத்தானே போட்டது?
ஆமாம். அவ்ளோ மோசமா போட்டு இருக்காங்க.
ஊர் முழுக்க எல்லா ரோடும் அப்படித்தான் இருக்கும். ஒண்ணும் பண்ண முடியாது. இப்போதைக்கு ரோடு போட பணம் சாங்க்‌ஷன் இல்லே!
நாங்க எவ்ளோ நாளா கேட்டுக்கிட்டு இருக்கோம். *** இடத்தில் போய் ரோடு போட்டு இருக்கீங்க? எங்க ஏரியாவில போடலை! - இப்படி ஒரு இளைஞர் சூடா ஆரம்பிக்க அவர் பொறுமையும் போயிடுத்து.
ஏன்? அங்க ரோடு போடறப்ப நீங்க எல்லாரும் வந்து மறிக்க வேண்டியதுதானே?

சீக்கிரமே உரையாடல் சரியான திசையில் போகலைன்னு புரிஞ்சு கொண்டு நாங்க எழுந்துட்டோம். எல்லாரும் வெளியே போகும் போது ஒரு கம்பனி ஆசாமி அவர்கிட்ட “எல்லாருக்கும் அவரவர் பிரச்சினைகள் நிறைய இருக்கு. உங்களுக்கும்; எங்களுக்கும்! இன்னொரு முறை சந்திச்சு இது பத்தி பேசலாம்!” ந்னு சொல்லி கைகுலுக்கிட்டு கிளம்பினார்!
எனக்கு ஆச்சரியமா இருந்தது. வெளியே வந்த பிறகு அவர்கிட்ட விசாரிச்சேன். அவர் சொன்னார் “ அவர் ஏடா கூடமா பேச ஆரம்பிச்சுட்டார். சரிதான். அவருக்கு அரசியல்வாதி ப்ரெஷர்; வேற இடத்துல ரோடு போட்டுட்டார். அது முடிஞ்சு போயாச்சு. இப்ப பேச்சு வார்த்தை தோல்விதான். ஆனா எதிர்காலத்தில இதை திருப்பி பேச ஒரு வாய்ப்பை வைத்துக்கொண்டுதான் நாம மீட்டிங்க்லேந்து எழுந்துக்கணும். அதான் மேனேஜ்மெண்ட்!”
இதான் எரிகிற நெருப்புல எண்னையை ஊத்தாம தண்ணியை ஊத்தறது என்கறது!
இது இரண்டு தரப்புக்கும் ஏதோ ஒரு பொதுவானதை முன்னிருத்தி முடியணும். சொல்கிறதுல எந்த உணர்ச்சியும் பிரதிபலிக்கக்கூடாது. கோப தாபங்கள் அறவே கூடாது!
இப்படி செய்யும்போது நமக்கு பாதகமா விஷயங்கள் போகிறபோது கூட பேச்சு வார்த்தைக்கான வாய்ப்பு திறந்தே இருக்கும். விஷயம் ரொம்ப சீரியஸா போய் சரி செய்ய முடியாத அளவு முறிவு ஏற்படும் முன்னே சரி செய்ய செயல் ஆற்றணும். பயிற்சியும் விழிப்புணர்வும் இதை வெற்றிகரமா ஆக்கும்.


No comments:

Post a Comment