Friday, 3 February 2017

9. மாற்ற முடியாததை தவிர்க்காதீர்கள்!

9. மாற்ற முடியாததை தவிர்க்காதீர்கள்!

ஒரு அலுவலகத்தில வேலை செய்யறீங்க. உங்களுக்கும் சேகருக்கும் ஏழாம் பொருத்தம். உங்ககிட்ட ஏதாவது மந்திரக்கோல் இருந்தா சூ மந்த்ராகாளி! இந்த ஆசாமியை வேற டிபார்ட்மெண்டுக்கு மாத்துன்னு மாத்தி இருப்பீங்க. ஹும்! அப்படி எந்த மந்திரக்கோலும் இல்லாததால செய்ய முடியலை. கொடுமை என்னன்னா இப்ப உங்க மேலதிகாரி கூப்பிட்டு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு வேலையை செஞ்சு முடிக்கச்சொல்லி இருக்கார். சேகர் வந்து நீங்க காண்டீனுக்கு சாப்பிடப்போறப்ப நானும் வரட்டுமா? நாம் செய்ய வேண்டியதை எல்லாம் தீர்மானிக்கலாம்னு கேட்டார். நீங்க ஏன் முடியாது என்கிறதுக்கு ஆயிரம் காரணங்களை தேடி லட்சம் காரணங்களை கண்டு பிடிச்சு அவர்கிட்ட ஒண்ணை சொல்லிட்டீங்க. அவரும் சரின்னுட்டு போயிட்டார்.

என்ன இப்ப? ஆரம்பிச்ச இடத்திலேயேத்தான் இருக்கீங்க. வேலை அப்படியேத்தான் இருக்கு. ரெண்டு பேரும் இணைஞ்சு எப்படி வேலை செய்யறதுன்னு இன்னும் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு!

இந்த மாதிரி மாட்டிக்கறப்பத்தான் உங்களோட உறவு மேலாண்மை திறமை அதிகமா தேவைப்படுது! இந்த ஆசாமியோட எந்த உறவும் வேணாம்ன்னுதான் நினைச்சீங்க. இருந்தாலும் மேலதிகாரிகள் அவங்களோட வானளாவிய அதிகாரம் அறிவு எல்லாத்தையும் பயன்படுத்தி உங்க ரெண்டு பேரையும் ஒரு டீம் ஆக்கிட்டாங்க. இப்ப நீங்க வேலையை விட்டு விலகறதா முடிவு பண்ணாலொழிய சேகரோட சேர்ந்து வேலை செஞ்சுதான் ஆகணும். என்ன செய்யலாம்?

முதல்ல செய்ய வேண்டியது இந்த வேலையையோ சேகரையோ தவிர்க்கப்பார்க்காதீங்க! நிர்பந்தத்தை ஒத்துக்கொண்டு மேலே ஆக வேண்டியதைப் பாருங்க.

இதுக்கு உங்க உணர்ச்சிகளை உன்னிப்பா கவனிக்க வேண்டி வரும். அவற்றை கையாளுவதிலேயும். இதுல நீங்க தனியா ஈடுபடலை என்கிறதால சமூக விழிப்புணர்வும் அவசியம். சமூக மேலாண்மையும் அவசியமே! சேகர் இடத்தில உங்களை வெச்சுப்பாருங்க. அவரை சந்திச்சு உட்கார்ந்து பேசுங்க. இந்த வேலையில அவர் என்னென்னெ செய்ய முடியும்; நீங்க என்ன செய்ய முடியும்; மீதம் இருந்தா அதை எப்படி செய்யறது; செயல்திட்டம் என்ன? எல்லாத்தையுமே திட்டமிடுங்க. இப்படி பேசும் போது அவரோட உடல்மொழி என்ன சொல்லுது? கவனியுங்க. உங்களுக்கு அவரை பிடிக்காது, சரி. அவருக்கும் உங்களை பிடிக்காம இருக்கலாம்! அதை நினைச்சு பாத்து இருக்கீங்களா? இது ஒரு சுகமான அனுபவமா இருக்காதுதான். இருந்தாலும் வேலை செய்ய ஒரு உறவு ஏற்படட்டும்!

உங்களை எனக்குப்பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது இல்லை. அது அவருக்கும் அனேகமா தெரிஞ்சே இருக்கலாம்! ஆனா நான் என் பங்கை மத்த வேலைகளோட சேர்த்து தனியா செய்ய விரும்பறேன்னு சொல்லறதுல தப்பில்லை. அவ்வப்போது கலந்தாலோசித்து வேலை சரியா நடக்கிறதை உறுதி செய்துக்க திட்டம் போடலாம்.

நீங்க சொல்லறதுக்கு எல்லாம் சேகர் ஒப்புக்கொண்டா சரி. இல்லைன்னா அவர் வழியை சொல்லட்டும் நமக்கு எப்படி தோது படுதுன்னு பார்ப்போம். மேலும் சுய விழிப்புணர்வையும் சமூக மேலாண்மையையும் செயலுக்கு கொண்டு வந்து ஏதோ ஒரு வேலை செய்யக்கூடிய திட்டத்தை ரெண்டு பேரும் ஒத்துக்கணும்.

சரி, வேலை துவங்கியாச்சு. நடுவில அனேகமா பிரச்சினைகள் வந்து உங்களை சலிப்படைய வைக்கலாம். பிரச்சினைகள் ஏன் வந்தன? நமக்கு சலிப்பு ஏன் வந்தது? அடுத்து நம்மை நாமே மேலாளுவது பத்தி யோசிங்க. சேகரோட அடுத்து சந்திக்கும் போது வேலையின் குறிக்கோளை இன்னொரு தரம் நினைவூட்டிக்கொள்ளுங்க!

வேலை ஒரு வழியா முடிஞ்சப்பறம் ரெண்டு பேரும் சேர்ந்து எதை சாதிச்சீங்க என்பதை ஒப்புக்கொள்ள ஒரு வழியை கண்டுபிடிங்க. யார் கண்டா? வேலையை சேர்ந்து முடிச்ச பின்னே உங்க ரெண்டு பேருக்கு இடையே ஒரு நல்ல உறவு கூட ஏற்படலாம்!