Wednesday, 15 February 2017

17. சிக்கலான உரையாடலை சமாளிக்க…

17. சிக்கலான உரையாடலை சமாளிக்க….
பதவி உயர்வுக்கு ஏன் என்னை புறக்கணிச்சீங்க?”
உங்களுக்கு அடுத்த படியா பதவில இருக்கறவர் பதவி ஓய்வு பெறப்போறார். அந்த இடத்துக்கு யாரை தேர்ந்தெடுக்கறது? அடுத்து இருக்கறவங்கள்ல இரண்டு பேர் வரலாம்.
ஒண்ணு மாலதி. இரண்டு சுசித்ரா.
காலியாகப்போற பதவிக்கு உங்க தேர்வு சுசித்ரா. இந்த தேர்வுக்கு சிலரை கூப்பிட்டு கலந்தாலோசிச்சோம். நாம அதிகார பூர்வமா அறிவிக்கும் முன்னே, சுசித்ரா, மாலதிகிட்ட பேசும் முன்னே யாரோ விஷயத்தை கசியவிட்டாங்க போலிருக்கு. இப்ப மாலதி கண்ணை கசக்கிகிட்டு வந்து நிக்கறாங்க. குரல்ல ஒரு சின்ன நடுக்கம். மனசு புண் பட்டா மாதிரி ஒரு பாவனை.

மாலதி நல்லா வேலை செய்யறவர்தான். ஆனா பதவி உயர்வுக்கு இன்னும் தயார் ஆகலை. இதை அவங்ககிட்ட சொல்லறதுதான் இப்ப பிரச்சினை. இதால ஏற்படும் விளைவை அப்புறம் பாத்துக்கலாம். இப்ப நாம பங்கெடுக்க வேண்டிய உரையாடல் சிக்கலா இருக்கப்போறது! இந்த சிக்கலான உரையாடல்கள் எல்லாம் எப்போதாவது வரத்தான் வரும். அதை எல்லாம் அமைதியா திறமையோட கையாள முடியும், முடியணும். இவற்றை எதிர்கொள்ளாம விட்டுட்டு ஓடிப்போக முடியாது. உசாநு இருந்தா இதெல்லாம் வராம இருக்குமோ? இல்லை; வரும். ஆனா தைரியமா திறமையோட உறவை பாதிக்காம எதிர் கொள்ள முடியும்.

செய்ய வேண்டிய சிலதை பார்க்கலாமா?
1, ஏதேனும் ஒத்துப்போகிற விஷயத்தோட ஆரம்பிங்க.
நம்ம உரையாடல் கருத்து வித்தியாசத்தோடத்தான் முடியப்போறதுன்னு தெரிஞ்சா, உரையாடலை நாம் ஒத்துப்போகிற விஷயத்தோட ஆரம்பிங்க. அது இப்ப உக்காந்து விவாதிக்கலாம் என்கிறதாக்கூட இருக்கலாம். அல்லது பொதுவான ஒரு இலக்கு. உதாரணமா, “மாலதி, உங்க திறமையை நான் மதிக்கிறேன் என்கிறதை முதல்ல சொல்லிடறேன். விஷயத்தை நானே உங்ககிட்ட சொல்லும் முன்னேயே யாரோ சொல்லிட்டது துரத்ருஷ்டம். போகட்டும்; இந்த சமயத்தில இதைப்பத்தி உங்களுக்கு தெளிவு படித்திடலாம்ன்னு தோணறது. இதுல உங்க கருத்துக்களையும் கேட்க எனக்கு விருப்பம்.”

2. அவங்களோட தரப்பை புரிஞ்சுக்க உதவி செய்யும்படி கேளுங்க.
முடிவு வேற மாதிரி போனது கூட பலருக்கும் கஷ்டமா இருக்காது. யாரான தன் தரப்ப, குறையை கேட்கணும்ன்னு தோணும். அதை காது கொடுத்து கேட்டுட்டாக்கூட போதும் சிலர் சமாதானமாகிடுவாங்க. கேட்க ரெடி இல்லைன்னா அவங்களோட விரக்தி இன்னும் அதிகமாயிடும். அதுக்கு முன்னே நாம முந்திண்டு கேட்க ரெடியா உங்க தரப்பை சொல்லுங்க என்கறது நல்லது. நாம நம்மோட உணர்ச்சிகளை சரிப்பண்ணிக்கலாம் ஆனா இப்ப கவனம் மத்தவங்களை புரிஞ்சுக்கறதுல இருக்கணும். “மாலதி, பேச்சு முடியறதுக்குள்ள உங்க பார்வை எனக்குப்புரியணும்ன்னு ஆசைப்படறேன். அதுக்கு நீங்க மனம் திறந்து பேசணும்.” ந்னு சொன்னா நாம அவங்களைப்பத்தி அக்கறை காட்டறோம்; அவங்களைப்பத்தி அதிகமா தெரிஞ்சுக்க விரும்பறோம்ன்னு அவங்களுக்கு புரியும். இதனால் உறவு மேம்படும்.

3. திருப்பித்தாக்க தோணும் அந்த எண்ணத்தை ஒழிங்க!
காது கொடுத்து கேட்கிறது என்கிறது உள்ளே வர விஷயத்துக்கான செயல். பேச்சு என்கிறது வெளியே போகிறதுக்கான செயல். இரண்டும் ஒரே சமயத்தில் சரியா நடக்காது. அதனால உடனடியா சாட்டையடி பதில் கொடுக்கத்தோணினாலும், கொஞ்சம் அதை அடக்கிட்டு காது கொடுத்து கேட்கற காரியத்தை பாருங்க! இப்ப மாலதி எதிர்பார்த்துக்கொண்டு இருந்த பதவி உயர்வு கைதட்டிப்போய் அதப்பத்தி வேற யாரோ சொல்லக்கேட்டு நொந்து போயிருக்காங்க. உறவுகள் தொடர்ந்து நல்லபடியா இருக்கணும்ன்னா இப்ப நாம நிதானமா இருந்துகிட்டு அவங்க சொல்லறதை கேட்டுக்கணும். அவங்களோட ஏமாற்றம் / அதிர்ச்சியை புரிஞ்சுக்கணும். நம்மை நாமே தற்காத்துக்கறதோ அல்லது ‘அதெப்படி ந்யூஸ் போச்சு? யார் லீக் பண்ணாங்க?’ ந்னு பொங்கறதோ இப்போதைக்கு வேணாம்.

4. மத்தவங்க நம்மை புரிஞ்சுக்க உதவி செய்யுங்க!
பூடகமா சொல்லவோ, சுத்தி வளைச்சு ஜாங்க்ரி பிழியறதோ வேணாம். நேரடியா தெளிவா இந்த தேர்வு விஷயத்தில உங்க எண்ண ஓட்டம் எப்படி இருந்தது, ஏன் என்கிறதை சொல்லிடலாம். ஏன் தான் தேர்வு செய்யப்படலை என்கறதை தெரிஞ்சுக்கறது அவங்களுக்கும் நல்லது. குறைகளை நிவர்த்தி செய்துக்கலாம், இல்லையா? இன்ன சூழ்நிலை இருக்கறதால, அடுத்து வரவருக்கு இந்த காலகட்டத்தில இன்ன இன்ன திறமை இருக்கணும் என்கிறதால மத்த திறமை இருந்தாலும் இப்போதைக்கு இவர் தேர்வாகலை என்கிறதை தெளிவா நிதானமா உறுதியா கொஞ்சம் ஆதுரத்தோட சொல்லிட்டா விஷயம் முடிஞ்சது. இப்படி சொல்ல முடியறதுதான் நமக்கு இங்கே தேவையான திறமை!

5. அவரவர் நிலையை சரியா தெளிவு படுத்திய பிறகு ஒத்தரோட இன்னொருத்தர் ஒத்துப்போகணும்ன்னு ஒண்ணுமில்லே. இருந்தாலும் உரையாடல் மேலே நகரணும். இதுக்கு யாரானா ஒத்தர் முயற்சிக்கணும். இந்த உதாரணத்தில நாமதான் அதை செய்யணும். நம்ம நிலை அவங்களுக்கு புரிஞ்சதும், அவங்க நிலையை நாம சரியா புரிஞ்சு கொண்டதும் உரையாடல்ல ஒண்ணும் முன்னேற்றம் ஏற்படாதுன்னு தெரிஞ்ச பிறகு அதை சரியா முடிச்சு வைக்கணும். எப்படியும் நாம்தான் முடிவெடுக்க வேண்டிய நபர்; முடிவு எடுத்தாச்சு. அது மாலதிக்கு உவப்பா இல்லைதான். ஆனா நாம அதுக்கு எதுவும் செய்ய முடியாது. இப்படி சொல்லலாம்: “நீங்க நேரடியா என்கிட்ட வந்து கேட்டதே நல்லது. இப்ப உங்க நிலைப்பாட்டை நான் புரிஞ்சுகிட்டேன். என் நிலைப்பாடு உங்களுக்கும் புரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கறேன். உங்க முன்னேற்றத்தில எனக்கு இன்னும் ஆர்வம் இருக்கு. அடுத்து வரும் பதவி உயர்வுக்கான திறமைகளை வளர்க்க என்னால முடிஞ்ச உதவிகளை செய்யறேன். என்ன நினைக்கிறீங்க?”

6. தொடரவும்: இந்த மாதிரி சிக்கலான கசப்பான ஆனா முக்கியமான உரையாடல்கள் முடிஞ்ச பிறகும் கொஞ்சம் பின் தொடர வேண்டிய தேவை இருக்கு. கசப்பு அவ்ளோ சீக்கிரம் மறைஞ்சு போகாது. அவங்க எப்படி நடந்துக்கறாங்க, இதனால என்ன பாதிப்புன்னு தொடர்ந்து கவனிக்கணும். உறவு என்பது இரண்டு தரப்பை சார்ந்தது என்கிறதால நம்ம தரப்பை சரியா ஸ்மூத்தா வெச்சுக்கலாம். அவ்வப்போ அவங்களை சந்திச்சு அவங்க திறமைகள் வளர உதவினா நாம நிஜமாகவே அவங்க முன்னேறதுல ஆர்வம் காட்டறோம்ன்னு நம்புவாங்க.


ஒரு வேளை எதுவும் சரியா நடக்கலேன்னா போகட்டும். நாம் தீர்மானித்தபடி மேலே நகர வேண்டியதுதான். நம்மால முடிஞ்சதை செஞ்சாச்சு. அந்த வேலையை கவனிக்க சரியான நபரை தேர்ந்தெடுத்து வேலைய நடத்த வேண்டிய பொறுப்பு நம்மோடது. இதை சரியா அவங்க புரிஞ்சுக்கலைன்னா ஒண்ணும் செய்ய முடியாது. கர்ட் அன் ரைட்டா இப்படி இருக்கறதால சில சமயம் ஆச்சரியமா உறவு வலுப்படக்கூட செய்யும்!